Published : 07 Apr 2023 04:25 PM
Last Updated : 07 Apr 2023 04:25 PM
மதுரை: புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதால் அச்சம் தேவையில்லை என்றபோதிலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தினார்.
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 6,000 தாண்டியுள்ளது. ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அரசு மருத்துமனைகளில் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதால் அவர்களுக்கு சிகிச்சை வழங்க மருத்துவக்குழுவினர் தயார்நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால், கரோனா தொற்று மீண்டும் முன்போல் பரவத்தொடங்கி பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டதோ என்ற அச்சம் மக்கள், தொழில்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நெஞ்சகப்பிரிவு நுரையீரல் மருத்துவ நிபுணர் டாக்டர் இளம்பரிதி கூறியது: ''கடந்த மாதத்தில் இருந்து இந்தியாவில் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா தொற்று என்பது ஒரு ஆர்என்ஏ வைரஸ். இந்த வைரஸ்கள் அடிக்கடி குழு உருமாற்றம் அடைகின்றன. தற்போது அதுபோல் மாறுபாடு அடைந்து நடைமுறையில் உள்ள கரோனா வைரஸ் XBB1.16 ஆகும். இந்த புதிய மாறுபாடு அடைந்த கரோனா வைரஸ் லேசான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
தொற்று பரவல் அதிகரிப்பு இருந்தாலும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோ அல்லது இறப்பு பதிவிலோ குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை. அதனால், அச்சப்படத் தேவையில்லை. வழக்கம்போல் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. நமது மக்கள்தொகையில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்று எதிராக சில வகையான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தி, ஏற்கணவே போட்டுக் கொண்ட தடுப்பூசி அல்லது இயற்கையான தொற்று மூலம் பெறப்படுகிறது. இருப்பினும் தடுப்பூசி மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வலுவானது. அதனால்தான் தற்போதைய தொற்று பரவலை நாம் சாதாரணமாக கடந்து செல்கிறோம். கடந்த இரண்டு மாதங்களாக பரவும் காய்ச்சல் பாதிப்பு கரோனாவுடன் தொடர்புடையது இல்லை. இந்த காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் காய்ச்சல் ஏற்படுகிறது. இது ஒரு பருவகால வைரஸ்'' என்று அவர் தெரிவித்தார்.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனம்: டாக்டர் இளம்பரிதி மேலும் கூறுகையில், ''கரோனாவுக்கு எதிராக நாம் பெற்றுள்ள நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதில் இருந்தும், மரணத்தில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகிறது. அதேநேரத்தில் தொற்று பரவலை முழுமையாக தடுக்கவோ, பாதுகாக்கவோ இது போதாது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அனைவருக்கும் இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுள்ளோம். மூன்றாவது டோஸ் குறித்து இதுவரை அரசிடம் இருந்து எந்த பரிந்துரையும் இல்லை. அதனால், அதைப்பற்றி தற்போது கவலைப்பட தேவையில்லை. முககவசம் அணிவது நல்லது. இந்த பாதுகாப்பு நடைமுறை கரோனாவுக்கு எதிராக மட்டுமல்ல, காய்ச்சல் போன்ற பிற சுவாச வைரஸ்களிலிருந்தும் பாதுகாக்கிறது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற நோய்கள் கட்டாயம் முககவசம் அணிவது நல்லது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT