Published : 24 Jun 2023 08:26 AM
Last Updated : 24 Jun 2023 08:26 AM
உலகமயமாக்கலுக்குப் பிறகும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நம் மண்ணை மலடாக்கிய பின்னரும் அரசுகளின் பாராமுகத்தால் சாவின் விளிம்புக்குத் தள்ளப்படும் இந்திய விவசாயிகளில் ஒருவர் ராம்ராவ். மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிவாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான இவர் 2014இல் தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டார். விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் பத்திரிகையாளரும் ஆய்வாளருமான ஜெய்தீப் ஹர்திகர், ராம்ராவின் வாழ்க்கையை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். சமூகச் செயல்பாட்டாளர் பூங்குழலி, இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ராம்ராவ்: வாழ்வெனும் மரணம் (இந்திய விவசாயியின் நிலை) ஜெய்தீப் ஹர்திகர் (தமிழில்: பூங்குழலி) தடாகம் வெளியீடு விலை: ரூ.350 தொடர்புக்கு: 9840070870 |
விவசாய நட்டத்தை ஈடுகட்டவும் தன் மனைவியின் மருத்துவச் செலவுக்காகவும் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் வரை ராம்ராவ் கடன் வாங்கியிருந்தார். தற்கொலையிலிருந்து மீட்கப்பட்ட ராம்ராவ், அதற்குப் பின்னான வாழ்க்கையை எப்படிக் கடந்தார் என்பதையும் ஆசிரியர் இந்நூலில் விளக்கியுள்ளார். 1995 முதல் 2018 வரை நான்கு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. அரசுகளின் புறக்கணிப்பாலும் செயல்படாத தன்மையாலும் இப்படிப் பலிகொடுக்கப்படும் இந்திய விவசாயிகளின் வாழ்க்கையைப் பொறுப்புடன் பதிவுசெய்துள்ளார் ஜெய்தீப் ஹர்திகர்.
- பிருந்தா சீனிவாசன்
பல களங்களும் பல மனிதர்களும்
வெகுமக்கள் இதழ்களில் பிரசுரமான, பல்வேறு அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற எழுத்தாளரின் 15 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. பலதரப்பட்ட கதைக் களங்களை இக்கதைகளினூடாக அறிமுகம் செய்யும் எழுத்தாளர், பலவகையான கதைமாந்தர்களையும் நம்மோடு உரையாட வைத்துள்ளார்.
தாய்ப்பால் உறவு மயிலாடுதுறை க.இராஜசேகரன் சந்தியா பதிப்பகம் விலை: ரூ.160 தொடர்புக்கு: 044 2489 6979 |
“ஆயா, எனக்கு மெடிக்கல் சீட் கெடச்சிருக்கு; நான் டாக்டருக்குப் படிக்கப்போறேன்; படிச்சு முடிச்சதும் ஒனக்குக் காசில்லாம வைத்தியம் பாக்குறேன்...” என்று ‘தாய்ப்பால் உறவு’ கதையில் அஞ்சலையின் காலில் விழும் சங்கர், நம் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவராக நம் மனதில் பதிகிறார். “ஐநூறு ரூவாய்க்கி தராசு, படிக்கல் வாங்கணும். நாளையிலேர்ந்து சொந்தமா யாவாரத்தத் தொடங்கிட வேண்டியதுதான். மார்க்கெட்டுல வந்து கெஞ்சிக்கிட்டு நிக்கக் கூடாது” என்று தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கும் ‘வெவசாயி’ கதையில் வரும் கதிரேசன் நம்பிக்கை சுடர்முகம் காட்டுகிறார். ‘பேசும் புதிய சக்தி’ இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற ‘தாய் மண்’ சிறுகதை, எழுத்தாளரின் வீர்யமிக்க மொழிநடைக்குச் சான்றாகும்.
- மு.முருகேஷ்
தத்துவத்தின் ஊடே...
மெய்யியல் என்பது ஓர் ஆழமான பெருங்கடல். அதில் இறங்கி நீந்துவது சவாலானதும்கூட. பெரும் அறிஞர்கள்கூட அதில் மூழ்கிவிடும் சாத்தியம் உண்டு. இந்நிலையில், நூலாசிரியர் கலந்தர் ஹாரீஸ் தன்னுடைய முதல் நூலிலேயே தத்துவவியலின் அடி ஆழம்வரை சென்றிருக்கிறார். முக்கியமாக, அதன் ஆழத்தில் புதைந்திருக்கும் உண்மைகளை நமக்கும் புலப்படுத்துகிறார்.
இறுதி கர்ஜனை கலந்தர் ஹாரீஸ் கனவுத்தமிழ் பதிப்பகம் விலை: ரூ.225 தொடர்புக்கு: 98403 21522 |
இந்நூலை சாக்ரடீஸிடமிருந்து தொடங்கி அகிலத்தை வென்ற அலெக்ஸாண்டரிடம் முடித்திருக்கிறார் ஹாரிஸ். இவர்களுக்கிடையே திப்புசுல்தான், மகாத்மா காந்தி, அன்னை தெரசா, பார் மார்லி போன்றோர் மனித குலத்துக்கு அளித்த பங்களிப்பையும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.
- ஹுசைன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT