Published : 05 Nov 2017 10:26 AM
Last Updated : 05 Nov 2017 10:26 AM

சமகாலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகள் ‘தி இந்து பிரைஸ்’ விருதுக்கான இறுதிப் பட்டியல்

மி

கச் சிறந்த இந்திய ஆங்கிலப் புனைவு எழுத்துக்கு ஆண்டுதோறும் ‘தி இந்து பிரைஸ்’ எனும் விருதை வழங்கிக் கவுரவிக்கிறது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். அந்த வகையில், 2017-ம் ஆண்டுக்கான விருதுக்கு, இறுதிப் பட்டியலில் உள்ள நூல்கள் தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அருந்ததி ராயின் ‘தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினெஸ்’, அனீஸ் சலீமின் ‘தி ஸ்மால் டவுன் ஸீ’, மீனா கந்தசாமியின் ‘வென் ஐ ஹிட் யூ: ஆர், எ போர்ட்ரைட் ஆஃப் த ரைட்டர் அஸ் எ யங் வைஃப்’, தீபக் உன்னிகிருஷ்ணனின் ‘டெம்பரரி பீப்பிள்’, பிரயாக் அக்பரின் ‘லைலா’ ஆகிய 5 புத்தகங்கள் இறுதிப் பட்டியலில் உள்ளன.

சிறுபான்மையினர் மீதான ஒடுக்குதல், நகர்மயமாக்கலால் தொலையும் பால்யம், பெண்கள் மீதான வன்முறை, அயலகத்தில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை, அந்நியர்கள் மீதான வெறுப்பு என இன்றைய இந்தியச் சமூகம் சந்திக்கிற பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும்படியாக இந்த நாவல்கள் உள்ளன.

தி மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினெஸ்

அருந்ததி ராயின், இரண்டாவது நாவல் இது. டெல்லியில் உள்ள கல்லறைத் தோட்டம் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட இந்த நாவல், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல் நிகழ்வுகள், மக்கள் எழுச்சி ஆகியவற்றைப் பதிவு செய்வதினூடே, சமூகத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளைப் பேசுகிறது.

தி ஸ்மால் டவுன் ஸீ

மலையாள மண்ணிலிருந்து ஆங்கிலத்தில் எழுதும் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான அனீஸ் சலீம் தன்னுடைய ‘வேனிட்டி பாக்’ நாவலுக்காக 2013-ல் ‘தி இந்து பிரைஸ்’ விருதை வென்றவர். இறுதிப் பட்டியலில் உள்ள தற்போதைய நாவல் கேரளக் கடற்கரையோரத்தில் காற்றில் கரைந்துபோன ஒரு தலைமுறை பால்யத்தைக் காட்சிப்படுத்து கிறது.

வென் ஐ ஹிட் யூ: ஆர், எ போர்ட்ரைட் ஆஃப் த ரைட்டர் அஸ் எ யங் வைஃப்

தென்னிந்தியாவில் உள்ள சாதிக்கொடுமை, வறுமை போன்றவற்றைப் பற்றித் தனது முதல் நாவலான ‘தி ஜிப்ஸி காடெ’ஸில் மீனா கந்தசாமி எழுதியிருந்தார். தற்போதைய நாவல், எழுத்தாளராக இருக்கும் மனைவியின் மீது கணவனால் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறை குறித்துப் பேசுகிறது

டெம்பரரி பீப்பிள்

‘அபுதாபி என்னை வளர்த்தது. நியூயார்க் என்னை உருவாக்கியது. சிகாகோ என்னை விடுதலை செய்தது. இருந்தும், நான் இப்போதுவரை இந்தியக் குடிமகனாக இருக்கிறேன்’ என்று சொல்லும் தீபக் உன்னிகிருஷ்னனின் முதல் படைப்பு, ஒரு சிறுகதைத் தொகுப்பு. ‘டெம்பரரி பீப்பிள்’ நாவல் இவரின் இரண்டாவது படைப்பு. பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் அவலநிலையைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல்.

லைலா

பிரயாக் அக்பருக்கு லைலா முதல் படைப்பு. இனம், மத, மொழி, பாலினச் சிறுபான்மையினர் மீது இன்று நம் தேசத்தில் வெறுப்பு காணப்படுகிறது. ‘மற்றவர்கள்’ எனும் ஒரு சாராரை, அந்நியர்களாகக் கருதி வெறுப்பதைப் பற்றி, இந்நாவல் பேசுகிறது. இவர், பிரபலப் பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது!

-ந.வினோத் குமார்,

தொடர்புக்கு:

vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x