Published : 22 Mar 2023 06:26 PM
Last Updated : 22 Mar 2023 06:26 PM
இன்றைய ஷேர் ஆட்டோ போல, அக்காலத்தில் ஏழை, நடுத்தர மக்களின் போக்குவரத்து சுமையைக் குறைத்ததில் பெரும் பங்கு வகித்தவை குதிரை வண்டிகள்! வெகுஜன மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாகப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த குதிரை வண்டிகள், 90களுக்குப் பிறகு படிப்படியாக மறைந்துவிட்டன. இப்போது ஏதோ ஒரு சில சுற்றுலா தளங்களில் மட்டும் குதிரை வண்டிகளைப் பார்க்க முடிகிறது.
'டொக்… டொக்… டொக்…' எனத் தார்ச் சாலையில் ஒலி எழுப்பிச் செல்லும் குதிரை வண்டிகளை 90ஸ் காலக்கட்ட மக்களால் எளிதில் மறக்க முடியாது. வெகு அரிதாகச் சில குதிரை வண்டிகளில் டிரான்ஸிஸ்டர்கள் கொண்டு பாடல் ஒலி பரப்புவார்கள். குதிரைகளின் கால்குளம்பு லயத்துக்கும், பாடல்களின் தாள லயத்துக்கும், நமது உடல் குலுங்கும் ஆட்டத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கும்!
பாரம்பரியக் குதிரை வண்டி
பத்துப் பேர் வரை தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலான வண்டி அமைப்பு, கொஞ்சம் நெருக்கினால் பன்னிரண்டு பேர் வரை பயணிக்கலாம். அமரும் மேடையில் ஒரு தார்ப்பாயைப் போட்டு, அதன் மீது வைக்கோல் பரப்பி இருப்பார்கள். செலவில்லாத குஷன் இருக்கை அமைப்பிற்கு வைக்கோல்கள் பேருதவி புரியும். சில வண்டிகளில் சாக்குப் பைகள் குஷன் சுகத்தைக் கொடுக்கும்.
வில் போல வளைத்த கூடாரம் போன்ற அமைப்பு பயணிகளுக்கான நிழற்கூடமாக இருக்கும். அந்த வளைந்திருக்கும் கூடாரத்தில் திரைப்பட நடிகர்கள் நடிகைகளின் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வண்டியின் பின்புறத்தில் ஒரு கம்பி கொக்கியில் செருகப்பட்டு, பயணிகள் கீழே விழாத வகையிலான பாதுகாப்பை வழங்கும். அலுங்கிக் குலுங்கி குதிரை வண்டி செல்லும் போது கை வைத்துப் பிடித்துக்கொள்ளப் பிடிமானமாக வளைவுகளில் இருக்கும் மரச் சட்டங்கள் உதவும்.
சுகமான பயண அனுபவம்
குதிரை வண்டிக்காரரின் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு சாலையைப் பார்த்துக் கொண்டே குதிரை வண்டியில் பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவம். குதிரையின் வால் தீண்டலும், சில நேரங்களில் சாட்டையின் தீண்டல்களும் முன்னமர்ந்து இருப்பவர்களுக்கு இலேசாகக் கிடைக்கும். பெரும்பாலும் சிறுவர்களுக்கே முன்னிருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும். குதிரை வண்டியில் முற்பகுதியிலோ அல்லது பிற்பகுதியிலோ அமர்ந்துகொண்டு பயணிப்பது, பேருந்துகளின் ஜன்னலோர இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்யும் சுகத்துக்கு இணையானது.
ஜொலி ஜொலிக்கும் குதிரைகள்
மெலிந்த குதிரைகள், குட்டையான குதிரைகள், உயரமான குதிரைகள் எனப் பலவிதமான குதிரைகளைப் பார்க்க முடியும். சிலர் குதிரைகளுக்குச் சிறப்பு அலங்காரம் செய்து போக்குவரத்துக்குத் தினமும் கொண்டு வருவார்கள். அலுமினியத் தகட்டில் வண்ணங்கள் பூசப்பட்ட கடிவாளங்கள், கழுத்தில் சலங்கை, கழுத்தில் கலர் கலர் பட்டைகள் எனக் குதிரைகள் ஜொலி ஜொலிக்கும். குதிரை வண்டிக்காரர்கள் கைலியும் மேல்சட்டையும் அணிந்திருப்பார்கள். சில குதிரை வண்டிக்காரர்கள் ஓவர் கோட் அணிந்திருப்பதையும் பார்க்கலாம்.
குதிரை வண்டி ஸ்டாண்ட்
பெரும்பாலும் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில், குதிரை வண்டிக்கான முதன்மை ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருக்கும். வைக்கோலும், கொள்ளும் பரவலாக அங்கே சிதறி இருக்கும். குதிரைகளின் தாகம் தணிப்பதற்கான சிறு சிறு தண்ணீர்த் தொட்டிகள் அல்லது தண்ணீரைத் தாங்கிய தோல்பைகள் குதிரை வண்டி நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கும். பேருந்து நிலையம் தவிர்த்து ஆங்காங்கே முக்கியமான நிறுத்தங்களில் இரண்டு, மூன்று குதிரை வண்டிகள் பயணிகளுக்காகக் காத்திருக்கும்.
சூழல் மாசில்லாத பயணம்
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத பயணத்தைக் குதிரை வண்டிகள் வழங்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. பெட்ரோல் / டீசல் வாசனையைப் பற்றியோ, வாகனங்கள் வெளியேற்றும் கரும் புகையைப் பற்றியோ கவலை கொள்ளாமல் பயணம் செய்யும் மகிழ்ச்சியை மட்டும் குதிரை வண்டிகள் வழங்கும். குதிரை வண்டிகளின் பயன்பாட்டைச் சுற்றுலா தளங்களிலாவது மீண்டும் கொண்டு வரலாம். அதற்கு முன்னர், அதிக அளவில் பயணிகளை ஏற்றி வாயில்லா ஜீவன்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தாமல் இருப்பது, குதிரைகளை முறையாகப் பராமரிக்க வேண்டிய திட்டங்கள் போன்ற நெறிமுறைகளைக் கொண்டு வருவது அவசியம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT