Published : 24 May 2023 06:15 AM
Last Updated : 24 May 2023 06:15 AM
ஓசூர்: அரசின் புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையால், ஓசூர் பகுதியில் பன்னீர் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பசுமைக் குடில் மூலம் ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
20 கிராமங்களில் நர்சரி: இதேபோல, திறந்தவெளியில் பன்னீர் ரோஜா, பட்டன் ரோஜா உள்ளிட்ட மலர்களையும் விவ சாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
மலர் சாகுபடியை மையமாக வைத்து பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அகலக்கோட்டை, பாலதோட்டன பள்ளி, மரகததொட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நர்சரிகள் மூலம் ரோஜா நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியிலும் பல விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
50 வகையான ரோஜாக்கள்: இங்கு பன்னீர் ரோஜா, பட்டன், கில்லி எல்லோ, மூக்குத்தி, மேங்கோ எல்லோ, நோப்ளஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ரோஜா நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாற்றுகள் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.
இந்நிலையில், தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்ட பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுத்து வருவதை தொடர்ந்து, ஓசூர் பகுதியில் பன்னீர் ரோஜா நாற்றுகள் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.
நாற்றுகள் விற்பனை: இதுதொடர்பாக நர்சரி விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதி ரோஜாவுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்ததால், பசுமைக் குடில் மற்றும் திறந்த வெளியில் ரோஜா செடிகளை விவசாயிகள் வளர்த்து மலர்களை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர். கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், ரோஜா சாகுபடி விவசாயிகள் மாற்றுப் பயிருக்கு மாறும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெறும் அரசின் நடவடிக்கையால், பன்னீர் ரோஜாவுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
எனவே, விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, இப்பகுதியில் உள்ள நர்சரிகளில் 5 லட்சம் பன்னீர் ரோஜா நாற்றுகளை உற்பத்தி செய்துள்ளோம். ஒரு நாற்று ரூ.10 முதல் ரூ.22 வரை விற்பனையாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT