Last Updated : 23 May, 2023 06:55 AM

1  

Published : 23 May 2023 06:55 AM
Last Updated : 23 May 2023 06:55 AM

‘ஆட்டிசம்’ பாதிப்பு இருந்தும் தனித் திறமையால் சம்பாதிக்கும் கோவை பள்ளி மாணவர்

தான் வரைந்த ஓவியங்கள் , விருதுகளுடன் யோகேஷ் கண்ணன்.

கோவை: ‘ஆட்டிசம்’ பாதிப்பு இருந்தும், தனது ஓவியத் திறமையால் சம்பாதித்து வருகிறார் கோவை சிறப்பு பள்ளி மாணவர். கோவை கணபதி வரதராஜூலு நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். சுமை தூக்கும் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா. இவர்களின் இரண்டாவது மகன் யோகேஷ் கண்ணன் (17).

இவருக்கு 6 வயதாகும்போதுதான் ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை பெற்றோர் உணர்ந்துள்ளனர். மற்ற குழந்தைகளுடன் இணைந்து பழகினால் சரியாகிவிடுவான் என்று முதலில் நினைத்த பெற்றோர், அருகில் உள்ள பள்ளியில் சேர்த்துள்ளனர்.

ஆட்டிசம் பாதிப்பு இருந்ததால், அந்த பள்ளியில் பயின்ற மற்ற குழந்தைகளோடு யோகேஷால் இணைந்து பழக இயலவில்லை. யோகேஷ் தனிமைப்படுத்தப்படுவதை அறிந்த பெற்றோர் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இருப்பினும், ஒரு படத்தை காண்பித்தால் அப்படியே வரையும் ஆற்றல் யோகேஷூக்கு இருப்பதை அறிந்து, அதில் அவனது கவனத்தை செலுத்த ஊக்கமளித்துள்ளனர்.

பின்னர், கோவை கணபதியில் உள்ள ‘நிதில்யம்’ சிறப்புப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அங்கு யோகேஷின் திறமையை பட்டை தீட்டியுள்ளனர். இதன்காரணமாக, கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்டு யோகேஷ் பரிசு பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியை தலைமையிடமாக கொண்ட ‘யுனைடெட் ஸ்கூல்ஸ்’ அமைப்பு (யுஎஸ்ஓ) 2020-ம் ஆண்டு சிறப்பு குழந்தைகளுக்கான தேசிய அளவிலான ஓவியப் போட்டியை நடத்தியது. அதில் கலந்துகொண்ட யோகேஷ், சிறப்பு பரிசு பெற்றார்.

சேலைகளின் டிசைனில் பயன்படுத்தப்பட்ட யோகேஷ் வரைந்த ஓவியங்களின்
நிறக்கலவை.

இந்தப் போட்டியில் யோகேஷ் வரைந்த ஓவியத்தைக் கண்ட ‘மித்ரா ஃபார் லைஃப்’ என்ற தன்னார்வ அமைப்பு, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ‘6 யார்ட்ஸ் பிளஸ்’ என்ற நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. அவர்கள், யோகேஷ் பயிலும் பள்ளியை அணுகி, தனது 2 ஓவியங்களில் யோகேஷ் பயன்படுத்திய நிற கலவைகளை தங்களது நிறுவன சேலைகளுக்கு பயன்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதோடு, யோகேஷின் எண்ணத்தில் உருவான நிற கலவைகளை பயன்படுத்தியதற்கு ஈடாக, விற்பனையாகும் சேலையின் மதிப்பில் 20 சதவீதத்தை அளிக்கவும் ஒப்பந்தம் செய்துகொண்டனர். அதன்படி, தற்போதுவரை 14 சேலைகள் யோகேஷ் பயன்படுத்திய நிற கலைவகளை கொண்டு வடிவமைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் யோகேஷூக்கு இதுவரை ரூ.27,170 அந்த நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

எல்லையில்லா மகிழ்ச்சி: இதுதொடர்பாக யோகேஷின் தாய் பிரேமலதா கூறும்போது, “யோகேஷ் குறித்து தொடக்கத்தில் மிகுந்த கவலை அடைந்து, நம்பிக்கை இல்லாமல் இருந்தோம். தற்போது யோகேஷ் தனது தனித் திறமையால் வருவாய் ஈட்டியது எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொகை யோகேஷ் ஓவியம் வரைய பயன்படுத்தும் பொருட்கள் வாங்கவும், கல்விச் செலவுக்கும் உதவிகரமாக இருக்கும்” என்றார்.

நிதில்யம் சிறப்பு பள்ளியின் இயக்குநர் காயத்திரி சம்பத் கூறும்போது, “ஆட்டிசம் என்பது மூளையின் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் பாதிப்பு ஆகும். இது ஒரு நோயல்ல. ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், பிறருடன் பழகுவதிலும், தகவல் பரிமாறிக்கொள்வதிலும் தாமதம் ஏற்படும்.

குழந்தைகள் கண்ணோடு, கண் பார்த்து பேசமாட்டார்கள். பெயர் சொல்லி கூப்பிட்டாலும் திரும்பி பார்க்க மாட்டார்கள். மற்றவர்களுடன் இருந்து விலகி இருப்பது இவர்களுக்கு ‘நெகட்டிவ்’ ஆக பார்க்கப்பட்டாலும், அவ்வாறு விலகி இருக்கும் நேரத்தை ‘பாசிட்டிவ்’ ஆக மாற்றம் முடியும் என்பதற்கு யோகேஷ் ஓர் உதாரணம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x