Published : 08 May 2023 07:23 AM
Last Updated : 08 May 2023 07:23 AM

நேர்த்தியான மண் தளம், பழங்கால பொருட்கள் திருக்கோளூர் அகழாய்வில் கண்டெடுப்பு

திருக்கோளூரில் அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் காணப்படும் நேர்த்தியான மண் தளம்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருக்கோளூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வில் நேர்த்தியான மண் தளங்கள், செம்பு காசுகள், அடுப்பு, பாசிகள், சுடுமண் உருவங்கள் என ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே ஆதிச்சநல்லூரில் பழங்கால மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய, அகழாய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது. ஆதிச்சநல்லூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக வைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பணியை கடந்த பிப்.5-ம் தேதி தொடங்கியது.

அகழாய்வில் கிடைத்த பாசிகள்

அங்குள்ள சேர, சோழ, பாண்டீஸ்வரர் கோயில் அருகே 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. ஒரு குழியில் மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் 5 வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் 26 செ.மீ. நீளம்,18 செ.மீ. அகலம், 8 செ.மீ. உயரம் கொண்டதாக உள்ளது.

மற்றொரு அகழாய்வு குழியில் 4 தரைத்தளங்கள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நான்காம் தரைத்தளத்தில் அடுப்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர சிவப்பு, கருப்பு, மெருகேற்றப்பட்ட கருப்பு, மெருகேற்றப்பட்ட சிவப்பு மற்றும் பழுப்பு நிற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணம் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் வட்டம், உருளை, தட்டு வடிவங்களில் இந்த பாசிகள் உள்ளன. இரும்பு பொருட்கள், செம்பு காசுகள், சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன.

இவற்றை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு கிடைக்கும் பொருட்கள் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x