Published : 05 Nov 2017 10:31 AM
Last Updated : 05 Nov 2017 10:31 AM
அ
ஞ்சலிக் கூட்டங்கள் பெரும்பாலும் சம்பிரதாயமானவையாக ஆகிவிட்டன. இந்தச் சூழலில், சமீபத்தில் மறைந்த மேலாண்மை பொன்னுச்சாமிக்கு கோவையில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம்
இந்தச் சம்பிரதாயத்தையும் மாற்றிப்போட்டது.
‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்’ ஏற்பாடு செய்த திடீர் அஞ்சலிக் கூட்டம்தான் என்றாலும்கூட கட்சி வேறுபாடுகள், இலக்கிய இஸங்கள் கடந்து ‘ஓம்சக்தி’ இதழ் பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன், எழுத்தாளர்கள் சூர்யகாந்தன், சி.ஆர்.ரவீந்திரன், ப.பா.ரமணி, இளஞ்சேரல், கவிஞர் உமாமகேஸ்வரி என பலரும் கலந்து கொண்ட நிகழ்வு. கோவைக்கும் மேலாண்மைக்குமான நெருக்கம், அவரின் கதைகள் தந்த ஆற்றல், ‘அரும்பு’, ‘சிபிகள்’, ‘சுயரூபம்’ என அவரது சிறுகதைகள் கொடுத்த ஆக்கபூர்வமான கலைத்தன்மை, எளியவர்களுக்கும் வறியவர்களுக்குமாகப் பேசிய அவரின் கதறல் குரல் போன்றவற்றைப் பல எழுத்தாளர்களும் நினைவுகூர்ந்து பேசினாலும் பெ.சிதம்பரநாதன் பேச்சில் அத்தனை பேருமே கரைந்துபோனார்கள்.
கடந்த தீபாவளிக்காகப் பல்வேறு இதழ்களும் மலர் தயாரித்துக்கொண்டிருந்த நேரம். சிதம்பரநாதன் பொறுப்பில் உள்ள ‘ஓம்சக்தி’ இதழும் மலர் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டது. அதற்காக, மேலாண்மை பொன்னுச்சாமியிடமும் ஒரு கதை கேட்டிருக்கிறார் சிதம்பரநாதன். “நான் என் மகன் வீட்டில் உடல்நலம் குன்றிப் படுத்திருக்கிறேன். என்னால் எழுதவே முடியாது!” என்றிருக்கிறார் மேலாண்மை. “இந்த மலரில் உங்கள் கதை இடம் பெற்றே ஆக வேண்டும். எப்படியாவது முயற்சி செய்யுங்கள்!” என இவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பவும் தொலைபேசி அழைப்பு. அப்போதும் மேலாண்மை ஒரே பதிலைச் சொல்லியிருக்கிறார். “அப்படின்னா எழுதவே முடியாது. கதை அனுப்ப மாட்டேன்கறீங்களா?” என்று கேட்டிருக்கிறார் சிதம்பரநாதன். பதிலுக்கு மேலாண்மை, “நான் எழுத முடியலைன்னுதான் சொன்னேன். பேச முடியலைன்னு சொல்லலையே. யாராவது நான் கதை சொல்லச் சொல்ல எழுதுவார்களா?” என்றிருக்கிறார். உடனே சிதம்பரநாதன், “நீங்க குடியிருக்கிற இடத்துலயே தமிழ் எழுதத் தெரிஞ்ச ஸ்கூல் பையனைக் கூப்பிடுங்க. அவனுக்கு ஒரு ஆயிரமோ, ஆயிரத்தி ஐநூறோ நாங்க கொடுத்திடறோம். அவனை எழுதச் சொல்லி, அதை வாங்கி அனுப்புங்க போதும்!” என்றிருக்கிறார். சில நாட்கள் கடந்து திரும்பவும் இருவருக்கும் தொலைபேசி உரையாடல்.
“எப்படியோ ஒரு பையனைப் பிடிச்சு எழுதிட்டேன். அதை கவர்ல போட்டு கூரியர்ல போட முடியாம படுக்கையில் இருக்கிறேன்!” என்றிருக்கிறார் மேலாண்மை.
“திரும்ப ஒரு பையனைக் கூப்பிடுங்க. கூரியர் செலவுடன் சேர்த்து அந்தப் பையனுக்கும் நூறு ரூபா கொடுங்க. அவன் அனுப்பிடுவான்!” என்றிருக்கிறார் சிதம்பரநாதன்.
கதை வந்து சேர்ந்தது.
மறுபடியும் ஒருநாள் மேலாண்மையிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
“கதையின் பிரதியை எம் மகன் படிச்சான். ‘ஏம்ப்பா ஒடம்புக்கு முடியாம உங்களை வருத்திக்கிறீங்க. தவிர, இந்தக் கதை உங்க கதை மாதிரியே இல்லை. இதை வெளியிடவே வேண்டாம்’ங்கறான். அதனால பிரசுரிக்காதீங்க!”
பதிலுக்கு சிதம்பரநாதன் சொல்கிறார்: “எங்களுக்கு வழக்கமான மேலாண்மை கதை வேண்டாம். மேலாண்மை பொன்னுச்சாமி பெயரில் ஒரு கதை வெளியிட வேண்டும். தடுக்காதீங்க!” என்று மேலாண்மையின் வாயை அடைத்துவிடுகிறார் சிதம்பரநாதன். பிறகு?
“அக்கதை ஓவியருக்குக் கொடுக்கப்பட்டு, அச்சுக்கும் சென்றது. பொதுவாக மலர் வெளிவந்து, கடைகளுக்குச் சென்று, வாசகர்களும் வாங்கி வாசித்த பிறகுதான் எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுப்பது வழக்கம். இதில் விதிவிலக்காக, புத்தகம் அச்சுக்குச் சென்ற தினமே, ஒரு குறிப்பிட்ட தொகையை மேலாண்மை பெயருக்குக் காசோலை போட்டு அனுப்பிவிட்டோம். அது அவர் கையில் கிடைத்ததும் ஒரு தொலைபேசி அழைப்பு. பொதுவாக, ‘என்ன ரொம்ப சின்ன தொகை போட்டிருக்கீங்க?’ன்னுதான் தமாஷாக அவர் கேட்பார். அன்றைக்கு, ‘எதுக்கு இத்தனை தொகை?’ன்னுதான் முதல்ல கேட்டார். ‘அது உங்களுக்கு இப்போதைக்கு மருந்துச் செலவுக்கும்!’ என்று சொன்னோம். அவர் உடைந்து, கரைந்துவிட்டார். அதுவே அவரது கடைசிக் கதையாகவும், அவருடன் பேசும் பேச்சாகவும், அவருக்கு அனுப்பும் கடைசித் தொகையாகவும் இருக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை!”
சிதம்பரநாதன் இதைச் சொல்லித் தழுதழுத்தபோது, அந்தக் கூட்டத்தில் பல விம்மல்கள், மற்றவர்களின் மூச்சுக்காற்றுடன் கரைந்திருந்தன.
-கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு:
velayuthan.kasu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT