Published : 04 Nov 2017 09:59 AM
Last Updated : 04 Nov 2017 09:59 AM
எ
ழுத்தாளர் கல்யாணசுந்தரம் (மகரம்) 1980-களில் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கென்று ஒரு வழிகாட்டிக் குறிப்பேடு வெளியிட விரும்பினார். அதனால், ‘எழுதுவது எப்படி?’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார். வளரும் எழுத்தாளர்களுக்காகப் பல பாணிகள், சூட்சுமங்களைத் தொகுத்து, கட்டுரைகளாக இந்தப் புத்தகம் வெளியானது. இதில், ‘சிறுவர்களுக்காகக் கவிதை எழுதுவது எப்படி?’ மற்றும் ‘கதை எழுதுவது எப்படி?’ என்று இரண்டு முக்கியக் கட்டுரைகளை எழுத மகரம் அணுகியது ‘லெமன்’ எனும் லெட்சுமணனைத்தான். பொதுவான வாசகர்கள் பலருக்கும் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத ஒருவராக இருக்கிறாரே, இவர் எப்படி மிக முக்கியமான இந்த இரண்டு தலைப்புகளில் கட்டுரை எழுதுகிறார் என்று பலரும் நினைத்தார்கள்.
ஆனால், அந்தப் புத்தகம் வெளியானபோது, இந்த இரண்டு கட்டுரைகளுமே நல்ல வரவேற்பு பெற்றன. இந்தப் புத்தகமுமே பல தொகுதிகளாக வெளியானது. இந்தக் கட்டுரையை எழுதிய லெமனின் வாழ்க்கை யைப் பிரதிபலிக்கும் விஷயமே இதுதான். அவரைப் பற்றிப் பொது வாசகர்கள் பலருக்கும் தெரியாது. அவரது படைப்புகளை அவ்வளவாகப் படித்திருக்க மாட்டார்கள்.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் முக்கியமான சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதில், அவர்களுக்கு வழிகாட்டியதில் இவருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. குறிப்பாக, கதை, கட்டுரை, கவிதைகளை எழுதுவதற்கு லெமன் சொல்லிக்கொடுத்த வழிமுறைகள், குறிப்புகள் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியது.
சக்தி வை.கோவிந்தனின் அணில், கலைமகள் நிறுவனத்தின் கண்ணன், மஞ்சரி ஆகிய இதழ்களைச் செம்மைப்படுத்திய ‘லெமன்’ என்கிற லெட்சுமணன் 27-10-2017 அன்று இரவு காலமானார். 84 வயதான லெமன், பாட்னாவில் 1933, பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிறந்தார். சில காலம் கழித்து, அவரது தந்தை வேலையில் இடமாற்றம் பெற்றதால், சேலத்துக்குக் குடிபெயர, பள்ளிக் கல்வியை சேலத்திலேயே முடித்தார் லெட்சுமணன்.
மெட்ரிகுலேஷன் படிப்பை முடிக்கும்போதே ஓவியம், வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், மேற்கொண்டு படிப்பைத் தொடராமல், ஓவியத்தில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். கேரளத்தின் திரிச்சூரில் இருக்கும் வடக்கன்நாதன் கோயில் ஓவியங்களை வரைந்ததில் இவருக்கும் பங்குண்டு.
சிறுவர் இதழ்களில்...
அதன் பிறகு சென்னைக்கு வந்து, வை.கோவிந்தன் (மீண்டும்) தொடங்கிய ‘அணில்’ சிறுவர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக லெமன் பணியாற்றினார். ஐந்து மாதங்களிலேயே ‘அணில்’ இதழின் வாழ்வு முடிந்துபோக, கி.வா.ஜ.வின் வழிகாட்டலின்பேரில் ‘கலைமகள்’ நிறுவனம் நடத்திய ‘கண்ணன்’ - சிறுவர் பத்திரிகையில் உதவி ஆசிரியராக 1962-ல் சேர்ந்தார். பின்னர், ‘கண்ணன்’ பத்திரிகை நிறுத்தப்படும்வரை (1971 டிசம்பர்) பணிபுரிந்து, பின்னர் ‘கலைமகள்’ காரியா லயத்தின் அச்சுப் பிரிவைக் கவனித்துவந்தார்.
த.நா.சேனாதிபதி ஓய்வுபெற்றவுடன் ‘மஞ்சரி’ பத்திரிகையின் ஆசிரியராக லெமன் பொறுப்பேற்றார். 1977 முதல் 2003 வரை தொடர்ந்து ‘மஞ்சரி’ இதழை லெமன் சிறப்பாக வழிநடத்தினார். இந்த கால கட்டத்தில் லெமனின் பார்வை மங்க, ஓய்வு பெற்றார்.
தனது அறுபதாண்டு கால பத்திரிகை வாழ்க்கை யில் உதவி ஆசிரியராகவும், ஆசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல இளைஞர்களைச் செம்மைப்படுத்தி, பலரையும் எழுதத் தூண்டி, அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டிய ஒரு ஆசானாத் திகழ்ந்தார். தனது அயராத எடிட்டோரியல் வேலைகளுக்கு இடையேயும் குறிப்பிடத் தக்க சில படைப்புகளையும் லெமன் படைத்தார்.
லெமனின் படைப்புகள்
லெமன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, ‘மழைக் கிளிகள்’ என்ற பெயரில் ஓவியர் நடனத்தின் ஓவியங்களுடன் வந்தது. இதைத் தவிர்த்து, ‘கொக்கரக்கோ’, ‘சிப்பாய் வறார்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். இந்த இரண்டு தொகுப்புகளுக்கும் ஓவியம் வரைந்தவர் ரெஸாக். இவை அனைத்துமே மிக விரைவில் மறுபதிப்பாக வரவிருக்கின்றன.
தமிழின் மிகச் சிறந்த சிறுவர் இதழின் உதவி ஆசிரியராகவும், அதன் கடைசிக் காலத்தில் ஆசிரியராகவும் இருந்த லெமன், நினைத்திருந்தால் அதிலேயே தொடர்கதைகள், கதைகளெல்லாம் எழுதியிருக்கலாம். அதன் பிறகுகூட மஞ்சரியில் தனது படைப்புகளை அச்சில் கொண்டுவந்திருக்கலாம்.
ஆனால், சுயநலம் கருதாமல், இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், எழுத்துலகில் அவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதிலுமே தனது நேரத்தைச் செலவிட்ட ‘லெமன்’ போன்ற மௌனப் பங்களிப்பாளர்களை தமிழ் சிறுவர் இலக்கிய உலகம் என்றுமே மறக்காது. மறக்கவும் கூடாது.
- கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: prince.viswa@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT