Last Updated : 05 Oct, 2017 09:26 AM

 

Published : 05 Oct 2017 09:26 AM
Last Updated : 05 Oct 2017 09:26 AM

பெண் கதை எனும் பெருங்கதை -14

ந்த ஊருக்கு கூனம்மா வந்தது ஊர்ப் பெண்களுக்கு பல வகையிலும் அனுகூலமாக அமைந்தது. அவைகளில் ஒன்று, ‘அயத்தால் ஆடி’ என்கிற அவ்வையார் நோம்பு. இந்த அவ்வையார் நோம்பு என்ற செவ்வாக்கிழமை விரதம் பற்றிச் சொல்லணும்.

இங்கே அவளுடைய விஸ்தீரணமான வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு சும்மாதான் கிடந்தது. அதை இந்தச் செவ்வாக்கிழமை விரதத்துக்கு இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த விரதம் பற்றி - பெயரைச் சொன்னாலே - பெண்கள் அனைவருக்குமே முகமலர்ச்சி வந்துவிடும்.

அதை மறுத்துப் பேசினால் அப்படிப் பேசிய ஆம்பளைக்குக் ‘கண் அவிந்து’ போய்விடும் என்பது பலமான நம்பிக்கை.

‘ ‘நான் விரதத்துக்கு ராத்திரி போகணும்’’ என்ற பேச்சுக் கேட்டதும் ‘ ‘மகராசியாப் போயிட்டு வா’’ என்கிற சொல்லுக்கு மறுபேச்சு கிடையாது.

ஒரு ராத்திரி பூராவும் ‘அம்மாட’ என்று பிக்கல் பிடுங்கல் இல்லாமல் ஆனந்தமாய் களிக்கலாம். அவரவர் வீடுகளில் இருந்து நெல்லும் தேங்காய் முடிந்தால் கொண்டு வரலாம். நல்ல சுத்தமான சாம்பல், செவ்வாதாளைச் செடிகள், சலவை செய்யப்பட்ட சுத்தமான பழைய கந்தல் துணிகள், விளக்கு எரிய எண்ணெய் இப்படி ஏண்ட (இயன்ற) எதையாவது கொண்டு வரலாம். ஒன்றுமே இல்லாமலும் வரலாம். பேசுவதற்கான விஷயங்களையும் கொண்டு வரலாம்.

கூட்டிக் கொண்டு வரும் பெண் குழந்தைகள் சீக்கிரமே தூங்கிவிடுவார்கள்.

எந்த விஷயத்துக்கும் ஒரு ‘சாமி’ வேணுமே. இங்கே சாமி என்பது நிறை செம்புதான். ஒரு செம்பு நிறைய தண்ணீர்விட்டு, அதன் மேலே ஒரு தேங்காயைக் கும்பமாக வைத்து, பக்கத்தில் நல்ல விளக்கு எரிந்துகொண்டே இருக்கும்.

மற்றும் இருட்டைப் போக்க வேண்டிய இடங்களில் மற்ற எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும்.

அவ்வையார் சொன்ன வாக்கு

‘சுத்தி’ செய்து கொள்வது இங்கே முக்கியம். முக்கால்வாசி அதுக்குத்தானே வருவது. கொண்டு வந்த நெல்லைக் குத்தி உமி நீக்கி ‘கைக்குத்தல் பச்சரிசி’ ஆக்கிக் கொண்டிருப்பார்கள். (பச்சரிசியை கடைகளில் வாங்கிக் கொண்டு வந்துவிடக் கூடாது என்பது முக்கியம்)

அவ்வையார் இவர்களுக்குச் சொன்ன வாக்கு ‘கைக்குத்தல் பச்சரிசியும் தேங்காயும்’ என்பதே.

பரம்பரை பரம்பரையாகவே இதைச் செய்து கொண்டே வரவேண் டும் என்பது தெய்வ கட்டளைப் போல. அதற்காக அவற்றை வைத்து எண்ணெய்ப் பலகாரமாகவோ, வேறு விதமாகவோ செய்து கொள்ளக் கூடாது.

தாகத்துடன் வந்த பாட்டி

முன்னொரு காலத்தில் அவ்வைப் பாட்டி வந்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினாள். தாகம் நாக்கைப் பிடுங்கியது. கதவு திறக்க நாளியானது.

வெயிலில் வந்தவள் தகிப்பாறத்தான் வந்தாள். ஒரு மடக்கு தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு, கொஞ்சம் கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்து ஓய்வு கொள்ள வேண்டும்.

‘வீட்டினுள் யாரும் இல்லையோ?’ என நினைத்தவள், ‘ஏதொன்றுக்கும் இன்னொரு தடவை தட்டுவோமே’ என்று கதவைத் தட்ட நினைத்தபோது, கதவின் தாள் நீக்கப்பட்டிருப்பது கண்ணில்பட்டது.

‘ ‘அம்மணீ’’ என்று குரல் உயர்த்தி அழைத்தார் அவ்வை.

‘ ‘உள்ளே வாங்க பாட்டி’’ என்றது ஒரு பெண் குரல் தீனமாக.

எந்தப் பக்கத்தில் இருந்து குரல் வந்தது என்று நிதானிக்க முடியாதே. வெளிச்சம் கம்மியான இடத்தில் ஒரு பெண் பிள்ளை. அவளை மறைத்திருந்தது நெல் உமியின் குவியல். எழுந்து நின்றால் உடல் முழுதும் தெரியும். அந்த நெல் உமிக் குவியல்தான் அவள் உடை. ‘பகீர்’ என்றிருந்தது. அவ்வைக்குத் தாங்கிக் கொள்ள முடியலை. ‘முருகய்யா’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

சுற்றிலும் கவனித்துப் பார்த்தார். ‘ ‘குடிக்கத் தண்ணி வேணுமானால் அந்தப் பானையில் இருக்கு. பக்கத்திலுள்ள சிரட்டையினால் கோரிக் குடியுங்கள்...’’ என்றாள் பெண் பிள்ளை.

அவ்வையார் அவளுக்கும் சிரட்டையில் ஒரு முடக்குத் தண்ணீர் கொண்டு தந்தார். வலது கையினால் சிரட்டையைப் பிடித்துக் கொண்டு, இடது கையினால் அவ்வையின் குடங்கையைப் பிடித்துக் கொண்டதும் அந்தத் தொடுதல் இருவரையும் என்னவோ செய்தது.

அவ்வையார் - பெண் பிள்ளை

உரையாடல்

இப்படி ஆதரவாக யார் தருவார் இந்த அத்துவான பூமியில் குடிக்கத் தண்ணீர்?

அவள் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டார். அந்த மண் வீட்டின் மேல் பகுதியை சுற்றிலும் பார்த்தார். இந்த ஆண்டின் ஒரு மழைக் காலத்தைத் தாங்கும் என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

‘‘மகளே மகளே... ஏன் இப்படியெல்லாம் நேர்ந்தது சொல்லு?’’ என்று கேட்டுக் கொண்டார் அவ்வையார்.

‘ ‘பாட்டீ, என் கதையைக் கேட்க நீ மேலேயிருந்து இறங்கி வந்தாயா?’’ என்று நினைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்.

"பாட்டீ, நான் ஏழு அண்ணன்மாரோடு பிறந்தவள். நாங்கள் எட்டு பேர். இப்போதும் எட்டு பேர்தான் இருக்கிறோம். அண்ணன்மார் வேலைக்குப் போயிருக்கிறார்கள். உழவு வேலை.

காலையில் போனால் விளக்கு வைக்கும் நேரத்துக்கே வருவார்கள். மதியக் கஞ்சி அவர்களுக்கு அங்கேயே ஊற்றுவார்கள். கஞ்சி போக, ஆளுக்கு ஒரு படி நெல்லு கூலியாகக் கிடைக்கும்.

அதைக் கொண்டு வந்த பிறகு ஏழு படி நெல்லையும் மரத் திருகையில் இட்டுத் திருகி எடுத்துப் புடைத்து உமியை நீக்கி அளந்தால் ஒரு படி அரிசிக்குத் திறனாகவே இருக்கும்."

- கதை வரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x