Published : 09 May 2023 06:00 PM
Last Updated : 09 May 2023 06:00 PM
வண்ணங்கள் சூடிய ஒரு பொம்மையை நீளமான குச்சியில் தூக்கிக்கொண்டு அப்போதைய தெருக்களை வலம் வருவார்கள் பம்பாய் (சவ்வு) மிட்டாய் விற்பனையாளர்கள். பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, நீலம் எனக் கண்களைக் கவரும் ஏதாவது ஒரு வண்ணத்தில் கவுன் அணிந்திருக்கும் அந்த மிட்டாய் பொம்மை.
கைதட்டி கைத்தட்டி பொம்மையானது வேகமாக மணி ஓசையை ‘டிங்… டிங்…’ என எழுப்ப, ‘பம்பாய் மிட்டாய்… பம்பாய் மிட்டாய்…’ என்று குரல் எழுப்பி வீட்டிலிருக்கும் சிறுவர்களை வெளியே அழைப்பார்கள் விற்பனையாளர்கள். நாலனா அல்லது ஐம்பது காசுகளைப் பெற்றோர்களிடம் வாங்கிக்கொண்டு பொம்மையின் ஓசை கேட்டு ஓடி வருவார்கள் சிறுவர்கள். மிட்டாய் தான் பொம்மை. பொம்மை தான் மிட்டாய். அதாவது பொம்மையின் அடிப்பகுதி, மிட்டாயாக உருகி சிறார்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்.
வடிவங்கள் பலவிதம்
பொம்மை மிட்டாயானது கடிகாரம், பூ, மயில், நெக்லேஸ், மோதிரம், யானை, தேள், கொக்கு, பாம்பு போன்ற வடிவங்களில் உருவம் பெறும். சிறுவர்கள் விருப்பப்படும் வடிவங்களாக மிட்டாய்களை மாற்றும் கலைத்திறனில் மிட்டாய் விற்பனையாளர்கள் கை தேர்ந்தவர்கள். சில நொடிகளில் அழகான வடிவங்கள் உருவெடுத்து, சிறுவர்களிடம் மிட்டாயாகத் தஞ்சம் அடையும். கலைநயமிக்க மிட்டாய்கள், கைப்பக்குவத்தில் தெருக்களிலேயே பிறப்பெடுக்கும். சிறுவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் பம்பாய் மிட்டாய்க்கு ரசிகர்களாக இருப்பார்கள்.
நாவில் கரையும் உருவம்
வாங்கிய மிட்டாயை ருசித்துச் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கும். ஆனால், விருப்பப்பட்டு மிட்டாயாகப் பெற்ற கைக் கடிகாரத்தையோ, பிற உருவங்களையோ சிதைக்க அவ்வளவு சீக்கிரம் மனம் இடம் கொடுக்காது. சிறிது நேரம் கழித்து, மிட்டாயின் சுவை நினைவுகள் சாப்பிடத் தூண்ட, விதவிதமான மிட்டாய் உருவங்கள் நாவிலேயே கரைந்து போகும். அதுவும் கைக்கடிகாரத்தைக் கட்டிய இடத்திலிருந்து அப்படியே கடித்துச் சாப்பிடுவது தனி சுகம் தான். பல சிறுவர்கள் விரும்பி கேட்பதும் கைக்கடிகார மிட்டாயாகத் தான் இருக்கும். விற்பனை செய்பவரே கைக்கடிகார மிட்டாயை கையில் கட்டிவிடுவதைப் பலரும் விரும்புவார்கள். விலை உயர்ந்த கைக்கடிகாரம் கட்டிக்கொண்ட திருப்தியை பம்பாய் மிட்டாய் கடிகாரம் கொடுக்கும்.
திருவிழா நாட்களில் பம்பாய் மிட்டாயின் விற்பனை களைக் கட்டும். ஐந்தாறு விற்பனையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விற்பனையில் இறங்குவார்கள். திருவிழா நடக்கும் பகுதியில் இருக்கும் அனைத்துச் சிறுவர்களின் கைகளிலும் ஏதாவதொரு வகையில் பம்பாய் மிட்டாய் இடம் பிடித்திருக்கும்.
பால், சர்க்கரை, எலுமிச்சம்பழத்தின் உதவியுடன் பிறப்பெடுக்கும் பம்பாய் மிட்டாயின் சுவை நாவில் இனிமையாய் ஒட்டிக்கொள்ளும். பற்களின் இடுக்குகளிலும் சவ்வாய் அப்பிக்கொள்ளும். ‘பம்பாய் மிட்டாய் சாப்பிட்டா, நல்லா வாயக் கொப்பளிக்கணும்… இல்லனா பல் சொத்த வந்துடும்’ என வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எச்சரிப்பார்கள்.
பம்பாய் மிட்டாயைச் சவ்வு மிட்டாய் என்று அழைப்பதும் பொருத்தமாக இருக்கும். பொம்மையிலிருந்து சரியான பதத்தில் சவ்வாய் நீளும் மிட்டாயை வாங்கி, தங்களின் திறனைக் காட்டும் சிறுவர்களும் இருப்பார்கள். பம்பாய் மிட்டாய்களைக் கொண்டு புதுப் புது வடிவங்களை உருவாக்கி, தங்களின் கற்பனையைப் பொம்மை மிட்டாயின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
உருகும் மிட்டாய் பொம்மை
பொம்மையின் அடிப்பகுதி உருக உருக, விற்பனையாளருக்கு வியாபாரம் அதிகரித்ததை உணர்த்தும். மிட்டாயைத் தாண்டி அந்தப் பொம்மையைத் தரிசிப்பதற்காகவும், பொம்மை கண் சிமிட்டிக் கொண்டே கைதட்டுவதை ரசிப்பதற்காகவும் சிறுவர்கள் பம்பாய் மிட்டாயின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். சில நேரங்களில் பொம்மையைத் தூக்கிக்கொண்டு நடந்தும், சில நேரங்களில் சைக்கிளில் வலம் வந்தும் பம்பாய் மிட்டாயை விற்பனை செய்யும் மனிதர்களைப் பார்க்கலாம். வெகு அரிதாக 90களின் பிற்பகுதியில் டி.வி.எஸ் வண்டியில் வந்து விற்பனை செய்தவர்களையும் பார்க்க முடிந்தது.
காலப்போக்கில் பம்பாய் மிட்டாய் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. புதிய சாக்லேட் ரகங்கள் வணிக யுத்தியின் மூலம் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த அழகான பொம்மையின் அழிவு ஆரம்பமானது. கால காலமாக பம்பாய் மிட்டாய் விற்பனை செய்துகொண்டிருந்த விற்பனையாளர்களும் வேறு தொழிலை நாடிச் சென்றனர். இப்போது அரிதாகச் சிலரைப் பார்க்க முடிகிறது.
பம்பாய் மிட்டாய் பொம்மையை எங்கே பார்த்தாலும், சிறுவயது நினைவுகள் பலருக்கும் எட்டிப் பார்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT