Published : 18 Apr 2023 07:23 PM
Last Updated : 18 Apr 2023 07:23 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், தாராசுரத்தில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஐராவதீஸ்வரர் கோயிலில் உலக பாரம்பரியத் தினத்தை யொட்டி கையேடு வெளியிட்டு, பழங்காலத்து சிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
அய்யம்பேட்டை ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்.செல்வராஜ் தலைமை வகித்து, 'தாராகர்' என்ற தலைப்பில் இக்கோயில் குறித்த கையேட்டினை வெளியிட்டார். புதுச்சேரி தாகூர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் ரவிசந்திரநே சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்தியத் தொல்லியியல் துறை இயக்குநர் டி.அருண்ராஜ் வரவேற்று பேசியது: "தமிழகத்தில் கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு தொல்லியல் குறித்த புரிதல் மக்களிடம் அதிகமாகி விட்டது. இந்தியத் தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் சமூகம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தொல்லியல் குறித்து அண்மைக்காலமாக மாணவர்களிடம் அதிக ஈடுபாடு ஏற்பட்டு வருகிறது. நம்மிடம் பழமையான கோயில் குறித்து புரிதல் இருப்பது அவசியமாகும். தற்போது அனைத்து துறைகளில் இருப்பவர்கள் கூட இந்தத் துறை சார்ந்த படிப்புகளை படிப்பது தொடர்பாக எங்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழமையான புராதான சின்னங்களைப் பாதுகாப்பதில் தொல்லியல் துறைக்கு பல்வேறு சவால்கள் உள்ளதால், இது குறித்த தொல்லியல் சார்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள சிற்பங்கள் தனித்துவமாகவும், கலை பொக்கிஷம் நிறைந்ததாகவும் உள்ளது.
இதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல தொல்லியல் துறையால் மட்டும் முடியாது. அனைவரும் இணைந்து இப்பணியில் ஈடுபட்டால் தான், இதனை பாதுகாக்க முடியும். புராதான சின்னங்களான கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயில், தாராசுரம் கோயில் பகுதியில் சுற்றி கட்டிடங்கள் கட்ட அனுமதித்தால் ஆயிரமாண்டு பாரம்பரியம் அழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “ஆதிச்சநல்லூரில் கடந்தாண்டு முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றோம். அங்கு சுமார் 125 ஏக்கரிலுள்ள சுடுகாட்டில், ஆய்வு மேற்கொண்டதில் முதுமக்கள் தாழியிலிருந்த 90 உடல்களின் பாகங்களை, வெளிநாடு மற்றும் புதுடெல்லியிலுள்ள ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளோம். இந்த ஆராய்ச்சி தகவல் விரைவில் வரவுள்ளது. இந்த இடம் கி.மு.ஆயிரமாண்டு பழமையானது எனத் தெரிய வந்துள்ளது.
சுமார் 3 ஆயிரமாண்டுகளுக்கு முன் இங்கு ஓர் இன மக்கள் நாகரிகமாக வாழ்ந்துள்ளார்கள். அதிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் திருபோலூர் என்ற இடத்தில் அவர்கள் வாழ்ந்ததற்கான பகுதியில் தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT