Published : 29 Oct 2017 11:28 AM
Last Updated : 29 Oct 2017 11:28 AM
பு
ரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று நவதிருப்பதி தரிசன மக்கள் திரளில் தனியனாக உணர்ந்த கணங்கள் உண்டு. பெருமாளும் நானும் கவிதையுமாய் உணர்ந்த நிமிஷங்களும் அதில் அடங்கி இருக்கின்றன. நம்மாழ்வாரின் பாசுரம் பெற்ற தாமிரபரணி (தண் ஆன் பொருநை) கரைப் பதிகள்தான் நவதிருப்பதிகள். நம்மாழ்வாரின் ஈரத் தமிழ்ப் பாசுரமும் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசிய வரிகளும், நவீனக் கவிஞர் சபரிநாதன் கவிதையும் உடன்வர நவதிருப்பதிகளுக்குப் பயணித்தது விசித்திரமான யாத்திரை அனுபவம்.
நவதிருப்பதிகளில் செவ்வாய்க்கான பதி திருக்கோளூர். நம்மாழ்வாரின் மௌனத்தைக் கலைத்த, நம்மாழ்வாரைத் தவிர ‘தேவு மற்று அறியாத’ மதுரகவியாழ்வாரின் அவதாரத் தலம். கிடந்த கோலத்தில் வைத்த மாநிதிப் பெருமாளின் திருவடிகள், காண்பவர் நெஞ்சத்தினுள் நீண்டு கிடக்கின்றன. சபரிநாதனின் கவிதை வரியில், ‘சித்தம் குலைத்தலம்பும் நிச்சலனத்தின் சிலாரூபம்’ இங்கு மனத்தால் உண்ணப்படுகிறது.
‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்க’ திருக்கோளூரை அடைந்த இளம் பெண்ணை, பிரேமத்தில் பெண்பேச்சாய்ப் பெருகிச் செல்லும் திருவாய்மொழிப் பாசுரம், கனிந்த வர்ணத்தில் வரைந்து காட்டுகிறது. உரைகாரர் விளக்குவதுபோல, பெரும்பசியனுக்குக் கிடைத்த சோறுதான் உண்ணும் சோறு; பெரு விடாயனுக்குக் கிடைத்த நீர்தான் பருகும் நீர். அப்படிப்பட்ட பெருந்தாகம்தான், நம்மாழ்வார் பாசுரப் பெண்ணை வைத்தமாநிதிப் பெருமாளை நோக்கிச் செலுத்துகிறது. அதே சமயம் தாகம் குறைந்தவனும் விடாய் ஆற்றப்படுவது திருக்கோளூரில் நிகழத்தான் செய்கிறது.
‘திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்’ என்னும் வைணவ ரகசியக் கிரந்தம், வாய்மொழிக் கவிதையாகத் திருக்கோளூரின் மீது மாயத் தன்மையைப் பூசுகிறது. ராமானுஜர் தமது திவ்யதேச யாத்திரையில் திருக்கோளூரை நோக்கிச் செல்லும்போது அவ்வூரிலிருந்து வெளியேறுகிற பெண்ணைக் கண்டார். அவளைப் பார்த்து, ‘எங்கு நின்றும் புறப்பட்டபடி?’ என்று வினவ, அந்தப் பெண் ‘திருக்கோளூரில் நின்றும்’ என்று பதிலளித்தாள். அது கேட்டு உடையவர், ‘அவ்வூர் புக்க பெண்களும் வெளியே போகக் கடவர்களோ?’ என்று வியந்தாராம். அப்பெண்ணோ எண்பத்தொரு வைணவப் பெரியார்களின் வாழ்க்கை உண்மைகளைப் புனைவில் பொதிந்து ராமானுஜரிடம் கூறத் தொடங்கினாள். ‘அத்தகைய வாழ்க்கை நெறி வாய்க்கப் பெறாத நான் எங்கிருந்தால் என்ன? முயல் புழுக்கை வரப்பில் கிடந்தால் என்ன? வயலில் கிடந்தால் என்ன?’ என்பது அவள் தரப்பு வாதம். ‘அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போல?’ என்றெல்லாம் வினவிச் செல்லும் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை நம்முடனேயே பயணித்து வருவதை சூட்சுமமாய் உணர முடிகிறது. அந்த ரகசியம் மனத்துள் உறைந்துவிடுகிறது.
அப்படி உறைந்து நிற்பதுதான் திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாளின் நெடிய உருவமும். பார்க்கும் அந்தக் கணத்தில்,
‘கிடந்த நாள் கிடந்தாய்; எத்தனை காலம்
கிடத்தி? உன்திரு உடம்பு அசைய’
என்ற திருப்புளிங்குடிப் பாசுர வரிதான் மனத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது. குபேரன் திருமகனைக் காமக் குறிப்புடன் நோக்க, அதனால் சாபம் பெற்றுச் செல்வம் இழந்து, திருக்கோளூரில் தவம் புரிந்து, இழந்த நிதியில் பாதியைப் பெற்றதாகப் புராணம் சொல்கிறது.
அளக்கும் கலனான மரக்காலைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் வைத்தமாநிதிப் பெருமாள், இடது கையை உயர்த்தி இன்னும் வேறு எங்கு செல்வம் உள்ளது என்று மையிட்டுப் பார்க்கிறாராம். இழந்த செல்வத்தை வேண்டி இங்கு வழிபட்டால் திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் வைத்தமாநிதிப் பெருமாளின் பேரெழிலில் தொலைந்த நெஞ்சம்?
ஒத்திசைவும், அதுவே ஆகும் தன்மையும் இணையும் புள்ளியில் தொன்மம் பிறப்பதாகச் சொல்கிறார்கள். திருக்கோளூர் அத்தகைய தொன்மத்தின் ஜன்ம ஸ்தானம். பிராகாரங்களில் நடையாடும்போதும், படிகளில் ஏறி இறங்கும்போதும், சபரிநாதனின் ‘கீழிறங்கிச் செல்லும் படிகள்’ கவிதை வரிகள், காலத்தைச் சுற்றிப் பிணைந்துகொள்கின்றன:
‘யாமங்களில் நெட்டிலிங்க வரிசையை அலக்கழிக்கும்
சூறையைப் போலக்
கபாலத்துள் ஒரு கேள்வி:
எங்கிருந்து வந்தோம் நாம்?’
-ந. ஜயபாஸ்கரன், கவிஞர்,
‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப்பயணம்’
முதலான கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT