Published : 17 Apr 2023 06:34 AM
Last Updated : 17 Apr 2023 06:34 AM
ராமேசுவரம்: யுனெஸ்கோ நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள தொல்லியல், பாரம்பரியம் சார்ந்தவை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை உலகப் பாரம்பரிய தினமாகக் கொண்டாடுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியின் அடையாளமாகத் திகழும் மன்னர் விஜய ரெகுநாத சேதுபதி கட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கமுதி கோட்டை பல வரலாற்றுத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட திருவுடையத்தேவர் என்ற முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னர் பிரான்ஸ் நாட்டுப் பொறியியல் வல்லுநர்கள் உதவியுடன் வட்ட வடிவில் கமுதியில் குண்டாற்றின் கரையில் இந்த கோட்டையை கட்டினார். இக்கோட்டை உள் கோட்டை, வெளிக்கோட்டை என இரண்டு அடுக்கில் கட்டப்பட்டது.
கோட்டைகளுக்குள் செல்ல இரண்டடுக்குப் பாதுகாப்பு முறை இருந்துள்ளது. இரு கோட்டைகளுக்கும் இடையில் மேற்கில் குடிநீர் குளம், வடக்கில் நெற்களஞ்சியம், தெற்கில் பங்களா இருந்துள்ளது.
ஒவ்வொரு கோட்டைக்கும் ஒன்று என இரு நுழைவு வாயில்கள் இருந்துள்ளன. உள் கோட்டை நுழைவு வாயில் மற்றும் நெற்களஞ்சியம் இருந்த இடத்தில்தான் தற்போது கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது உள்ளது உள் கோட்டையும் பங்களாவும் மட்டுமே. வெளிக்கோட்டை ஆங்கிலேயர்களால் இடித்து அகற்றப்பட்டுவிட்டது.
சுவரின் இரு பக்கமும் பாறைக் கற்களை வைத்து அதன் நடுவில் செங்கல், சுண்ணாம்பு சாந்தை நிரப்பி இக்கோட்டையை கட்டியுள்ளனர். இக்கோட்டையின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் குண்டாற்றின் கரையில் பலவிதமான பாறைகள் உள்ளன. இப்பாறைகள் உடைக்கப்பட்டு கோட்டை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகள் தற்போதும் அப்பகுதியில் கிடப்பது இதை உறுதியாக்குகிறது.
கி.பி.1877-ம் ஆண்டு குண்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இக்கோட்டையின் பல பகுதிகள் சேதமடைந்தன. வெள்ளத்தின் காரணமாகவோ, பெயர்த்தெடுத்ததன் காரணமாகவோ இக்கோட்டையில் பொருத்தப்பட்டிருந்த கற்கள் தற்போது பெருமளவில் இல்லை. கற்கள் பெயர்ந்து போன நிலையில் கற்கோட்டையாக இல்லாமல் வெறும் செங்கல் கோட்டையாகவே இப்போது காட்சியளிக்கிறது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கற்கள் குண்டாறு மதகு அணையின் அருகில் சிதறிக் கிடக்கின்றன. கோட்டையில் இருந்த கற்களைப் பெயர்த்து எடுத்து கமுதி குண்டாற்றில் பாலம் கட்ட ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ராமநாதபுரம் சேதுநாட்டை ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி படையினர் கைப்பற்றிய பின்பு 25.8.1801-ல் இக்கோட்டையை தங்கள் வசமாக்கினர்.
சேதுநாட்டின் அனைத்துக் கோட்டைகளையும் இடித்தபோது, இக்கோட்டையையும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியினர் இடித்துவிட்டனர். அவர்கள் இடித்தது போக எஞ்சிய கோட்டையின் பகுதிகளே தற்போது நாம் காண்பது. இக்கோட்டையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT