Published : 17 Mar 2023 07:42 PM
Last Updated : 17 Mar 2023 07:42 PM
சேலம்: ஏற்காடு கொட்டச்சேடு அருகே 28 கி.மீ. சுற்றிக் கொண்டு ஏற்காடு சென்று வர வேண்டிய நிலையில் இருந்த மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாக, தனியார் நிலத்தைப் பெற்று 3 கிமீ. நீளம் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் 25 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது, மலைக் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் பாதையில் கொட்டச்சேடு உள்ளது. கொட்டச்சேடு அருகே கூட்டுமுட்டல், பெலாக்காடு, மாரமங்கலம், கேளையூர், செந்திட்டு, குறிஞ்சிப்பாடி, அரங்கம், மதூர், நார்த்தன்ஜேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் சுமார் 4,500 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏற்காடு அல்லது கொட்டச்சேடு செல்வதற்கு சுமார் 28 கிமீ., தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தனியார் எஸ்டேட் உள்பட தனியாருக்கு சொந்தமான நிலம் வழியாக, சுமார் 3 கிமீ., தொலைவுக்கு புதியதாக சாலை அமைத்து, தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று சிரமத்தைப் போக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து, போராடி வந்தனர். மக்களின் பிரச்சினையை அறிந்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கொட்டச்சேடு பகுதியில் மலை கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, மக்களின் 25 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. குறிப்பாக, சுமார் 28 கிமீ., சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருந்த மக்களுக்கு, தற்போது பயண தூரம் 3 கிமீ., ஆக குறைந்துள்ளது.
இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா கூறியது: ''கொட்டச்சேடு அருகே ஃபீல்டு எண் 6 என்ற இடத்தில் இருந்தும், சிவில் எண்-7 என இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இந்த இரு வழித்தடங்கள் வழியாகவும், மக்களுக்கு சாலை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஆனால், ஃபீல்டு எண் 6-ல் உள்ள வழித்தடம் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமானது. அங்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. மற்றொரு வழித்தடமான சிவில் எண் 7-ல், தனியார் எஸ்டேட் மற்றும் தனியார் 9 பேரின் நிலங்கள் உள்ளன. அவர்கள், சாலை அமைப்பதற்காக, தங்களின் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளனர். குறிப்பாக, 0.9 கிமீ., நிலத்தை அவர்கள் தானமாக வழங்கியுள்ளனர்'' என்றார்.
இதனிடையே, ஆட்சியர் கார்மேகம் உத்தரவின்பேரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக, கொட்டச்சேடு- நார்த்தன்ஜேடு இடையே ரூ.5.50 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் இடத்தில் வட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். ஏடிஎஸ்பி., கென்னடி தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை மாவட்ட எஸ்பி., சிவகுமார் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
புதிய சாலை மூலம் 28 கிமீ., தூரம் செல்லத் தேவையின்றி, வெறும் 3 கிமீ.,- மட்டுமே பயணித்தால் போதும் என்ற வசதி கிடைப்பதுடன், 28 ஆண்டு கால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளதால், மலை கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT