Published : 03 May 2023 04:17 AM
Last Updated : 03 May 2023 04:17 AM

சினிமா டிக்கெட் சேகரிப்பில் கோவை வியாபாரியின் ஆர்வம்: கின்னஸ் சாதனைக்கு முயற்சி

தியேட்டர்களில் விநியோகிக்கப் பட்ட டிக்கெட்களை சேமித்து பாதுகாத்துவரும் மும்மூர்த்தி. படம்: ஜெ.மனோகரன்

கோவை: கோவையில் கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை தியேட்டர்களில் விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களை சேமித்து பாதுகாத்து வருகிறார், கோவையை சேர்ந்த வியாபாரி மும்மூர்த்தி.

இது தொடர்பாக, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனது பூர்வீகம் பழநி அருகே உள்ள கிராமம். 1975-ம் ஆண்டு கோவைக்கு வந்த நான், பூமார்க்கெட் பகுதி தியேட்டரின் பின்புறம் பிரேம் கடை நடத்தி வருகிறேன். கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை கோவை, பழநியில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் நான் பார்த்த சினிமா டிக்கெட்களை சேமித்து வைத்துள்ளேன். நான் சிவாஜி கணேசனின் ரசிகன். இருப்பினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தையும் பார்ப்பேன்.

குறைந்தபட்ச டிக்கெட் விலை 53 பைசாவில் (1979) தொடங்கி 1989-ம் ஆண்டு ரூ.5.50 ஆக உயர்ந்தது. வட கோவை சென்ட்ரல் தியேட்டரில் விற்பனை செய்யப்பட்ட முட்டை போண்டாவுக்கும், காபிக்கும் என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அதே போன்று முருகன் தியேட்டரில் விற்பனை செய்யப்பட்ட பப்ஸ் மற்றும் முறுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஐந்து ரூபாய் இருந்தால் 3 படம் பார்த்துவிட்டு உணவும் உட்கொண்டு வீடு திரும்பலாம். தியேட்டர்களில் 200 டிக்கெட் விநியோகிக்கப்பட்டால் அதில் 100 டிக்கெட் சைக்கிள் வைத்துள்ள ரசிகர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும். அக்காலத்திலும் பிளாக்கில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடக்கும். 1979-80-ம் ஆண்டுகளில் ரூ.2.90 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் பிளாக்கில் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படும்.

கோவை மட்டுமின்றி கர்நாடக மாநிலம் ஹாசன் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் சினிமா பார்த்த டிக்கெட்களை சேமித்துள்ளேன். இது தொடர்பாக கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளேன். அவிநாசி சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் செயல்பட்டுவந்த முருகன் தியேட்டர் இன்று இல்லை. காந்திபுரத்தில் செயல்பட்டுவந்த அருள் தியேட்டர் தற்போது ஞாயிறு சந்தையாக மாறியுள்ளது.

சுங்கம் பகுதியில் இருந்த ஸ்ரீபதி தியேட்டர் தற்போது பல்பொருள் அங்காடியாக மாறியுள்ளது. காந்திபுரம் கீதாலயா தியேட்டர் இடிக்கப்பட்டு வணிக நிறுவனங்களாக மாறியுள்ளன. ஆர்எஸ்புரத்தில் செயல்பட்டுவந்த மாருதி தியேட்டர், காந்திபார்க் பகுதியில் இருந்த கென்னடி தியேட்டர், கூட்ஷெட் சாலையில் சாமி தியேட்டர் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன.

வெரைட்டி ஹால் சாலையில் செயல்பட்டுவரும் டிலைட் தியேட்டரில் தான் ஆசிய கண்டத்தில் முதல் முறையாக பேசும் படம் வெளியிடப்பட்டது. டவுன்ஹால் அருகே செயல்பட்டுவந்த ராஜா தியேட்டர் தற்போது ஜவுளிக்கடை வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமா பார்ப்பதை குறைத்துக் கொண்டதால் டிக்கெட் சேகரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x