Published : 12 Apr 2023 06:35 AM
Last Updated : 12 Apr 2023 06:35 AM
விழுப்புரம்: தகதகக்கும் வெயிலின் தாகம் தணிக்க இயற்கை தந்த பெரும் கொடை தர்பூசணி. தேவையான விட்டமின்கள், தாது உப்புகளுடன் செறிவான கோடை காலத்திற்கானது தர்பூசணிச் சாறு. கோடைக்காலங்களில் நம் உடலின் வெப்பத்தை தணிப்பதில் இதற்கு பெரும் பங்கு உள்ளது.
மரக்காணம் அருகே ஆலத்தூர், நடுக்குப்பம், சிறுவாடி, அடசல், கிளாப்பக்கம் நடுக்குப்பம், ஆலத்தூர் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிர் செய்யப்பட்டு, தற்போது அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தர்பூசணிகள் கொண்டு செல்லப்படுகின்றன.
‘இந்த தர்பூசணியை அதிக அளவு எடுத்துக் கொண்டால், சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படும்; காரணம், இதைப் பயிரிடும் போது பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்தான்’ என்று ஒரு ஆடியோ வாட்ஸ் அப் குழுக்களில் வலம் வந்து கடந்த சில நாட்களாக நம்மை மிரட்டி வருகிறது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை அலுவலர்களிடம் கேட்டபோது, “எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு ஏக்கருக்கு 10 டன் வரை விளைந்துள்ளது. தற்போது 150 நாட்கள் ஆகிய நிலையில் அறுவடை பணி நிறைவுப் பகுதியை எட்டியுள்ளது. மரக்காணம் பகுதியில் முதற்கட்டமாக விளையும் தர்பூசணி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரண்டாவது அறுவடையில் வரும் தர்பூசணி உள்ளூர் சந்தையின் தேவையை நிறைவு செய்கிறது.
ஒரு டன் ரூ. 15 ஆயிரம் என விலை போகிறது. விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் குறிப்பிடுவது போல தர்பூசணியால் சிறுநீரகப் பிரச்சினைகள் வருகிறது என்பது உண்மையல்ல” என்றனர்.
மேலும், இதுகுறித்து கருத்து அறிய திண்டிவனம் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி தரிடம் பேசினோம். அவர் பதில் அளிக்க முன்வரவில்லை.
வேளாண் மருந்துகள் விற்கப்படும் அக்ரி கிளினிக் நிர்வாகிகளிடம் இதுபற்றி கேட்டதற்கு, “தர்பூசணி நல்ல பருமனை பெற 5 நாட்களுக்கு ஒரு முறை ரசாயன உரம் செலுத்தப்படுகிறது. இதனால் தர்பூசணி கிடுகிடுவென தன்னுடைய எடையை பெருக்கிக் கொள்கிறது. அந்த தர்ப்பூசணி பழத்தை உண்ணுவதன் மூலம் கிட்னி கோளாறு, கேன்சர் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை” என்றனர்.
இது தொடர்பாக விவசாயிகளிடம் கேட்ட போது, “தர்பூசணி பயிர் செய்யும் போது, செடிகள் முளைக்கும் தருவாயிலேயே இறந்து விடுகின்றன இந்த நிலையில் தான் நாங்கள் உரங்களை வாங்க தனியார் வேளாண் மருந்து கடைகளுக்கு செல்கிறோம், அவர்கள், நாங்கள் பயிரிடும் நிலத்தை பார்வையிட்டு, பின்னர் பல்வேறு வகையான புதிய ரசாயன மருந்துகளைபரிந்துரைக்கின்றனர். அதைப் பயன்படுத்துகிறோம்.
முன்னர் வாய்க்கால் மூலமாக நீர்ப்பாய்ச்சும் முறை இருந்தது. தற்போது முழுவதுமாக சொட்டு நீர் பாசன முறைக்கு மாறி விட்டோம். இதில், நேரடியாக தர்பூசணி செடியின் வேரிலேயே மருந்து இறங்குகிறது.
இதனால் ஒரு பக்கம் விஷத்தை கலப்பது போன்ற எண்ணம் தான் தோன்றுகிறது. இருந்தாலும் செடி வளர வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இதனை செய்கிறோம்.
முன்பெல்லாம் ஒரு பழத்தை பாதியாக அறுத்து மறுநாள் கூட சாப்பிட முடியும். ஆனால் தற்போது அறுத்த பழம் 2 மணி நேரத்திற்குப் பிறகு, அதிலிருந்து தண்ணீர் கசிய தொடங்கும். அறுவடை செய்யப்பட்ட பின்பு அதிகபட்சம் 5 நாட்களுக்குள் பழங்களை விற்றாக வேண்டும். இல்லையெனில் அந்த பழங்கள் கெட்டுப் போய்விடும்.
நாங்களாக எந்த ஒரு முடிவெடுத்தும் எந்த ஒரு ரசாயன மருந்தையும் வாங்கி தெளிப்பது கிடையாது. இந்த சாகுபடியில் உரிய இயற்கை சார் வழிகாட்டுதல்களை அரசு ஊக்குவித்தால், அந்த முறை உரிய மகசூலை அளித்தால் நாளடைவில் அந்த நல்ல மாற்றத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம்” என்கின்றனர்.
முன்பெல்லாம் ஒரு பழத்தை பாதியாக அறுத்து மறுநாள் கூட சாப்பிட முடியும். ஆனால் தற்போது அறுத்த பழத்தில்2 மணி நேரத்திற்குப் பிறகு, தண்ணீர் கசிய தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT