Published : 13 Apr 2023 07:23 PM
Last Updated : 13 Apr 2023 07:23 PM
மதுரை: மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்குத் தேவையான ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர்.
மதுரை உத்தங்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 153 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி வளாகம் 15 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் சில மாதத்திற்கு முன்பு நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் பள்ளிக்கு மாணவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கித்தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
அதனையொட்டி, மாநகராட்சி உறுப்பினர் தன்ராஜ், மேலாண்மைக்குழு உறுப்பினர் சாந்தி ஆகியோர் பள்ளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கித்தரும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கினர். இதனை பள்ளிக்கு வழங்க முடிவெடுத்தனர்.
அதன்படி பெற்றோர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக பொருட்களை கொண்டு சென்றனர். இதில் பள்ளிக்கு தேவையான ஆவணங்களை வைப்பதற்கு பீரோக்கள், ஆசிரியர்கள் அமருவதற்கு இருக்கைகள், மாணவர்கள் அமருவதற்கான பிளாஸ்டிக் இருக்கைகள், ஃபேன்கள், மேஜைகள், சில்வர் தண்ணீர் கேன்கள், பிளாஸ்டிக் தண்ணீர் கேன்கள், குப்பைக் கூடைகள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொண்டுவந்தனர்.
இதில், மாநகராட்சி கவுன்சிலர் தன்ராஜ், மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சாந்தி மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஊர்வலமாக கொண்டுவந்து பள்ளியில் தலைமையாசிரியர் ம.ராஜாத்தியிடம் ஒப்படைத்தனர். இவற்றைக் கொண்டு வந்த பெற்றோர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT