Published : 25 Apr 2023 06:11 AM
Last Updated : 25 Apr 2023 06:11 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், குட்டத்துப்பட்டி கிராமப் பகுதியில் மூலிகைச் செடியான ஆடாதொடா (ஆடுகள் உண்ணாத செடி) பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் ஆயிரக்கணக்கான மூலிகைச் செடிகள் உள்ளன. இவற்றில் பல கண்டறியப்படாமலேயே உள்ளன. மூலிகைச் செடிகள் இயற்கையாக வளர்ந்து இருக்கும் நிலையில், தனிப்பட்ட முறையில் மூலிகை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மூலிகைச் செடிகளை வாங்குவதற்கு, நகரின் மையத்திலேயே கடைகள் உள்ளன. இதனால் ஆங்காங்கே சேகரிக்கப்படும் செம் பருத்தி, ஆவாரம் பூ, இலந்தை பழம், பிரண்டை உள்ளிட்டவற்றை திண்டுக்கல் அருகேயுள்ள மலை கிராமங்கள், மலை அடிவார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் எடுத்து வந்து, திண்டுக் கல்லில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் அருகே குட்டத்துப்பட்டியில் மூலிகைப் பயிரான ஆடாதொடா செடியை முழுமையாக பயிரிட்டுள்ளனர். இடம் அதிகளவில் இல்லாத விவசாயிகள் தோட்டத்து வேலிகளில் ஆடாதொடா செடியை பயிரிட்டுள்ளனர். (ஆடுகள் இதை உட்கொள்ளாது என்பதால் இதற்கு ஆடு தொடாத செடி என்பதை குறிக்கும் வகையில் ‘ஆடா தொடா’ எனப் பெயர் வந்தது).
குட்டத்துப்பட்டி கிராமப் பகுதியில் ஆடாதொடா மூலிகைச் செடிகளை பலரும் பயிரிட்டுள்ளனர். செடி நட்டு வளர 3 மாதங்கள் ஆகும் நிலையில், அதில் உள்ள இலைகளை பறித்து காயவைத்து விற்பனைக்கு கொண்டு செல் கின்றனர். பலமுறை அறுவடை செய்யும் வகையில் இலைகள் வளர்கின்றன. இந்த இலைகளை பொடியாக செய்தும், ஆடாதொடா மணப்பாகு என்றும் சித்த மருந்து கடைகளில் விற்பனையாகிறது. சளியை போக்க சிறந்த மூலிகை மருந் தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆடாதொடா பயிரிடும் விவசாயிகள் கூறுகையில், செலவு அதிகம் இல்லாத மூலிகைப் பயிர். அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சினால் போதும், வறட்சியை தாங்கி வளரும்.மருந்தடிக்கும் செலவு இல்லை. நோய் தாக்குதல் இல்லை, விலையும் ஓரளவு கிடைக்கிறது.
சித்த மருந்து நிறுவனங்கள் இங்கு வந்தே வாங்கிக் கொள்கின்றனர். சிலர் திண்டுக்கல்லில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின் றனர். தோட்டக்கலைத் துறை மூலம் தேவையான உதவிகள் செய்து மூலிகைப் பயிர் வளர்ப்பை அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும், என்றனர்.
திண்டுக்கல் வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஓராண்டுக்கு முன்புவரை கரோனா காலத்தில் தேவை அதிகரித் ததால் ஆடாதொடா இலைகள் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையாகின. தற்போது ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. சித்த மருத்துவத்தில் அதிகம் தேவைப்படும் மூலிகைப் பயிராக ஆடாதொடா உள்ளது என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் கனிமொழி கூறுகையில், திண்டுக்கல் வட்டாரத்தில் ஒரே பகுதியில் மூலிகையை பயிரிடவில்லை. மூலிகைப் பயிர்களை பயிரிட விவசாயிகள் முன்வந்தால் அரசின் உதவிகள், சலுகைகள் அனைத்தும் பெறச் செய்து மூலிகைச் சாகுபடியை ஊக்குவிக்க தயாராக உள்ளோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT