Last Updated : 03 May, 2023 04:20 AM

 

Published : 03 May 2023 04:20 AM
Last Updated : 03 May 2023 04:20 AM

ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்வதில் சேவையாற்றிவரும் ஆத்மா அறக்கட்டளை

ஆதரவற்ற மூதாட்டி ஒருவரை போலீஸார் உதவியுடன் மீட்கும் ஆத்மா அறக்கட்டளையின் நிறுவனர் கந்தவேலன்.

கோவை: ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்தல், ஆதரவற்றோரை மீட்டு பராமரித்தல் என சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது, கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ஆத்மா அறக்கட்டளை.

இது தொடர்பாக ஆத்மா அறக்கட்டளையின் நிறுவனர் சரவணன் என்ற கந்தவேலன் கூறியதாவது: அறக்கட்டளையின் சார்பில் ஆதரவற்றோரின் சடலங்களை அடக்கம் செய்தல், ஆதரவற்ற முதியோர்களை மீட்டு பராமரித்தல், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் உள்ளிட்ட பலவித சேவைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.

கடந்த 2001-ல் சிங்காநல்லூர் அரவான் கோயில் மேடை அருகே உயிரிழந்த ஆதரவற்ற மூதாட்டியை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. போலீஸார் உதவியுடன் நாங்கள் அடக்கம் செய்தோம். அப்போது இந்த அறக்கட்டளை தொடங்கப்படவில்லை. அச்சம்பவம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, ஆத்மா அறக்கட்டளையை தொடங்கினேன். தற்போது வரை தோராயமாக 1,775 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். ஆதரவின்றியும், ரயில்களில் அடிபட்டும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். கரோனாவால் உயிரிழந்த 135 சடலங்கள், 132 பச்சிளங் குழந்தைகளின் சடலங்கள், எய்ட்ஸ் நோய் பாதித்த 39 பேரின் சடலங்கள் ஆகியவற்றை அடக்கம் செய்துள்ளோம்.

185 பேருக்கு ரத்த தானம் செய்துள்ளோம். ஒரு சடலத்தை அடக்கம் செய்ய ரூ.2,500 செலவாகும். யாரிடமும் நாங்கள் நன்கொடை கேட்டதில்லை. நான் சொந்தமாக பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து இச்சேவையை செய்து வருகிறேன். ஆதரவற்றவர்களின் சடலம் இருந்தால், காவல் துறையினர் எங்களைஅழைப்பர்.

நாங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சடலங்களை எடுத்துச் சென்று, குளிப்பாட்டி சுத்தம் செய்து உரிய முறையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்து வருகிறோம். அதிகபட்சமாக ஒரே நாளில் 22 சடலங்களை அடக்கம் செய்துள்ளோம். மின் கம்பிகள் உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகளின் சடலங்களையும் மீட்டுள்ளோம்.

சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், கள்ளிமடை ஆகிய பகுதிகளில் உள்ள மயானங்களை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தவிர, 300-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்கிறோம். 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கியுள்ளோம். இந்த சேவையின் மூலம் என் மனம் நிறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x