Published : 29 Mar 2023 06:08 AM
Last Updated : 29 Mar 2023 06:08 AM
கடலூர்: மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் காஷ்மீர் முதல் லட்சத்தீவுகள் வரை உள்ள நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் அங்கமாக, அங்கு முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவன் ப. கோடீஸ்வரன் மற்றும் விஞ்ஞானி க. கந்தராஜன் ஆகியோர் தமிழகத்தின் கடலோர மீன் இறங்கு தளங்களில் கள ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முடசல் ஓடை மீன் பிடி இறங்கு தளத்தில் அரிய வகை மீனை கண்டறிந்தனர். அதனை தகுந்த முறையில் பதப்படுத்தி ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்று பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், அது புதிய வகை விலாங்கு மீன் என்று கருதப்பட்டது. பிறகு, மத்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் முதுநிலை விஞ்ஞானி அனில் மொகபத்ராவுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு, மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. அது புதிய விலாங்கு மீன் வகை தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் இருந்து கண்டறியப்பட்டதின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அதற்கு, ஜிம்நோதோராக்ஸ் தமிழ்நாடு யென்சிஸ் (Gymnothorax tamilnaduensis) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
“இந்த கண்டுபிடிப்பானது உயிரியல் அமைப்பு மற்றும் பரிணாமம் (Zoosystematics and Evolution) என்னும் சர்வதேச இதழில் பல்வேறு திருத்தங்கள் மற்றும் மதிப்பாய்வுக்கு பிறகு பதிவிடப்பட்டுள்ளது” என்று கொச்சினில் உள்ள தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகத்தின் பிரந்திய அலுவலக முதுநிலை விஞ்ஞானி தி.த. அஜித் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தற்போது இந்த வகை மீன்கள் கோழி தீவனத்துக்காகப் பயன்படுகிறது. இந்த மீனில் உள்ள புரோட்டின் அளவு குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
மற்ற மீன்களில் உள்ள புரோட்டின் அளவு இந்த மீனிலும் இருந்தால் இது உணவில் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும். இது போல பல்லுயிரி பெருக்க வளங்களை கண்டறிந்து பட்டியல் சேர்ப்பது நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT