Published : 08 Apr 2023 06:08 AM
Last Updated : 08 Apr 2023 06:08 AM
சேலம்: சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, உயிரோடு இருப்பவருக்கு சடங்கு செய்து இறுதி ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லும் விநோத வழிபாடு நடந்தது.
தமிழகத்தில் கோயில் திருவிழாக்களின்போது ஒவ்வொரு பகுதியிலும் விநோத வழிபாடுகளை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். சவுக்கில் அடிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது, விமான அலகு குத்துதல், கத்திபோடுவது, தீ மிதிப்பது என பலவகையான முறைகளில் நேர்த்திக் கடன் செலுத்தி இறைவழிபாட்டில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழாவில் விநோத வழிபாட்டில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக விமரிசையாக நடந்து வந்த திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.
நிறைவு பூஜையின்போது, கோயிலை நிர்வகிக்கும் நபரை இறந்தவராக பாவித்து அவருக்கு சடங்குகள் செய்கின்றனர். உயிரோடு இருக்கும் நிர்வாகியை பாடையில் வைத்து, சவத்தேரில் மேலதாளம் முழுங்க மயானத்துக்கு கொண்டு செல்கின்றனர். உறவினர்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுது சடங்குகள் செய்கின்றனர். மயானத்தில் கோழி பலியிட்டு பூஜை செய்து வழிபடுகின்றனர். இந்த நிகழ்வைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர்.
இது குறித்து கோயில் பூசாரிகள் கூறும்போது, ‘குழந்தை வரம், திருமணம் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் இருப்பவர்களின் வேண்டுதலை அம்மன் நிறைவேற்றி வருகிறார். திருவிழா நிறைவு நாளில் உயிரோடு இருப்பவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி மயானத்தில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கத்தில் உள்ளது, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT