Published : 25 May 2023 07:27 PM
Last Updated : 25 May 2023 07:27 PM
புதுச்சேரி: அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணை காதலித்து, வள்ளலார் சன்மார்க்க முறைப்படி புதுச்சேரி கணினிப் பொறியாளர் இன்று திருமணம் புரிந்தார். திருக்குறள், திருவருட்பா நூல்கள் மீது உறுதியேற்றனர்.
புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த சுற்றுலாயியல் அறிஞரான கண்ணன் - பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியை நோயலின் மகன் அபிலாஷ் நெதர்லாந்து நாட்டில் பணியில் இருக்கிறார். இவருக்கு அதே இடத்தில் பணிபுரியும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த பாத்திமா ஹப்பி என்ற இஸ்லாமிய பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு 2015-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
அபிலேஷின் தந்தை இந்து. தாய் கிறிஸ்தவர். காதலிக்கும் பெண் இஸ்லாமியர். இதனால், இரு வீட்டார் சம்மதத்துடன் சமயம், சாதி, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து இறைவன் ஒருவனே என்ற அடிப்படையில் அன்பினை மட்டுமே மையப்படுத்தி வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதன்படி இந்தியா வந்த இவர்கள், சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சமரச சத்திய சாதனை சங்கம் எனப்படும் வள்ளலார் அவையில் உலகப் பொதுமறை திருக்குறளின் மீதும் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் திருமுறையின் மீதும் உறுதியேற்று வள்ளலார் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் சன்மார்க்கிகள் கலந்துகொண்டு வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் ஆறாம் திருமுறை பாடலை அகவல் பாராயணம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
இதில் இந்து முறைப்படியும் இல்லாமல் முஸ்லிம், கிறிஸ்தவ முறைப்படியும் இல்லாமல் சன்மார்க்க முறைப்படி மாங்கல்யத்துக்கு பதிலாக தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிந்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் கூடியிருந்தோர் மலர் தூவி மணமக்களை வாழ்த்தினார்கள். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் திருக்குறள் மற்றும் திருஅருட்பா நூல்கள் மீது மணமக்கள் உறுதியேற்று கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT