Published : 11 Nov 2017 10:03 AM
Last Updated : 11 Nov 2017 10:03 AM
த
மிழ் இலக்கணம் திணை மரபு பற்றிக் கூறும்போது நெய்தல் திணையை ‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று விளக்குகிறது. கடலைத் தொழிலுக்கான இடமாகவும், கடற்கரையை வாழ்வதற்கான இடமாகவும் கொண்ட இப்பகுதி மக்கள் ‘பரதவர்’ என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும்போது ‘கடல்கொண்ட கபாடபுரம்’ தொன்மத்தில் தொடங்கி, ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்ற பழமொழிகள் வரை எண்ணற்ற சான்றுகள் பரதவர் எனும் கடலோரப் பகுதி மக்களின் வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. எனினும் நமக்குக் கிடைத்த இந்த அறிவும்கூட மேலோட்டமானதுதான் என்பதை நமக்கு உணர்த்துவதாய் வந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல்தான் ‘வேளம்’ (உரையாடல்).
இந்தியாவின் இருமருங்கிலும் மேற்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளின் பூர்வகுடிகளான ‘கடலோடி’கள் கடந்த பல நூற்றாண்டுகளாகவே பல்வேறு அரசுகளால் பல்வேறு காரணங்களைக் காட்டி தங்கள் வாழிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவது தங்குதடையின்றித் தொடர்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சவால்களோ எண்ணற்றவை. வனப் பழங்குடிகளுக்கும் (குறிஞ்சி – முல்லை) விவசாயிகளுக்கும் (மருதம்) இந்த அடையாள அழிப்பு ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டுவிட்ட நிலையில், நெய்தல் குடிகள் தங்கள் அடையாளங்களை மீட்டுக்கொள்ளப் போராடியே ஆக வேண்டியுள்ளது. இந்தப் பின்னணியில், நூலாசிரியர் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் இத்தகைய அவல நிலையின் பின்னணி குறித்து நம்முடன் உரையாடும் முயற்சியை மேற்கொண்டு, சரியான மொழியில், சரியான நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே கூறலாம்.
பேரா. கான்ஸ்தந்தின் நெய்தல் நில மக்களின் வரலாற்றிலிருந்து துவங்கி, இலக்கியம் வரையிலான பங்களிப்பை விரிவாக எடுத்துக் கூறியுள்ளதோடு, தமிழகக் கடலோரக் குடிகள் இன்று சந்தித்துவரும் பிரச்சினைகள் பலவற்றை யும் நம்முன் வைக்கிறார். அதே நேரத்தில், அவற்றில் இருந்து விடுபடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை கள் பலவற்றையும் விரிவாக எடுத்துரைக்கிறார்.
மொத்தமுள்ள 26 கட்டுரைகளில் இந்தப் பகுதி மக்களின் வரலாற்றைப் பதிவுசெய்வதன் அவசியம், அவர்களது பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம், தனித் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், தமிழகக் கடலோடிகளிலிருந்து குஜராத், கேரள மாநிலக் கடலோடிகள் மாறுபடும் விஷயங்கள், இப்பகுதி மக்களின் எழுச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தேவையான வாசிப்பு, எழுத்து ஆகியவற்றின் முக்கியத்துவம் என சிலவற்றைச் சுட்டிக் காட்டலாம்.
“உலக வரலாற்றில் ஒவ்வொரு இனக் குழுவும் தனது இடத்தை முனைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வரலாற்றில் இடம் இல்லையென்றால், அரசியல்-சமூக வெளியிலும் அவர்களுக்கு இடம் இல்லை என்றாகி விடும். அந்த இடத்தைப் பெற ஒரேயொரு வாய்ப்புதான் இருக்கிறது. அது இலக்கியத்தில் இடம்பெறுவது. பெண்ணின் பேறுகால வலியை இன்னொருவர் எடுத்துச் சொல்வதற்கும், அவர் தானே வெளிப்படுத்துவதற்கும் கடலளவு வித்தியாசம் இருக்கிறது. நெய்தல் திணை வாழ்வின் தனித்துவங்களை அங்கிருந்து வருகிற எழுத்து தான் கூர்மையாக வெளிப்படுத்தும்” என்று பேரா.கான்ஸ்தந்தின் கூறுவது இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தப்பாடு உடையது.
கப்பல் மாலுமியாகப் பணிபுரிந்த ஆன்றனி டெலியின் கூற்றை பேரா.கான்ஸ்தந்தின் தருவதும் கவனிக்க வேண்டிய ஒன்று: “என் கடல் பயணங்களில் ஐரோப்பிய, இந்தோனேசிய, கொரிய, ஜப்பானியக் கடற்கரைகளுக்குப் போயிருக்கிறேன். நான் அறிந்த வரையில் உலகம் முழுவதும் கடலோர மக்களின் அடிப்படைக் குணங்கள் ஒன்றுபோலவே இருக்கின்றன. முரட்டுத்தனம், உரத்துப் பேசுவது இதிலெல்லாம் அவர்கள் ஒன்றுபோலவே இருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கையையும் தொழிலையும் அணுகும் முறையில் நிறைய வித்தியாசம். ஐரோப்பிய கடற்கரையில் மீனவர்களுக்கு ‘க்ளப்’கள் உள்ளன. எல்லோரும் செய்தித் தாள் படிக்கின்றனர். நலச் சங்கங்கள் உள்ளன. மீன் அங்காடிகளில் தூய்மையும் அமைதியும் நிலவுகின்றன. மீனுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை மீனவர்களிடம்தான் இருக்கிறது. நாளைய பிழைப்பு என்ன ஆகுமோ என்ற ஆற்றாமையும் அங்கில்லை. வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடும் மனிதர்களைப் போலவே அங்குள்ள மீனவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்…”
கடலோரத்தில் பிறந்து, தம் மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டாதவர்கள் குறித்து பேரா.கான்ஸ்தந்தின் விசனம் கொள்கிறார். கடலோரப் பகுதி மக்களின் தேவைகள் என்னென்ன? அவற்றைப் பெறும் வழிவகைகள் என்னென்ன என்பதையெல்லாம், அந்தப் பகுதி மக்களிடையே எடுத்துரைத்துவந்திருக்கும் பேரா.கான்ஸ்தந்தின் இந்த நூலின் மூலம் அம்மக்களின் நிலையை வெளியுலகுக்கும் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். “செய்திகள்தான் மனிதனைச் செயல்பாட்டுக்கு இழுக்கின்றன; சமூகத்தை இயக்குகின்றன; இழப்பையும், இழப்பின் காலவழியையும் அறிந்து கொண்ட சமூக மனம், இழந்ததை மீட்டுக்கொள்ள எத்தனிக்கும். சமூகமே அதற்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்ளும். மனித வரலாறு இதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. இழப்பின் வலியை உணர்தலே மக்கள் இயக்கத்தின் மையப்புள்ளி. அதை நோக்கிப் பயணிக்க அறிவே கருவி.”
காத்திரமான வரிகள். இந்தக் கடற்காற்று, வரவிருக்கும் சிந்தனைச் சூறாவளிகளின் முன்னறிவிப்பாக இருக்கட்டும்.
- வீ.பா.கணேசன், மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: vbganesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT