Last Updated : 20 Oct, 2017 11:24 AM

 

Published : 20 Oct 2017 11:24 AM
Last Updated : 20 Oct 2017 11:24 AM

நாற்காலிக் கனவு

 

டக்க முடியாத மாற்றுத்திறனாளிக்காகப் புதுமையான ஒரு நாற்காலியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து முடித்த எட்டு இளைஞர்கள். கடந்த வாரம் சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் நடந்த அறிவியல் திருவிழாவில் இந்த இளைஞர்களின் கண்டுபிடிப்புக்குப் பரிசு கிடைத்தது. பார்வையாளர்களைக் கவர்ந்த அந்தக் கண்டுபிடிப்பு கிளட்ச்சுடன் கூடிய சக்கர நாற்காலி!

சென்னை பனிமலர் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை முடித்த நவீன்குமார், ரத்தீஷ், ராமலிங்கம், நவீன், பிரபு, பிரகாஷ், அகிலன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் புதுமையான ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்கள். அந்தக் கண்டுபிடிப்பு சமூக நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்த வேளையில், மூளையில் உதித்ததுதான் இந்த நாற்காலி. மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் நான்கு மாதங்களுக்குள் இந்த நாற்காலிக்குச் செயல்வடிவம் கொடுத்துவிட்டார்கள் இவர்கள். தங்களுடைய சொந்தச் செலவிலேயே இந்த நாற்காலியை உருவாக்கியும் காட்டியிருக்கிறார்கள்.

நகரும் வசதி கொண்ட இந்த நாற்காலியில் நிற்கவும் முடியும் (கைப்பிடி உதவியுடன் நிற்கும் நிலைக்கு வருவது), உட்காரவும் முடியும்; படுக்கவும் முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற படுக்கும் வசதி கொண்ட இந்தச் சக்கர நாற்காலியைக் குறைந்த விலையில் இவர்கள் தயாரித்துள்ளனர். சந்தையில் இதுபோன்ற நாற்காலிகள் லட்சங்களிலேயே கிடைக்கின்றன. ஆனால், இந்த நாற்காலிக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தாலே போதும் என்று பெருமையாகச் சொல்கிறார்கள்.

disabled chair (1)

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ரத்தீஷிடம் கேட்டபோது, இந்த நாற்காலியின் பயன்பாட்டைப் பற்றிப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “இந்தக் கண்டுபிடிப்புக்காக வேலூரில் ஒரு மருத்துவமனையில் நாங்கள் ஆராய்ச்சியில் ஈட்டுபட்டோம். அப்போது விபத்துகளில் முதுகெலும்பு பாதிக்கப்படுவோர், பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு எப்போதும் படுத்த நிலையில் இருப்பதில் உள்ள கஷ்டங்களை அறிந்துகொண்டோம்.

இப்படி ஒரே நிலையில் படுத்து இருந்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதையும் அறிந்தோம். அவர்கள் குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை, 45 நிமிடங்கள் நிற்க வேண்டும். அதை மனதில் வைத்துதான் எங்கள் கண்டுபிடிப்பைத் திட்டமிட்டோம். எல்லா மருத்துவமனைகளிலும் இந்த வகை சக்கர நாற்காலிகளை வாங்குவது எளிதல்ல. அதிக விலையில்தான் சந்தையில் விற்கப்படுகிறது.

ஆனால், நாங்கள், மின் அம்சங்கள் உள்ள வசதியை நீக்கிவிட்டு, இயக்கமுறை வசதிகள் மூலம் இந்த நாற்காலியை வடிவமைத்துள்ளோம்.

அதனால், விலை குறைவுதான். சந்தை விலையைவிட சுமார் 90 சதவீதம் குறைவு” என்கிறார் ரத்தீஷ்.இந்தப் புதுமையான நாற்காலியைப் பரவலான பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியில் தற்போது இந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x