Published : 01 Jun 2023 06:32 AM
Last Updated : 01 Jun 2023 06:32 AM
ராமநாதபுரம்: கமுதி அருகே இருந்து ராஜபாளையத்துக்கு குலதெய்வ வழிபாட்டுக்காக 15 நாட்கள் 214 மாட்டு வண்டிகளில் பயணம் செய்த 56 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த ஊர் திரும்பினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள அகத்தாரிருப்பு தாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பரமக்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள 56 கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களது குலதெய்வம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கூடமுடைய அய்யனார் கோயில், பொண்ணு இருளப்பசாமி கோயில், தைலாகுளம் வீரமாகாளி கோயில் ஆகும்.
இந்த 56 கிராமங்களைச் சேர்ந்த பங்காளிகள் 200 ஆண்டுகால பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடும்பங்களுடன் மாட்டு வண்டியில் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து புறப்பட்டு 15 நாட்கள் பயணமாக 3 குலதெய்வ வழிபாட்டை முடித்துவிட்டு ஊர் திரும்புவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா தொற்றால் குலதெய்வ வழிபாட்டுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 18-ம் தேதி அதிகாலை அகத்தாரிருப்பு கிராமத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 214 மாட்டு வண்டிகள், 753 டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களில் சென்றனர். நவீன காலத்திலும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்ற இம்மக்களை, அவர்கள் செல்லும் வழிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதுகுறித்து நரியன் சுப்பராயபுரத்தைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் முத்துக்குமார் கூறியதாவது: ஒரு மணி நேர பயணத்தில் செல்லக்கூடிய தூரத்தை, முன்னோர்களின் பாரம்பரியத்தை காப்பதற்காக மாட்டு வண்டியில் பயணித்தோம்.
இந்த 15 நாட்கள் பயணத்தில் 3 குல தெய்வங்களின் பங்காளிகள் குலதெய்வ வழிபாட்டை முடித்து நேற்று முன்தினம் மாலை கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கம் குண்டாறு பகுதிக்கு வந்தோம். அங்கு சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு தங்கினோம்.
அங்கு நேற்று அதிகாலை பூஜை செய்துவிட்டு, காலை 8 மணிக்கு புறப்பட்டோம். காலை 9.45 மணி முதல் 12 மணி வரை அனைத்து வண்டிகளும் அகத்தாரிருப்பு கிராமத்தை வந்தடைந்தது. அங்கு பிடிமண் வைத்து கோயில் அமைக்கப்பட்டுள்ள 3 குல தெய்வங்களுக்கும் பூஜை செய்துவிட்டு, அந்தந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT