Published : 21 Mar 2023 07:32 PM
Last Updated : 21 Mar 2023 07:32 PM
மதுரை: தமிழக அரசின் தொல்லியல்துறையால் ஆவணப்படுத்தப்பட்ட மதுரை பேரையூரில், மேலப்பரங்கிரி மலையிலுள்ள 51 வரி எழுத்துகளையுடைய பாறைக் கல்வெட்டை தேய்மானமாகாமல் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூரில், பல வரலாற்றுச் சுவடுகளுடன் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ளது மேலப்பரங்கிரி மலை என்னும் மொட்டமலை. இங்கு ஆதிமனிதன் வாழ்ந்த சான்றுகளான குகைகள், வாழ்விடங்கள், முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. இவ்வூர் சேர நாட்டுக்கும், பாண்டிய நாட்டுக்குமிடையே வணிகப்பாதையில் முக்கியத்துவம் பெற்றது. சங்ககால பாண்டிய மன்னன் பேரில் 'கடுங்கோன் மங்கலம்' என்றிருந்தது காலப்போக்கில் பேரையூர் என்று மருவியது.
கி.பி.13-ம் நூற்றாண்டில் செங்குடி நாட்டு பிரிவின் கீழ் இருந்துள்ளது. இங்குள்ள மொட்டமலை உச்சியிலுள்ள சிவன் கோயிலின் பின்புறம் 51 வரி எழுத்துகளுடைய பாறைக்கல்வெட்டு திறந்த வெளியிலிருப்பதால் மழை, வெயில் மற்றும் மக்கள் எழுத்தின்மீதே நடப்பதால் எழுத்துகள் தேய்மானமாகி வருகின்றன. தமிழக தொல்லியல்துறை ஆவணப்படுத்திய இந்த கல்வெட்டு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளரும், பேராசிரியருமான து.முனீஸ்வரன் கூறியதாவது: ''பேரையூர் மேலப்பரங்கிரிமலை உச்சியிலுள்ள கோயிலின் பின்புறம் 51 வரி எழுத்துக்களையுடைய தமிழ் கல்வெட்டு உள்ளது. இது கிபி.1280-ல், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் பொறிக்கப்பட்டுள்ளது. முத்து உடையார் விக்கிரமசிங்க தேவன் என்ற சிற்றரசன், மல்லிகார்ஜுனர் சிவன் கோயிலுக்கு என நில தானங்கள் கொடுத்துள்ளதை குறிக்கின்றது.
இதனை 2003-ல் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் கல்வெட்டின் கிழக்கு திசையில் 6 வரியுடைய சிவனை போற்றும் பாடல் உள்ளது. இப்பாடலை பாடினால் தீராத நோய் தீர்ந்து விடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கிபி.13ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டாகும். மழை, வெயில், மக்கள் நடமாட்டத்தால் சேதமாகி வரும் இக்கல்வெட்டை வரும் தலைமுறையினர் அறியும் வகையில் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT