Published : 28 Nov 2017 10:24 AM
Last Updated : 28 Nov 2017 10:24 AM

கடவுளின் நாக்கு 73: உழைப்பின் பாடல்!

உழைப்பின் பாடல்!

சு

தந்திரத்துக்கு முந்தைய இந்தியா வைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், தமிழகத்தின் கிராமப்புறக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. 75 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் எவ்வளவு செழுமையாக, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை யோடு இருந்திருக்கிறது என்பதைக் காணும்போது, பெரும் ஆதங்கமாக இருந்தது.

அந்த ஆவணப்படத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருப்பவர்கள் பாடு கிறார்கள். ஏற்றம் இரைப்பவன் அலாதியான குரலில் பாடுகிறான். விவசாயத் தொழி லாளர்கள் எனப் பலரும் தங்களை மறந்து பாடுகிறார்கள். அசலான கிராமத்துக் குரல்கள். கடின உழைப்பாளிகளுக்கு பாட்டுதான் ஒரே துணை. அவை எழுதிக் கொடுத்து பாடப்பட்ட பாடல்கள் இல்லை. மனதில் ஊற்றெடுக்கும் பாடல்கள். அவர்களே மண்ணின் ஆதிகவிகள்!

விவசாயம் அழியத் தொடங்கியதோடு அந்தப் பாடல்களும் நம்மிடம் இருந்து விடைபெற்றுப் போய்விட்டன. இன்று, தமிழகத்தில் எங்கேயாவது விவசாய வேலைகளுக்கு நடுவே யாராவது பாடுகிறார்களா? தன்னை மறந்து நெசவாளிகளும், ஆடு மேய்கிறவர்களும், கடலில் மீனவர்களும் இப்போதும் பாடுகிறார்களா? உழைப்பாளிகளின் பாடல்களைக் கேட்டு பல காலம் ஆகிவிட்டது. அவர்கள் மவுனமாகிவிட்டார்கள். அவர்களின் நாக்கை அரசாங்கமும் அதிகாரமும் ஒடுக்கிவிட்டது.

கேட்க கிடைக்கும் பாடலகள்...

இன்று ரேடியோ பாடிக் கொண்டிருக்கிறது அல்லது ஒலிபெருக்கிப் பாடிக்கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி, அல்லது செல்போனில் மட்டுமே பாடல் கேட்கிறார்கள். அந்தப் பாடல் அவர்கள் மனதின் பாடலில்லை. கேட்க கிடைக்கிற பாடல்கள் மட்டுமே.

வயிற்றுப் பசி உழைப்பாளிகளின் வாயை அடைத்துவிட்டது. உண்மையில் வேறு எந்த தேசத்திலும் இப்படி அந்த மண்ணின் மைந்தர்கள் தங்கள் சொந்தக் குரலை, சொந்த பாடும் முறையை இழந்திருப்பார்களா எனத் தெரியாது.

இன்றைக்கும் ஆப்பிரிக்க கிராமங்களில் உழைப்பாளிகள் பாடுகிறார்கள். இரவானதும் ஊர் ஒன்றுகூடி விடுகிறது. இசையும் நடனமும் இணைந்ததுதான் வாழ்க்கை. ஆனால், தமிழ் வாழ்க்கையிலோ நடனம் என்பது உயர்தட்டு மக்களுக்கானது. அதுவும் இரவு கேளிக்கைக்கானது.

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்துக்குப் போயிருந்த போது பழங்குடி மக்கள் நடனமாடுவதைக் கண்டேன். அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களையும் அழைத்து கைகோத்துக்கொண்டு ஆடுவார்கள். அப்படி எங்களையும் அழைத்தார்கள்.

அப்போதுதான் இந்தப் கால்கள் எவ்வளவு இறுகிப் போனவை; அவற்றை நான் கவனம்கொள்ளவே இல்லை என்பதை உணர்ந்தேன். ஆண், பெண் என பேதமின்றி ஒருவரோடு ஒருவர் கைகோத்து விடிய விடிய ஆடுகிறார்கள். நடனத்தின்போது வெளிப்படும் சந்தோஷம் நிகரற்றது. ஆனால், அதை நடுத்தரவர்க்க மக்கள் உணரவே இல்லை.

பள்ளிப் பருவத்தில் களத்தில் நெல் அடிக்கும்போது பெண்கள் கூடி ஆடுவதைக் கண்டிருக்கிறேன். உழைத்து உரமேறிய உடல்களின் பேரழகுமிக்க நடனம் அது!

ஆடிமுடித்து வியர்வை வழிய... வழிய, அவர்கள் வெறுந்தரையில் உட்கார்ந்துகொண்டு ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொள்வார்கள். அந்தச் சிரிப்பு கூடிக் கழித்த மகிழ்வின் அடையாளம். இன்று அத்தனையும் நாம் தொலைத்துவிட்டோம் என்பது வருத்தமளிக்கிறது.

பாட வா... உன் பாடலை

பூம்பூம் மாட்டுக்காரனின் பாடல் ஒருவிதம், கருவாடு விற்பவரின் குரலின் இனிமை ஒரு விதம். சாணை பிடிப்பவர்களின் குரல் கத்தி போல மினு மினுப்பாக இருக்கும். இப்படி நூறு நூறு தனிக்குரல்கள். ஒவ்வொன்றும் ஒருவகை இனிமை. இன்று கேட்கும் குரல்களில் பாதி கோபத்தில், இயலாமையில், ஆத்திரத்தில் ஒலிப்பவை. அதிலும் நகரப் பேருந்துகளில், ரயில்களில், பொதுவெளியில் கேட்கும் குரல்கள் தகரத்தை ரம்பத்தால் அறுப்பதுபோல இம்சிக்கின்றன.

பூங்காவில், ரயில் மற்றும் பேருந்து பயணங்களில் எல்லோரது காதுகளிலும் ஒரு இயர்போன் பொருத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். இவ்வளவு இசை கேட்கிற சமூகம் ஏன் பாடத் தயங்குகிறது?

தொலைகாட்சியில் நடைபெறும் போட்டி நிகழ்ச்சிகளில் பரிசு பெற வேண்டி குழந்தைகளைப் பாட வைக்கிறார்கள். அதே குழந்தை மழை பெய்யும்போது தன்னை மறந்து பாட நினைத்தால் பள்ளிக்கூடம் அனுமதிக்குமா? அல்லது வீட்டில்தான் பாடவிடுவார்களா?

நமக்கு குரல் இருப்பது ஏவல் சொல்லத்தான் என்றாகிவிட்டது. குரலை உயர்த்துகிறவனைக் கண்டு உலகம் பயப்படுகிறது. ஆனால், பாடுவதில்தான் குரலின் உண்மையான அழகு வெளிப்படும். குரலின் இனிமை உணரப்படும். அது யாரோ சிலருக்கு உரியது என நினைத்து ஒதுக்கிவிட்டோம்.

நிறுத்தப்பட்ட பாடல்...

கம்பம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றுக்கு போயிருந்தேன். அங்கே ஆங்காங்கே ஸ்பீக்கர் கட்டியிருந்தார்கள். வேலைப் செய்பவர்கள், பாட்டு கேட்க விரும்புகிறார்கள் என்பதால் அந்த ஏற்பாடு என்றார்கள். ‘‘ஏன் அவர்களுக்கு பாடத் தெரியாதா?’’ எனக் கேட்டேன். ‘‘ஒருவருக்கும் பாடத் தெரியாது...’’ என்றார்கள். ஒரு பாட்டியிடம் ‘‘உங்களுக்குக் கூட பாடத் தெரியாதா?’’ எனக் கேட்டபோது, ‘‘முன்னாடியெல்லாம் பாடுவேன், இப்போ யாரு கேட்கிறா?’’ எனச் சொன்னார்.

‘‘நாங்கள் கேட்கிறோம், பாடுங்கள்’’ என்றேன். அவர் பாடத் தொடங்கினார். பூமியில் புதிதாக வேர் ஊன்றிய ஒரு செடி பச்சை இலை விரிப்பதைப் போல அத்தனை அழகுடன், ஈர்ப்புடன் இருந்தது பாடல். பாடி முடித்தபோது, அவரை அறியாமல் கண்ணீர் வந்தது. கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்களை மறந்து கைதட்டினார்கள். எத்தனையோ ஆண்டுகளாக தடுத்து நிறுத்தப்பட்ட பாடலால் பீறிட்ட சந்தோஷம் அன்றைக்கு அந்தப் பாட்டியின் முகத்தில் தெரிந்தது.

பாடத்தெரிந்தவர்களைப் பாடவிடாமல் எது தடுத்து வைத்தது? பாடிய பிறகு ஏன் கண்ணீர் வந்தது? அந்தக் கண்ணீர் பாடலுக்காக வந்த கண்ணீர்தானா? விவசாயமும் அது சார்ந்த தொழில்களும் அழியத் தொடங்கியதே இதற்கான முதற்காரணம். விவசாயிகள் அதிகம் பேசுவதில்லை. அவர்களின் மவுனத்தை நாம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம்.

வாழ்வோடு இருந்த கலைகளைத் தொலைத்துவிட்டு காசு கொடுத்து இசையை, பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது வேதனையளிக்கிறது.

பாடத் தெரிந்த பறவை

சீனக் கதையொன்று நினைவுக்கு வருகிறது. இனிமையாக பாடும் பறவை ஒன்றிருந்தது. அதன் குரல் கேட்பவரை மயக்கிவிடும். அந்தப் பறவை ஒருநாள் அரண்மனை தோட்டத்தில் வந்து அமர்ந்து பாடியது. அதைக் கேட்ட அரசன் தன்னை மறந்து ரசித்தான். பின்பு அதை சொந்தமாக்க நினைத்து பறவையைப் பிடித்துவரும்படி ஆணையிட்டான். பறவையோ வீரர்கள் கையில் அகப்படாமல் பறந்துபோய்விட்டது. எங்கிருந்தாலும் அதை துரத்திப் பிடித்து வரும்படி ஆணையிட்டான் அரசன். படைவீரர்கள் அதைப் பின்தொடர் ந்தார்கள்.

அந்தப் பறவை ஆறுகளைத் தாண்டி, மலையைத் தாண்டி மறுபக்கம் போய்விட்டது. அது ஒரு சிற்றரசனின் நாடு. ஆகவே, பறவையை பிடிக்க வேண்டி அந்தச் சிற்றரசனின் நாட்டை வீரர்கள் கைப்பற்றினார்கள். அதன் தலைநகரத்தை தீவைத்து எரித்தார்கள். அப்போதும் பறவையைப் பிடிக்கவே முடியவில்லை. பறவை பறந்து வேறு நிலம் நோக்கி போனது. பறவையை பிடிப்பதாகச் சொல்லி படைப்பிரிவு ஒவ்வொரு ராஜ்ஜியமாக பிடித்துக்கொண்டே போனது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டு, வீடுகள் எரிக்கப்பட்டு, முடிவில் பறவை பிடிக்கபட்டது. ஆனால், அது அரண்மனைக்கு வந்தபோது பாடுவதை நிறுத்திக்கொண்டது.

ஏன் பறவை பாடவில்லை என மன்னருக்கு புரியவில்லை. அப்போது ஒரு மந்திரி சொன்னார்: ‘‘தன்னைச் சுற்றிச் சுழன்ற வாழ்க்கையின் சந்தோஷத்தை கண்டே அந்தப் பறவை பாடியது. இப்போது அந்தப் பறவை கண்டது அத்தனையும் கோரக் காட்சிகள், அவலங்கள். உயிருக்கு போராடும் மனிதர்களின் குரலை கேட்டு கேட்டு வருந்தி அது பாடுவதையே நிறுத்திக் கொண்டுவிட்டது’’ என்றார்.

பறவைகள் மட்டுமில்லை; மனிதர்களுமே தன்னைச் சுற்றிய வாழ்வின் சந்தோஷத்தில் இருந்தே பாடுகிறார்கள். அதை அழித்துவிட்ட பிறகு அவர்களிடம் பாடல் எப்படியிருக்கும்? பாடத் தெரிந்த மனிதர்களின் நாக்கை கட்டுப்போட்டு வைத்திருப்பது எவ்வளவு துயரமானது? ஏன் அதை இந்த சமூகம் உணர மறுக்கிறது.

எப்போதும் மீண்டும் உழைப்பின் பாடலை கேட்க முடியும்?

மனசாட்சி உள்ள எல்லோரும் இதற்கான பதிலை நோக்கி காத்திருக்கிறார்கள்.

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x