Published : 17 Apr 2023 04:50 PM
Last Updated : 17 Apr 2023 04:50 PM
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும் பாறையில் உருவாக்கப்பட்ட அரவை பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப்பகுதியில் தொல்லியல் தடயங்கள் இருப்பதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் தகவல் தெரிவித்தார். அதன்படி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் து.மனோஜ், மு.பிரவீனா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். இதில் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரவை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது: “புதிய கற்காலம் கிமு.6000 முதல் கிமு.2200 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய புதிய கற்காலத்தில்தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மட்பாண்டங்கள், குடியிருப்புகள், தானியங்களை இடித்து அரைத்து பயன்படுத்துதல், தெய்வ வழிபாடு, வழுவழுப்பான கற்கருவிகள் உருவாக்கப்பட்டன.
அதனையொட்டி கோபால்சாமி மலையில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்பு கற்கள், சிவப்புநிற பானை ஓடுகள், கற்கோடரி, இரும்புக்கசடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்குள்ள பாறைகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாக தேய்த்த பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பு உள்ளன. இதில், அரைப்பு கற்கள் மூலம் தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்தியிருக்கலாம்.
மேலும் பாறையில் 18 குழிகளுடைய பல்லாங்குழி அமைப்பும், சதுர வடிவிலான ஒரு பாறைச் செதுக்கலும் உள்ளன. பையம் பள்ளியில் நடந்த அகழாய்வில் புதிய கற்கால அரைப்புக்கல், திருகைக்கல், குழவி கண்டெடுக்கப்பட்டுள்ளன. மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்பு பள்ளங்கள் உள்ளன. புதிய கற்கால தொடர்ச்சியாக இரும்புக்காலம் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் பாறையின் வடக்கில் 1 முதல் 3 அடி வரை உயர பலகைக்கற்கள் காணப்படுகின்றன.
இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய கற்கால, இரும்புக்காலத் தடயங்கள் உள்ளன. இங்கு அகழாய்வு செய்து தென் தமிழத்தில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டை அரசு வெளிக் கொணர வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT