Published : 26 Nov 2017 10:30 AM
Last Updated : 26 Nov 2017 10:30 AM
‘இ
ரண்டாம் உலகப் போரின் வருகையுடன், ஐரோப்பாவில் சிறைபிடிக்கப்பட்டிருந்த பல கண்கள் அமெரிக்க நாடுகள் வழங்கும் சுதந்திரத்தை நோக்கி நம்பிக்கையுடனோ விரக்தியுடனோ திரும்பின. அங்கு செல்வதற்குக் கப்பல் ஏறுவதற்கான முக்கியமான மையமாக ஆனது லிஸ்பன் நகரம். ஆனால் எல்லோராலும் லிஸ்பனுக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. ஆகவே, அகதிகளுக்கென கடினமான, சுற்றி வளைந்து செல்லும் ஒரு பாதை உதித்தது. பாரிஸிலிருந்து மார்ஸேஸ், மத்தியதரைக் கடலைத் தாண்டி ஓரான் நகரம், பின்னர் அங்கிருந்து ரயில் மூலமோ, மோட்டர் வாகனம் மூலமோ, நடந்தோ ஆப்பிரிக்காவின் விளிம்பைத் தாண்டி பிரெஞ்சு மொரொக்கோவுக்குச் செல்லவேண்டும். அங்கு அதிர்ஷ்டசாலிகள் பணத்தையோ செல்வாக்கையோ அதிர்ஷ்டத்தையோ கொண்டு அங்கிருந்து வெளியே செல்வதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்று லிஸ்பனுக்கு விரையவும் அங்கிருந்து புதிய உலகத்துக்குச் செல்லவும் முடியும். மற்றவர்களோ காஸாப்ளாங்காவில் காத்திருக்கின்றனர், காத்திருக்கின்றனர், காத்திருக்கின்றனர்.’
கடந்த 75 ஆண்டுகளாக அமெரிக்காவிலும் உலகின் பல பகுதிகளிலும் திரும்பத் திரும்பத் திரையிடப்பட்டுவரும் ‘காஸாப்ளாங்கா’ திரைப்படத்தின் டைட்டில்கள் ஆப்பிரிக்க வரைபடத்தின்மீது காட்டப்பட்ட பிறகு, ‘வாய்ஸ்-ஓவராக’ நமக்குக் கேட்கும் சொற்கள்தான் இவை. அமெரிக்கத் தம்பதிகளான ஜோன் அலிஸன்- முர்ரே பர்னெட் ஆகியோரால் எழுதப்பட்ட, மேடையேற்றப்படாத நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘காஸாப்ளாங்கா’ 1942 நவம்பர் 26-ம் தேதி நியூயார்க் நகரத்தில் முதன்முதலாகத் திரையிடப்பட்டது. ஹாலிவுட் தயாரிப்பு என்றாலும், அதன் டைட்டிலில் காட்டப்படும் முக்கிய மற்றும் துணை நடிகர்களில் கதாநாயகர் ரிக்காக நடிக்கும் ஹம்ஃப்ரே பொகார்ட் உள்ளிட்ட மூவர் மட்டுமே அமெரிக்கர்கள். அதில் ஒருவர் கறுப்பினத்தவர். கதாநாயகி இல்ஸா லுண்டாக நடித்த இங்ரிட் பெர்க்மன் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர்.
படத்தின் இயக்குநர் மைக்கேல் கர்டிஸ், ஹங்கேரியில் பிறந்த யூதர்; 1919-ல் சிறிது காலமே நீடித்ததும் பின்னர் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதுமான ஹங்கேரிய சோஷலிஸ அரசாங்கத்தின் புரட்சிகரக் கலைக் குழுவின் உறுப்பினராக இருந்து, தேசியமயமாக்கப்பட்ட சினிமாத் துறையை மேற்பார்வையிட்டுவந்தவர். செக்கோஸ்லவாகியாவில் நாஜி எதிர்ப்புத் தலைமறைவு இயக்கத்தின் தலைவர் விக்டராக நடித்த போல் ஹென்ரிட் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜெர்மானியர்; நாஜிகளை எதிர்த்ததன் காரணமாக அவரது சொத்துகள் முடக்கப்பட்டன. விக்டரைத் தேடி காஸாப்ளாங்காவுக்கு வரும் நாஜி ராணுவ அதிகாரியாக நடித்த கொன்ட்ராட் வெய்ட் பெர்லினைச் சேர்ந்த ஜெர்மானியர்; நாஜி எதிர்ப்பு ஜெர்மானியர்கள் இருவரைக் கொலை செய்துவிட்டு அவர்களிடமிருந்து காஸாப்ளாங்காவிலிருந்து நாஜிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஐரோப்பியப் பகுதிகளுக்கும் லிஸ்பனுக்கும் செல்வதற்கான இரண்டு அனுமதிச் சீட்டுகளைத் திருடிக் கொண்டுவரும் உகார்தோ பாத்திரத்தில் நடித்த பீட்ட்ர் லோர் ஆஸ்திரிய-ஹங்கேரியில் பிறந்த ஜெர்மானியர். அதே போல, ரிக்கின் கேளிக்கை விடுதியின் புரவலராக நடித்த ஹெல்முத் டாண்டைன் நாஜி சிறை முகாமில் சிறிது காலம் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மானியர். சூதாட்ட மேசைக்குப் பொறுப்பு வகிப்பவராக நடித்த மார்ஸல் டேலியோ, பரிசாரகராக நடித்த ஸக்கால், காஸாப்ளாங்கா பிக்பாக்கெட் திருடனாக நடித்த கர்ட் போய்ஸ் ஆகியோர் பிறப்பால் யூதர்கள். இவர்கள் எல்லோருமே நிஜ வாழ்க்கையில் நாஜிகளிடமிருந்து தப்பி வந்த அகதிகள்.
மொரொக்கோவின் தலைநகரான காஸாப்ளாங்காவில் கேளிக்கை விடுதியை நடத்திவரும் அமெரிக்கனான ரிக்கும் பாரிஸில் அவனைச் சந்திக்கும் இல்ஸாவும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால், போரும் பிரான்ஸில் நாஜி ஆக்கிரமிப்பும் ஏற்பட்ட பிறகு அவர்கள் பிரிய வேண்டியுள்ளது. இல்ஸா ஏற்கெனவே விக்டரைத் திருமணம் செய்துகொண்டவள். ஆனால், நாஜிகளால் விக்டர் கொல்லப்பட்டிருப்பான் என்று கருதி ரிக்கின் துணையை நாடியிருந்ததுடன் அவனை உண்மையாகக் காதலிக்கவும் செய்கிறாள். ஆனால், விக்டர் உயிருடன் இருப்பது தெரிய வந்ததுமே அவனுடன் காஸாப்ளாங்காவுக்குத் தப்பி வருகிறாள். தனது கேளிக்கை விடுதியில் அவர்கள் இருவரையும் ஒருசேரக் கண்டதும் ரிக் அதிர்ச்சியடைகிறான். இல்ஸா அவனிடம் உண்மையைச் சொல்கிறாள். ஆயினும் இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த காதல் உணர்வு தணிவதில்லை. உகார்தோ அவனிடம் கொடுத்திருந்த இரண்டு அனுமதிச் சீட்டுகள் அவனிடம் உள்ளன. அவை திருடப்பட்டவை என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், அவை மிகவும் மதிப்பு வாய்ந்தவை என்பதால், அவற்றைத் தனது கேளிக்கை விடுதி பியானோவுக்குள் ஒளித்து வைத்திருக்கிறான் ரிக். அவை இரண்டையும் பயன்படுத்தித் தன்னுடன் இல்ஸாவை லிஸ்பனுக்கு அழைத்துச் செல்ல அவனது காதல் மனம் திட்டமிடுகிறது; ஆனால், இத்தாலிய பாசிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட்ட எத்தியோப்பியர்களுக்குத் துப்பாக்கிகளைக் கடத்திக்கொண்டு சென்றவனும் ஸ்பெயினில் ஜெனெரல் ஃப்ராங்கோவின் பாசிஸத்துக்கு எதிராகப் போர் புரிந்தவனுமான அவனது அரசியல் மனமோ, இறுதியில் காதலைத் துறக்கவும் அந்த இரண்டு அனுமதிச் சீட்டுகளையும் விக்டருக்கும் இல்ஸாவுக்கும் கொடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு உதவவும் முடிவு செய்கிறது.
உலகத் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான திரைப் படங்களில் ஒன்றான ‘காஸாப்ளாங்கா’ வெளியாகி இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைவதை உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். முக்கோணக் காதல் கதையையும் இரண்டாம் உலகப் போர்க் கால ஐரோப்பாவின் ஒட்டுமொத்தத் துயரத்தையும், பாசிஸத்துக்கு எதிரான வீரமிக்க போராட்டத்தையும் ஒன்றிணைத்த மைக்கேல் கர்டிஸின் இந்தத் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்குக் குறைந்தபட்சம் ‘யூ ட்யூப்’ இருக்கவே இருக்கிறது!
-எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய-பெரியாரியச்
சிந்தனையாளர், தொடர்புக்கு: sagumano@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT