Published : 29 Jul 2023 06:25 AM
Last Updated : 29 Jul 2023 06:25 AM
வ.வே.சுப்பிரமணியம் ‘தமிழ்ச் சிறுகதையின் மூலவர்’ என்று அறியப்படுகிறார். கம்பராமாயணத்துக்கு வ.வே.சு.ஐயர் செய்த பங்களிப்பு மகத்தானது. கம்பரின் மீதுள்ள பற்றின் காரணமாகத் தன் பதிப்பகத்துக்குக் ‘கம்ப நிலையம்’ என்று பெயர் வைத்தார். கம்பராமாயணத்தைப் பதம் பிரித்துப் பதிப்பிக்க முயன்றார். ‘கம்பராமாயண ரசனை’ என்ற பெயரில் தொடர் கட்டுரைகள் எழுதினார்.
இக்கட்டுரைகள் அவரது மறைவுக்குப் பிறகு (1940) நூலாக்கப்பட்டுள்ளன. கிரேக்கம், லத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றவர். இம்மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்துக் கம்பராமாயணத்தை உலகக் காவியங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ள நூல்தான் ‘கம்பராமாயணம் - ஓர் ஆய்வு’.
‘தேசபக்தன்’ இதழ் பொறுப்பிலிருந்த போது (1921, மே) அதில் வெளிவந்த ‘அடக்குமுறை’ என்ற கட்டுரைக்காக வ.வே.சு.ஐயருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தாம் எழுதாத கட்டுரைக்காக பெல்லாரி சிறைக்கு ஆங்கில அரசால் அவர் அனுப்பப்பட்டார்.
அங்கு இருந்தபடியே தம் நண்பர்களின் உதவியுடன் கம்பராமாயணத்தை நவீன நோக்கில் ஆராய்ந்து, ‘Kamba Ramayana A Study’ (1921-1922) என்ற முன்னோடியான ஆய்வு நூலினை ஆங்கிலத்தில் எழுதினார். கையெழுத்துப் பிரதியாக இருந்த இந்நூலினை டெல்லி தமிழ்ச் சங்கம் 1950ஆம் ஆண்டு பதிப்பித்தது. 1965இல் பம்பாய் பாரதீய வித்யா பவன் இந்நூலினை மறுபிரசுரம் செய்திருக்கிறது.
70 ஆண்டுகளுக்குப் பிறகு, பதிப்பாளர் சந்தியா நடராஜனின் முயற்சியால் இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரனின் மகன் மருத்துவர் டி.ஆர்.சுரேஷ் இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்நூல் தமிழில் வெளிவருவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒப்பியல் ஆய்வுக்கு முன்னோடியாக இந்நூல் விளங்குகிறது. தொ.மு.சி.ரகுநாதன் முதல் ஜெயமோகன் வரை விமர்சகர்கள் பலரும் இந்நூல் குறித்து விதந்து பேசியுள்ளனர்.
உலகக் காவியங்களான இலியட், ஒடிஸி, துறக்க நீக்கம் போன்றவற்றுடன் கம்பராமாயணத்தை ஒப்பிட்டு வ.வே.சு. ஆராய்ந்திருக்கிறார். மேலதிகமாக வான்மீகியின் ராமாயணத்தைவிடக் கம்பர் உயர்ந்து நிற்கும் இடங்களைத் தகுந்த தரவுகளுடன் இந்நூல்வழி நிறுவியிருக்கிறார். தமிழர்கள் மட்டுமின்றி வடநாட்டவரிடமும் இந்நூல் போய்ச் சேர வேண்டும் என்று திட்டமிட்டே இந்நூலை வ.வே.சு. ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
ராமாயணக் கதையை நூலின் தொடக்கத்திலேயே விரிவாகச் சொல்லிவிடுகிறார். மனிதர்களையும் குரங்குகளையும் வெற்றிகொள்ளும் திறத்தை வேண்டுவது தனக்கு மிகவும் இழிவு என்று தன் ஆற்றல் மீதிருந்த செருக்கால் ராவணன் கருதியிருந்தான். அதனால்தான் ராவணனை அழிக்க திருமால் மனிதராகப் பிறப்பெடுத்தார் என்பது போன்ற நுட்பங்களையெல்லாம் வ.வே.சு. தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
தண்டியின் காவிய இலக்கணப்படி கம்பராமாயணம் எவ்வாறு ஆற்றொழுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் வ.வே.சு. ஆறு காண்டங்களின் கதைத் தொடர்ச்சியைக் கொண்டு நிறுவியிருக்கிறார். இந்த ஒப்பியல் நூலில் வான்மீகியின் சிறப்பையும் வ.வே.சு. சொல்லத் தவறவில்லை.
உதாரணமாக, தசரதன் மிதிலை நோக்கிச் செல்லும் பயணத்தை வான்மீகி ஓரிரு சுலோகங்களிலேயே சொல்லிவிடுகிறார். கம்பரோ அதனை முந்நூறு செய்யுள்களில் சொல்லியிருக்கிறார். இது மிகவும் அதிகப்படியானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்துவிட்டான் என்று அனுமன் கூறக் கேட்ட கணமே, வாலியை வதம் செய்யும் முடிவுக்கு ராமன் வருமாறு கம்பர் தம் காப்பியத்தை வடிவமைத்துள்ளார். ராமன் தன்னுடைய துயரத்தைச் சுக்ரீவனின் துயரத்துடன் பொருத்திப் பார்க்கிறான். மனைவியை இழந்தவனின் மனித மனம் அங்கே ராமனிடம் செயல்படுகிறது என்ற வாசிப்பை வ.வே.சு. செய்திருக்கிறார்.
ராமாயணத்தில் வானரங்களும் அரக்கர்களும் நிகழ்த்தியிருக்கக் கூடிய அமானுஷ்யக் காட்சிகளை வ.வே.சு.ஐயர் கதையின் பொருத்தப்பாடுகளுடன் இணைத்து விரிவான ஆய்வைச் செய்துள்ளார். இது இந்நூலின் சிறப்பான பகுதியாகும். ராமாயணத்தின் போர்க் காட்சிகளையும் முதல் உலகப் போரின் ஆயுதப் பயன்பாடுகளையும் ஒப்பிட்டு வ.வே.சு. எழுதியுள்ளார். இன்று பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்கள் பலவற்றின் செயல்பாடுகளைக் கம்பர் விரிவாக வர்ணித்துள்ளதையும் வ.வே.சு.
ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். ராமன், இலக்குவன், இந்திரசித்து, விபீஷணன், கும்பகர்ணன், வாலி, சுக்ரீவன், அனுமன், ராவணன், பரதன், சீதை என ராமாயணத்தின் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் வ.வே.சு. விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார். ராமனை மட்டுமே தன் காப்பியத்தில் முன்னிறுத்தாத கம்பரின் ஆளுமையை வ.வே.சு. கண்டுணர்கிறார்.
மனிதர்களுக்குள்ள எல்லா பலவீனங்களும் ராமனுக்கும் உண்டு என்பதைக் கம்பர் தெளிவாகப் புரியவைத்துள்ளார். இலக்குவனின் அன்பும் வீரமும் ராமனுக்குப் பின்னே மறைந்து நிற்கும் நுட்பத்தையும் வ.வே.சு. சுட்டிக்காட்டுகிறார். ராமனின் நிழலாகத் தன்னைக் கருதியதாலேயே ‘இளைய பெருமாள்’ என்று இலக்குவன் அழைக்கப்படுகிறான்.
இந்திரசித்து, கும்பகர்ணன், ராவணன் உள்ளிட்ட காப்பியத்தின் எதிரணியினரையும் வ.வே.சு. பொருட்படுத்தி விரிவாக எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. கம்பராமாயணம் குறித்த விரிவான குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் வான்மீகியையும் கம்பனையும் ஒருசேர வாசித்த திருப்தியையும் இந்நூல் அளிக்கிறது. அவ்வகையில் காலம் கடந்து இந்நூல் தமிழுக்கு வந்திருந்தாலும் நல்லதொரு முயற்சி.
- தொடர்புக்கு: ramesh5480@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT