Published : 31 Oct 2017 10:16 AM
Last Updated : 31 Oct 2017 10:16 AM
யானையும் கொசுவும்!
ஒ
ரு கொசு தன்னை அலங்காரப் படுத்திக் கொண்டு அழகான மண மகனைத் தேடிப் புறப்பட்டது. அப்போது இன்னொரு கொசு கேட் டது. ‘‘இது என்ன புதுப் பழக்கம்? ஒரு கொசு எதற்காக மாப்பிள்ளை தேட வேண்டும்?’’
இதைக்கேட்ட பெண் கொசு சொன்னது: ‘‘அடித்தால் செத்துப் போய்விடக்கூடிய நோஞ்சான் கொசுவை நான் கட்டிக்கொள்ள மாட்டேன். பலசாலியான ஒரு ஆண் மகனைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன்!’’
இதைக் கேட்ட ஆண் கொசு சொன்னது: ‘‘அது நடக்கவே நடக்காது பார்...’’
அதைக் கேட்டு எரிச்சலடைந்த பெண் கொசு, எதுவும் சொல்லாமல் பறக்க ஆரம்பித்தது.
மரம் சொன்ன அறம்
பறக்கும் வழியில் இருந்த ஒரு மரம் கொசுவைத் தடுத்து, ‘‘கொசுவே கொசுவே... எங்கே போகிறாய்?’’ எனக் கேட்டது.
‘‘மாப்பிள்ளைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறேன். பலசாலியான ஆணாக இருந்தால், என்னிடம் சொல்!’’ என்று பதில் சொன்னது கொசு.
‘‘நான் அறிந்தவரைக்கும் ஒட்டகச்சிவிங்கிதான் பலசாலி. அதைக் கட்டிக் கொள். அது உன்னை உசரமான இடத்தில் வைத்துக் கொண்டாடும்!’’ என்றது மரம்.
இதைக் கேட்ட அந்தப் பெண் கொசு, ஒட்டகச்சிவிங்கி யைத் தேடிப் போனது.
ஒட்டகச்சிவிங்கி கொசுவின் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, அது சொன்னது: ‘‘நீ அசிங்கமாக இருக்கிறாய். உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நான் என்னைப் போல் கழுத்து நீண்ட ஒட்டகச்சிவிங்கியைத்தான் கட்டிக்கொள்வேன்!’’
இதைக் கேட்டு வருத்தப்பட்ட கொசு மீண்டும் மாப்பிள்ளை தேடிப் போனது.
பெண்புலியே என் பெருவிருப்பம்
அப்போது ஒரு குரங்கு, கொசுவிடம் சொன்னது: ‘‘எனக்குத் தெரிந்து புலிதான் வலிமையானது. நீ புலியைக் கட்டிக் கொள்!’’
அந்த யோசனையும் பிடித்துப்போகவே, புலியைத் தேடி காட்டிற்குள் போனது கொசு. ஒரு புலியை சந்தித்து, ‘‘என்னை திருமணம் செய்துகொள்வாயா?’’ எனக் கேட்டது கொசு. அதற்கு புலி, ‘‘நீ ஒரு அற்ப கொசு! உன்னை நான் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்? எனக்கு இணையாக வலிமையான ஒரு பெண்புலிதான் தேவை!’’ என்றது
இதனால் மனம் உடைந்துபோன பெண் கொசு, யாரை திருமணம் செய்துகொள்வது எனத் தெரியாமல் அலைந்து திரிந்தபோது, வண்ணத்துபூச்சி சொன்னது: ‘‘காட்டில் மிக வலிமையானது யானைதான். அப்பாவியும் கூட. அதை நீ திருமணம் செய்துகொள்ளலாம்!’’
உடனே கொசு யானையைத் தேடிப் போனது. ஒரு நதியில் யானைக் கூட்டமே குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது கொசு.
இந்த யானைக் கூட்டத்தில் ஒரு யானை கூடவா என்னை கல்யாணம் செய்துகொள்ளாது?’ என நினைத்துக்கொண்டு, யானைகளின் முன்னால் போய் நின்றுகொண்டு ‘‘யாராவது என்னை திருமணம் செய்துகொள்வீர்களா?’’ எனக் கேட்டது.
கொசுவின் வருத்தமான குரலைக் கேட்ட ஒரு யானை, கொசுவைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டது.
தந்தமுள்ள யானைக்கு சொந்தமான கொசு
கொசுவுக்கும் யானைக்கும் திருமணம் நடந்தது. அன்றிரவு யானை ஆசையோடு கொசுவை அணைத்துக்கொள்ள முயன்றபோது, கொசு நசுங்கி செத்துப்போனது.
இதைக் கேள்விப்பட்ட மரம் கண்ணீர்விட்டு இலைகளை உதிர்த்தது. வானம் இருண்டு மழையை பொழிந்தது. ஆற்றில் வெள்ளம் வந்து கரை புரண்டு ஒடியது.
ஏன் இப்படி வெள்ளம் போகிறது என ஊர்மக்கள் கேட்டதற்கு, ‘‘யானையின் மனைவி கொசு செத்துப்போய்விட்டது. அந்தத் துக்கம் தாங்க முடியாமல்தான் இயற்கையே அழுகிறது!’’ என்று பதில் கிடைத்தது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இன்றுவரை தன்னை மொய்க்கும் கொசுக்களை யானை அடித்துக் கொல்வதில்லை என்று நீள்கிறது இடுக்கி பழங்குடி மக்கள் சொல்லும் கதை ஒன்று.
களைகட்டும் கல்யாண களேபரங்கள்
யானையும் கொசுவும் திருமணம் செய்துகொண்டன என கேட்கும்போது நமக்கு சிரிப்பாக இருக்கிறது. ஆனால், நிஜவாழ்வில் யானையும் கொசுவும் போன்றவர்கள் பெரிய மண்டபம் பிடித்து, லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்துகொள்வது கண்முன்னே நடந்துகொண்டுதான் இருக்கிறது.
தனக்கு ஏற்ற மணமகனை, மணமகளைத் தேடுவது தவறில்லை. ஆனால், எதை வைத்து ஏற்றவர், ஏற்றவரில்லை என முடிவு செய்கிறார்கள்? இன்று திருமணங்களை முடிவுசெய்வது பொருளாதாரமே. பணமும், வசதியும், அதிகாரமும் இருந்துவிட்டால் கொசுவுக்கு யானை கிடைப்பது பிரச்சினையே கிடையாது. ஆனால், பணமில்லாத வறுமையில் வாடும் யானைக்கோ கொசு போல பெண் கிடைப்பது எளிதில்லை.
திருமணத்தை எளிமையாக நடத்தவேண்டும் என்ற எண்ணம் நூற்றில் ஒருவருக்குக் கூட கிடையாது. சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓர் இளைஞர் தனது திருமண வரவேற்புக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியிருக்கிறார். இவர் பெரும் பணக்காரர் இல்லை. துபாயில் வேலை செய்து திரும்பிய மெக்கானிக். ஆனால், திருமணத்துக்காக வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருக்கிறார். திருமணம் நடைபெற்றது சிறிய மண்டபத்தில். ஆனால் ஹெலிகாப்டர் செலவு 10 லட்சம் ரூபாய். இதன் விளைவு அந்த ஆளை வருமான வரித் துறையினர் தேடிப் போய் விசாரணை செய்திருக்கிறார்கள்.
ஆடம்பரங்களுக்கும் எல்லையுண்டு
சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு திருமண நிகழ்வில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு மட்டும் 80 லட்ச ரூபாய் செலவு செய்திருந்தனர். நான்கு விதமான திருமண ஆல்பம் தருவதோடு, சிறிய திரைப்படம் ஒன்றையும் எடுத்து திரையிட்டு காட்டுவார்களாம். அந்தச் சிறிய திரைப்படம் திரையிடப்படும் நாளில், உறவினர்களுக்கு தனி விருந்தும் வழங்கப்படும் என்றார் மணமகளின் தந்தை.
இன்னொரு பக்கம், பிள்ளையார் கோயிலில் வைத்து தாலி கட்டிவிட்டு, சாலையோர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, நகரப்பேருந்து பிடித்து வீடு போவதற்காக காத்திருக்கும் குடும்பம் ஒன்றையும் விழுப்புரம் அருகே கண்டேன். இரண்டும் திருமணங்கள்தான்.
திராவிட இயக்க எழுச்சியால் சீர்திருத்தத் திருமணங்கள் பிரபலமாகின. எளிமையான அந்தத் திருமண முறையில் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு இடம் கிடையாது. செலவும் குறைவு. அப்படி திருமணம் செய்துகொண்டவர்களில் பல பேர் இன்றும் சந்தோஷமான குடும்பங்களாக விளங்குகிறார்கள். இதைக் கண்டபிறகும் ஏன் பலரும் பிரம்மாண்ட திருமணங்களை விரும்புகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.
பெருநகர திருமணங்களில் ஆடம்பரமும் வீண்செலவுகளும் அதிகம். இன்று எல்லோருமே பிரம்மாண்டமாக திருமணம் செய்யவே ஆசைப்படுகிறார்கள். இதில் உணவுக்காவே பெரும்பணத்தை நிறைய செலவு செய்கிறார்கள். திருமண ஆடம்பரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவர்கள், அந்த மண உறவு வலிமையாக இருக்க வேண்டும்; நீடித்து வளர வேண்டும் என்பதில், சிறிதுகூட கவனம் கொள்வதே இல்லை.
கவர்மெண்ட் கட்டுமா கல்யாண மண்டபம்?
ஊடகங்கள் உருவாக்குகிற கற்பனைகளே பலரது மனதில் பிம்பங்களாக தங்கிவிடுகின்றன. சினிமா காட்சிகளைப் போல தமது வாழ்விலும் அரங்கேற்றிப் பார்க்க வேண்டும் என்றே பலரும் துடிக்கிறார்கள். டூயட் பாடல்கள் மட்டும்தான் மிச்சம். விரைவில் அதையும் ஆடம்பர செட் போட்டு, பாடல் கம்போஸ் செய்து படமாக்கிவிடுவார்கள் பாருங்கள்.
திருமண வயதை நிர்ணயம் செய்த அரசு, ஒரு திருமணத்துக்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று ஏதாவது ஒரு கட்டுப்பாடு கொண்டுவந்தால் நலமாக இருக்கும்.
அதுபோலவே திருமண மண்டபங்களை அரசே கட்டி சலுகைக் கட்டணத்தில் தந்து உதவினால் பலருக்கும் உதவி யாக இருக்கும். வசதியானவர்கள் தன் விருப்பம் போல செலவு செய்வது, அவர்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் வீணடிக்கப்படும் உணவு, மின்சாரம். குடிநீர், இதரப் பொருட்கள் பொது சமூகத்துக்கு தேவையானவை இல்லையா? அதைக் கணக்கில் கொள்ளத்தானே வேண்டும்!
- கதைகள் பேசும்...
எண்ணங்கள்ளைப் பகிர: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT