Published : 16 May 2023 02:15 PM
Last Updated : 16 May 2023 02:15 PM
முதியவர் ஒருவரின் ஒப்பனை வீடியோக்கள் அவருக்குப் பெரும் புகழையும் பணத்தையும் தேடிக் கொடுத்திருக்கின்றன. சீனாவைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஜு யன்சாங் சானலில் போடும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகிவிடுகின்றன. பெண்கள் பயன்படுத்தும் லிப்ஸ்டிக், கண் மை, க்ரீம், மஸ்காரா போன்ற ஒப்பனைப் பொருள்களை எல்லாம் பயன்படுத்தி, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் ஜு யன்சாங்.
ஏன் ஒப்பனை வீடியோக்கள் என்று கேட்பவர்கள், அவர் செயலுக்குப் பின்னால் இருக்கும் காரணத்தை அறிந்ததும் மனம் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சானலுக்குச் சந்தா செலுத்தச் சொல்கிறார்கள். அன்புக்குரியவர்களுக்காக நாம் எல்லாரும் ஏதாவது செய்துகொண்டேதான் இருக்கிறோம். அது எளிதான விஷயமாக இல்லாவிட்டாலும் செய்துவிட வேண்டும் என்று முயல்கிறோம். அப்படித்தான் ஜு யன்சாங்கும் இந்த ஒப்பனை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு ஜு யன்சாங்கின் பேரன் ஜியாவோ, மரபணுக் குறைபாட்டால் வரும் அரிய நோயால் தாக்கப்பட்டான். அந்த நோய்க்கான மருந்து சீனாவில் இல்லை. அமெரிக்காவில் மருந்து கிடைத்தாலும் சுமார் 80 லட்சத்துக்கும் மேல் செலவாகும். மருத்துவம் செய்ய இயலாவிட்டால் 18 மாதங்களே ஜியாவோ உயிரோடு இருப்பான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
மகனைக் காப்பாற்றும் முயற்சியில் ஜியாவோவின் அப்பா வீட்டை விற்றார். ஜு யன்சங் ஓய்வூதியப் பணத்தைக் கொடுத்தார். கடன் வாங்கினார்கள். ஆனாலும் பணம் போதவில்லை. என்ன செய்வது என்று குடும்பமே தவித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் பல பகுதி நேர வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் ஜு யன்சங். ஓர் ஒப்பனைப் பொருள்கள் விற்பனை நிறுவனத்தில், தான் ஒப்பனை செய்து வீடியோ வெளியிட்டால் வைரலாகும் என்கிற தன் யோசனையைத் தெரிவித்தார். ஆனால், இவரின் யோசனையை அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
மனம் தளராத ஜு யன்சங், ஒப்பனைப் பொருள்கள் குறித்து அறிந்துகொண்டார். தானே ஒரு வீடியோ சானலை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. ஒரு கட்டத்தில் ஜு யன்சங்கின் ஒப்பனை, பேச்சு, இந்த வீடியோவுக்குப் பின்னுள்ள காரணம் போன்றவை மக்களின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்டன. அதனால் பல லட்சக்கணக்கானவர்கள் சந்தாதாரர்களானார்கள். அதிலிருந்து கிடைத்த வருமானத்தை பேரனின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். இப்போது சீனாவிலேயே அந்த மருந்து கிடைப்பதாலும் சீனக் காப்பீட்டுப் பட்டியலில் மருந்தைச் சேர்த்ததாலும் செலவு குறைந்துவிட்டது. ஒப்பனை வீடியோக்களுக்கு மத்தியில் பேரனின் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் ஜு யன்சாங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT