Published : 26 Jul 2014 02:45 PM
Last Updated : 26 Jul 2014 02:45 PM

உண்மையான கவி உணர்ச்சி

திருமூலர் என்ற பெரியார் ஒரு பெரிய விஷயத்தைத் தெளிவு படுத்துகிறார். கடவுள் எங்கும் நிறைந்துள்ள வஸ்து. அந்த ஒரு பொருள் வானவெளியில் எவ்வளவு தூரம் எட்டிப்போனாலும் வெற்றிடம் என்பது இல்லாதபடி நிறைந்துள்ளது. மேலே போனாலும் சரி, பாதாளத்துக்குப் போனாலும் சரி, அணுவென்று அணுவுக்குள் அணுவென்றும், இறுதியில்லாதபடி அந்தப் பொருள் செறிந்துகொண்டே போகும் தன்மையதுதான். ஆனால், அப்படியே சொல்லிக் கொண்டி ருந்தால் சோர்வு ஏற்பட்டுவிடும். மனம் பற்றாது. அதைக் கவியில் அமைத்துவிட்டாலோ ஞாபகத்தில் அப்படியே இருந்துவிடும்.

மேல் நாட்டார் ‘சிரியஸ்’ என்ற நட்சத் திரத்தைப் பற்றி ரொம்பவும் ஆராய்ந் திருக்கிறார்கள். அதன் தூரம் எவ்வளவு என்பதைக் கணக்கிட்டார்கள். புவி, சூரியனைச் சுற்றிக்கொண்டு வருகிறது. ஒன்பது கோடி மைல் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே தூரம். அதனால் சூரியனிடமிருந்து நமக்கு ஒளி வர எட்டு நிமிஷம் ஆகிறது. சில நட்சத்திரங்களிடமிருந்து ஒளி நமக்கு வருவதற்கோ ஆயிரக் கணக்கான வருஷங்கள் ஆகுமாம்!

அப்படியானால் நட்சத்திரங்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். கீழேயும், பக்கத்திலேயும் இப்படித்தான். டிண்டால் என்ற பொருளியல் ஆசிரியர் ஆல்ப்ஸ் மலை மேலே இருந்து கீழ்நோக்கிப் பார்த்தார். அந்த நேரத்தில் ஒரே மேகப்படலம் எங்கும் பரவி பூமியை அப்படியே மறைத்துக் கிடந்தது. அதைப் பார்த்தவுடன், “ஆகா! நாம் வாழும் பூமியை நானும், என் உள்ளத்தில் எழுகின்ற அதிசயமும் கோடானு கோடி வருஷங்களுக்கு முன் உருவ வேறுபாடு, குண வேறுபாடு ஒன்றும் இல்லாத மேகப் பிண்டமாய்த்தானே சூரியனோடு ஒட்டிச் சுற்றி வந்திருக்க வேண்டும். இந்த மேகப் படலம் அந்த அபூர்வமான மேக மண்டலத்தை அல்லவா நினைப்பூட்டுகிறது!”

இப்போது திருமூலர் அடைந்த அதிசயத்தைப் பார்க்கலாம்.

“ஆர் அறி வார் எங்கள் அண்ணல் பெருமையை!

ஆர் அறி வார் அந்த ஆழமும் நீளமும்!

பேர் அறி யாத பெருஞ் சுடர் ஒன்(று), அதின்

வேர் அறி யாமை விளம்புகின் றேனே.”

தனக்குத் தெரியாததை விளக்கப் போகிறாராம்; தான் கண்டது அவ்வளவு அதிசயமான பொருள்!

இந்த விதமாக ரஸங்கள் கலைகளிலே வர வேண்டும். சிற்பம், ஓவியம், நாட்டியம், இசை- பிறகு கவி- இவைகளிலே பாவத்தோடு ரூபமாக வெளி வர வேண்டும். ரூபமாக வெளிவரவில்லையானால் கலையல்ல. வியப்பாகிய உணர்ச்சி மக்களுக்குச் சாமானிய மான காரியம், அதாவது அற்புத உணர்ச்சி சாமானியம். ஆனால் கவியில் அற்புத உருவம் வருவதென்றால் அபூர்வம்தான். தெய்வீகம்தான்.

இந்த முறையிலேயே மற்ற ரஸங்களையும் ஆராய்ந்தால் உண்மையான கவி உணர்ச்சி உண்டாவதற்கு ஏதுவாகும். கவியுணர்ச்சி மாத்திரம் அல்ல, மற்ற கலைகளிலும் திருத்த மான உணர்ச்சி உண்டாகக் காரணமாகும்.

(டி.கே.சி எழுதிய ‘அற்புத ரஸம்’ கட்டுரையிலிருந்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x