Last Updated : 27 Apr, 2023 04:51 PM

1  

Published : 27 Apr 2023 04:51 PM
Last Updated : 27 Apr 2023 04:51 PM

கறுப்பு நிறம் முதல் டவுன் சிண்ட்ரோம் வரை - ‘உருமாறும்’ பார்பி பொம்மைகள் சொல்வது என்ன?

நடிகை ப்ரியா பாவனி சங்கர் தொகுப்பாளராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒருவரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அந்த வீடியோவில் நிறம் சார்ந்து அவரை சிலர் கிண்டல் செய்திருந்தனர். இதற்கு மாறாய் தமன்னாவின் நேர்காணல் வீடியோ ஒன்றை பகிரும்போது மெழுகு பொம்மை என்று நிறம் சார்ந்து அவர் கூடுதலாகப் புகழப்படுகிறார்.

“காசு பணம் வந்தா காக்கா கூட கலரா மாறிடும், கறுப்பு என்பதால் எனக்கு லைக் கிடைப்பது கடினம்” என்ற கேலி கிண்டல் பதிவுகளை சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். உண்மையில் ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்களைவிட இந்தியர்களுக்கு கூடுதலான நிற வெறுப்பு உண்டு. இதற்கு மிக முக்கியக் காரணம் சிறு வயதில் வீட்டிலிருந்தே மிக இயல்பாகவே நம்மில் நிறவெறி புகுத்தப்படுகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளின் கையில் இருக்கும் பொம்மைகளே இதற்கு உதாரணம்.

நீங்கள் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்ட முதல் பொம்மை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பெரும்பாலான நேரங்களில் நாம் தேர்ந்தெடுத்த பொம்மைகளும் சரி, நம் குடும்பத்தாரால் நமக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட பொம்மைகளும் சரி, நமது உடல் தோற்றம், நிறத்திலிருந்து விலகி இருக்கும். இந்த பொம்மைகள் மூலமே நாம் நமது நிறத்திலிருந்து விலகத் தொடங்கிறோம்.

கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில், இந்த விலகலை குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதிய வைத்ததில் பார்மி பொம்மைகளின் பங்கு அதிகம். 1959-ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்த வேர்ல்ட் ஆஃப் பார்பி நிகழ்வின்போதுதான் முதல் பார்பி பொம்மை காட்சிப்படுத்தப்பட்டது. (பார்பி உருவாக்கத்துக்கு ஜெர்மனியின் லில்லி பொம்மைகள் காரணம் என்பது வேறு வரலாறு).

முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பார்பி

அதனைத் தொடர்ந்து பார்பி மொம்மைகள் உலகம் முழுவதும் பிரபலமாகத் தொடங்கின. பிரபலத்துக்கு ஏற்ப பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்களும் அதிகரித்தன. அதில் முதன்மையானது ‘பார்பி பொம்மைகள் யதார்த்தத்தை நமக்கு தருவதில்லை’ என்ற குற்றச்சாட்டு பரவலாக அதிகரித்து வந்தது. மேலும், பார்பி மொம்மைகள் கொண்டிருக்கும் ஒல்லியான தோற்றம் லட்சம் பெண்களில் ஒருவருக்குத்தான் உள்ளது என்ற ஆய்வுகளும் வெளியாகின. மேலும், நிறம் சார்ந்து பார்பி பொம்மைகள் மீது விமர்சனங்கள் அதிகரித்தன. பார்பிகள் மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட நிறத்தை தூக்கிப் பிடிக்கிறது. இதனால், குழந்தைகள் தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளப்படுகின்றன என்ற குரல்களும் எழுந்தன. இதனைத் தொடர்ந்து பார்பி பொம்மைகளை வெளியிட்டு பிரபலமான மேட்டல் நிறுவனம் மாற்றதுக்கு தயாரானது.

2016-ஆம் ஆண்டு அனைத்து இன நிறங்களை (ஆசிய, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க) பிரதிப்பிலிக்கும் பார்பி பொம்மைகள் வெளியிடப்பட்டு குழந்தைகளிடம் வரவேற்பு பெற்றது.

கறுப்பினத்தை பிரதிபலிக்கும் பார்பி

அதுமட்டுமின்றி விபத்தினால் காயமடைந்து கட்டிட்ட பார்பி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பார்பி என கடினமான வாழ்வியல் சூழல்களை எதிர்கொண்டு நம்பிக்கை அளிக்கும் பார்பி பொம்மைகளும் வெளியாகின.

இந்த நிலையில்தான் தற்போது 'டவுன் சிண்ட்ரோம்' எனப்படும் மரபணு குறைப்பாடு உடைய குழந்தைகளை பிரதிப்பலிக்கும் பார்பி பொம்மைகளை மேட்டல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ’டவுன் சிண்ட்ரோம்’ பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிற குழந்தைகளிலிருந்து சிறிது வித்தியாசமாக காணப்படுவார்கள். மரபணு குறைபாட்டால் அக்குழந்தைகள் மனம் மற்றும் உடல் ரீதியான சவால்களையும், அறிவுசார் திறனில் சிரமங்களை எதிர்கொள்வார்கள். எனினும், போதிய வழிக்கட்டுதல், பயிற்சிகள் மூலம் இக்குழந்தைகள் இயல்பான வாழக்கையை வாழ இயலும். இந்த நிலையில், மேட்டல் நிறுவனம் எடுத்துள்ள இம்முயற்சி அக்குழந்தைகளை தனிமைப்படுத்துவதை சற்று குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டவுன் சிண்ட்ரோம் பார்பி

’டவுன் சிண்ட்ரோம்’ பார்பி பொம்மைகள் குறித்து மேட்டல் நிறுவனத்தின் பார்பி பிரிவின் உலகளாவிய தலைவரான லிசா மெக்நைட் பேசும்போது, “இந்த பார்பி பொம்மைகள் டவுன் சிண்ட்ரோம் குறைபாடுகளை புரிந்துகொள்ள உதவும். இம்மாதிரியான குழந்தைகளை உலகம் ஏற்றுக் கொள்ளவும் வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

நிறம், உடல் சார்ந்து இந்த சமூகம் நம் முன் வைக்கும் மதிப்பீடுகளை ஏற்றுகொண்டு, தங்கள் நிறத்தையும், உடலையும் மாற்றத் தயாராகும் மனிதர்களை நாம் உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறோம். நமது திரை நட்சத்திரங்கள் பலரும் இதைத்தான் நமக்கு பிரதிப்பலிக்கிறார்கள். இங்கு அழகு என்பது வெள்ளை நிறப் பற்று, ஐடியல் உடலை நோக்கி நகர்ந்துவிட்டது. இவ்வாறான சூழலில் அழகிற்கு எந்த வரையையும் இல்லை என்பதை நாம் தொடர்ந்து கூறுவது காலத்தின் தேவையாகிறது.

நிறம், உடல், சார்ந்த பொது புத்தியிலிருந்து பார்பிகள் மாறி வருகின்றன... நாம் எப்போது மாற போகிறோம்?

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x