Published : 21 Oct 2017 10:45 AM
Last Updated : 21 Oct 2017 10:45 AM
மூ
ணு வயசுல இருந்து, இன்னிக்கு வரைக்கும் என்கூட நட்பா இருக்குறது கண்ணப்பன். என் வீட்டுக்கு எதுத்த வீடு. அவரோட கொள்கைக்கும் என்னோட கொள்கைக்கும் சுத்தமா உடன்பாடு இருக்காது. ஆனாலும் எங்களுக்குள்ள அப்படியொரு ஆழமான நட்பு.
என் மேல ரொம்ப பிரியமா இருப்பாரு கண்ணப்பன். சமூக சேவையிலும் சிறுபிராயத்துல இருந்தே எங்க ரெண்டு பேருக்கும் ஆர்வம் அதிகம். இன்னிக்கு வரைக்கும் எங்க ஊர்ல பார்த்தீனியம் செடி வளராம நாங்கதான் கவனிச்சுகிட்டு இருக்கோம். இதே மாதிரி நண்பனா அறிமுகமாகி, அண்ணனா மாறுனவரு பரமார்த்தலிங்கம். இவரை சின்ன வயசுல எங்க பெரியப்பாதான் பள்ளிக் கூடத்துல சேர்த்துவிட்டாரு. வாலிப பிராயத்துல எனக்கு ஒரு தடவை டைபாய்டு காய்ச்சல் வந்துருச்சு. மூணு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அப்போ எனக்கு தாயா, தாதியா கூடவே இருந்து உதவி செஞ்சது பரமார்த்தலிங்கம்தான். இதே போலத்தான் மேலத்தெரு துரைச்சாமி அண்ணனும்!
இதே போல் எங்க ஊருக்கு தெக்குப் பக்கம் உள்ள அனந்தசுவாமிபுரத்தை சேர்ந்த ரகுராஜனும் நல்ல நண்பன். திருமணம் ஆகும் வரையிலும் எல்லாருமே எங்கள் வீட்டில்தான் இருப்போம். எங்க ஊரைச் சுத்தி, எந்தக் கோயிலில் கொடை நடந்தாலும் நாங்க நாலு பேரும் சேர்ந்து போய் வில்லுப்பாட்டு கேட்கதும், சாமியாட்டத்தை ரசிச்சு பாக்கதுமா குதூகலமா இருப்போம். நான் பி.எட் படிச்சப்போ, என்னோட ஆழமான நட்பில் இருந்தவர் பி.கே.மணி. பரமக்குடிக்காரரான இவரு சிறந்த கல்வியாளர். பிராமண சமூகத்தை சேர்ந்த அவரோட முன்னோர்கள், ராமநாதபுரம் ராஜாவுக்கு ஆஸ்தான ஜோதிடர்களாக இருந்துருக்காங்க. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி மணி, அவரோட மகனின் திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். அந்த அழைப்பிதழில் சந்தன கருப்பன் சுவாமி துணைன்னு போட்டுருந்துச்சு. உடனே நான் அவருகிட்ட ‘கருப்பன் எல்லாம் எங்கள் சாமியல்லவா? நீங்க எடுத்துகிட்டீங்களா?’ன்னு கேட்டேன். ஒரு தடவை அவர் வீட்டுக்கு போயிருந்தேன். அப்போதான் அதுக்கு விடை கிடைச்சுது. அவர் வீட்டு பூஜையறையில் வெள்ளி அரிவாளும், இன்னொரு மூலையில் பெரிய அரிவாளும் இருந்துச்சு. ஆர்வம் தாங்காமா இது என்னன்னு கேட்டேன். இது எங்களோட சந்தன கருப்பன்னாரு. அவரோட சந்தனக்கருப்பன் கோயில்ல எல்லா சாதியினரும் பூஜைகள் செய்வாங்க. இது எவ்வளவு பெரிய சமூக ஒற்றுமை? இதைப் பத்திக் கேட்டப்போதான், ‘நாங்கள் எல்லாம் தெக்கத்தி தமிழ் பிராமணர்கள்’னு தமிழ்ப் பாடம் எடுத்தாரு. என்னோட நட்பு பட்டியல்னு சொல்றது இப்படி ஆச்சரியங்களால் நிரம்புனவங்கதான்!.
புதுக்கோட்டை மாவட்டம், அத்தாணியில் பணி செஞ்சப்போ, மருத்துவர் இளங்கோவனுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டுச்சு. அவரோட பாசத்தை அளவிட்டே சொல்ல முடியாது. கலை இலக்கியப் பெருமன்றம் எனக்கு ஏற்படுத்தித் தந்த நட்புப் பட்டியல் ரொம்பப் பெருசு. கலை இலக்கிய பெருமன்ற வழி உறவாகி, எல்லா வகையிலும், இப்போதும் தம்பியா இருக்கது நாகர்கோவில், செட்டியத் தெரு சொக்கலிங்கம். உதவித் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவன். இயல்பிலேயே வசதியான குடும்பத்தில் பிறந்தவன். என் மகளின் திருமணம் முடிஞ்சு பீரோ, கட்டில் என சீதனப் பொருள்களை வண்டி பிடித்துக் கொண்டுசென்றோம். அந்த ஊர்ல அதையெல்லாம் இறக்கி வைக்க ஆட்கள் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்துக்கிட்டு இருந்தேன். பீரோவை சொக்கலிங்கமும், இன்னொரு நண்பன் முடிசூடும் பெருமாளும் ஆளுக்கு ஒரு பக்கமாய்த் தலைச்சுமடாய்த் தூக்கிட்டுப் போயி இறங்கி வெச்சுட்டாங்க. இந்த நட்பின் நிழலில் ஒதுங்கி நிற்குற ஆனந்தம் வேறு எதுல கிடைச்சுற போகுது? இதே போல கடுக்கரை ஆறுமுகம் பிள்ளையுடனான என் நட்பும் ஆழமானது.
தூத்துக்குடியில கணபதி சுப்பிரமணியம். வழக்கறிஞர். சின்ன வயசுல இருந்தே எனக்கு நெருக்கமான இவன், நான் எழுதுனதை, மீண்டும் செம்மையாக்கி உதவி செய்வான். தன்னோட 15 வயதில் என்னோடு வந்து ஒட்டிக்கொண்ட தோவாளை எஸ்.கே.கங்கா இப்போ 50 வயதைக் கடந்தும் என்னோடு நட்பில் இருக்கான். நண்பன், வழிகாட்டி, உடன் பணி செய்பவன், மொழிபெயர்ப்பு உதவி அப்படின்னு எந்த அடையாளத்துக்குள்ளும் சடக்குன்னு பொருந்திப் போயிடுவான். எனது ‘மறுபக்கம்’ நாவல் ஆங்கில மொழி பெயர்ப்பை அவனும் நானும்தான் சேர்ந்து செஞ்சோம்.
கோவையைச் சேர்ந்த நண்பர் பாலச்சந்திரன் நெருக்கமான தம்பியாகவும், இன்று வரை உதவி செய்பவராகவும் இருப்பவர். மார்க்சிய அறிஞரான இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இலக்கியத்தில் வழிகாட்டும் பல செயல்களை செஞ்சுருக்காரு. ‘மறுபக்கம்’ நாவலை முழுமைப்படுத்தியதில் அவருக்கும் முக்கிய பங்கு இருக்கு. இதே மாதிரி தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் காமராஜ் 40 வருசமா நெருங்குன நண்பர். கூர்மையான அறிவாளி. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரனும் ஈத்தாமொழி சண்முகமணியும் திருவனந்தபுரம் ஸ்ரீதர் அந்தாஸும் மறக்கவே முடியாத நண்பர்கள்.
என்னோட நட்பு சூழ் உலகை என்னோட ஆசிரியப் பணி சார்ந்து, இலக்கியப் பணி சார்ந்து, கலை இலக்கிய பெருமன்ற அமைப்பு சார்ந்துன்னு மூணா பிரிச்சுப் பார்க்குறேன். அதில் கலை இலக்கிய பெருமன்றம் சார்ந்து நூற்றுக்கணக்கான தம்பிகளும் தோழர்களும் இருக்காங்க. ஆசிரியப் பணி, இலக்கியப் பணி சார்ந்து சொல்லணும்னா இன்னமும் பெரும் பட்டியலும் இருக்கு.
(தொடரும்...)
-பொன்னீலன், மூத்த எழுத்தாளர்,‘புதிய தரிசனங்கள்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: ponneelan1940@gmail.com
கேட்டு எழுதியவர்: என்.சுவாமிநாதன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT