Last Updated : 02 May, 2023 05:13 PM

1  

Published : 02 May 2023 05:13 PM
Last Updated : 02 May 2023 05:13 PM

‘மிஸ் கூவாகம்’ ஆக சென்னை நிரஞ்சனா தேர்வு; திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு கோரிக்கை

மிஸ் கூவாகம் ஆக தேர்வு செய்யப்பட்ட நிரஞ்சனா (நடுவில்). | படங்கள்: சாம்ராஜ்

விழுப்புரம்: மிஸ் கூவாகமாக சென்னை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர்கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக பல்வேறு மாநிலங்கள், நாடுகளிலிருந்து திருநங்கைகள் வருகைபுரிவார்கள். இதனையொட்டி திருநங்கைகளுக்கான நடன நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள், மிஸ்கூவாகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடுஅரசு சமூகநலத் துறை, தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் சார்பில், மிஸ் கூவாகம் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ‘மிஸ் கூவாகம்’ போட்டியில் புதுச்சேரி உட்பட 42 மாவட்டங்களில் இருந்து 66 பேர்பங்கேற்றனர். இதில் 16 பேர் அடுத்தச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 'மிஸ் கூவாகம் 2023' அழகிப் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று நடைபெறுவதாக இருந்த நிலையில், பலத்த மழையின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மிஸ் கூவாகம் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவர் தவிர 15 பேர் அடுத்த சுற்றான இரண்டாம் சுற்றில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு, நடை, உடை, பாவனை மற்றும் கேள்விக்கு அளித்த பதில்களின் அடிப்படையில், நடுவர்கள் திரு நங்கை நடிகை மில்லா, காளி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்க மேற்பார்வையாளர் பிரேமா ஆகிய மூவரும் முதல், இரண்டாம், மூன்றாமிடம் பெற்றவர்களைத் தேர்வு செய்து, விழாக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து 2023 -ஆம் ஆண்டுக்கான மிஸ் கூவாகம் அழகியாக சென்னையைச் சேர்ந்த கே. நிரஞ்சனா (25) தேர்வு செய்யப்பட்டார். இரண்டாமிடத்தை சென்னை ஜி.டிஷா (26), மூன்றாமிடத்தை, சேலம் இ.சாதனா (25) ஆகியோர் பெற்றனர். இவர்களுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள், செயலர் கங்கா, விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி ஆகியோர் கிரீடம் கூட்டி, பட்டம் அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அழகிப் போட்டியில் வென்றவர்களுக்கு மூத்த திருநங்கைகள் முத்தமிட்டு வாழ்த்தினர்.

மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கூறும்போது ''நான் மாடலிங் துறையில் உள்ளேன். ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை அறிந்து தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வையுங்கள். நிச்சயம் சாதிக்கலாம். எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். சலுகை தேவையில்லை. எங்களுக்கும் எல்லா திறமைகளும் உள்ளது'' என்றார்.

இவ்விழாவில் விழுப்புரம் நகர திமுக செயலர் சக்கரை, திருநங்கைகள் தேசிய கவுன்சில் உறுப்பினர் ராமமூர்த்தி, தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் நூரி, இணைச் செயலர் சுபிக்‌ஷா, பொருளாளர் சோனியா, ஒருங்கிணைப்பாளர் அருணா, நிர்வாகக் குழு உறுப்பினர் ஷர்மிளா, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் விமலா, குயிலி, கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் சுசீலா, சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x