Published : 16 Mar 2023 08:49 PM
Last Updated : 16 Mar 2023 08:49 PM
கேம் ஸ்ட்ரீமிங் தளமான ரூட்டர் தளத்தில் சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ளார் ரித்து சியாத்தியா. ஜம்முவை சேர்ந்த 44 வயது இல்லத்தரசி. இந்த தளத்தில் தனது கேம்பிளேவை நேரலையில் ஸ்ட்ரீம் செய்து வருகிறார். கேமர்ஸ் கம்யூனிட்டியில் ‘பிளாக்பேர்ட்’ என்ற பெயரில் இவர் அறியப்படுகிறார்.
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பெற வேண்டி கேமிங்கில் அவர் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து அப்படியே தொழில்முறை கேமராக அவர் முன்னேறியுள்ளார். ஆனால், அதன் மூலம் வருவாய் ஈட்ட வேண்டுமென்ற திட்டம் எல்லாம் அவர் வசம் அப்போது இல்லை. ஆனால், அதுவும் அவருக்கு கைகூடியதாக தகவல்.
மேல்நிலைப் பள்ளி வரை மட்டுமே படிப்பு. 20 வயதில் திருமணம். குடும்பம், கணவர், பிள்ளைகள் என இருந்த அவர் இ-ஸ்போர்ட்ஸ் கேமராக மாறியது எப்படி என்பதை பார்ப்போம்.
“இளம் வயதில் எனக்கு திருமணம் நடந்தது. 25 ஆண்டுகளாக இனிதான வாழ்க்கையை எனது கணவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறேன். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, மகனை கவனித்துக் கொள்வது என என் வாழ்க்கை கடந்தது. ஆனால், சொந்தமாக பணம் ஈட்டுவது, நாலு காசுக்கு யார் கையையும் என்னால் எதிர்பார்க்காமல் இருக்க முடியும் என ஒருபோதும் நான் எண்ணவில்லை.
அப்படி இருந்த சூழலில் நான் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமை முதன்முதலில் விளையாட துவங்கினேன். அந்த கேம் குறித்த புரிதலை நான் பெற சில காலம் பிடித்தது. ஆர்வத்தின் காரணமாக கேம் விளையாட துவங்கினேன். எனக்கு ஒரு பொழுதுபோக்காகவே அது இருந்தது. அதுவே என்னை கேமிங் பக்கம் ஈர்த்தது.
எனது மகன் கேம்பிளேவை நேரலையில் ஸ்ட்ரீம் செய்தான். அதை பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது. அதை நானும் முயற்சிக்க வேண்டும் என முயற்சித்தேன். அது எனக்கு புதிய மற்றும் தனித்துவமிக்க அனுபவமாக இருந்தது. அதற்கு எனது கணவரும், மகனும் ஊக்கம் கொடுத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் நான் எனது மகன் விளையாடுவதை பார்த்துதான் நாமும் கேம் விளையாடி பார்க்க வேண்டும் என இதை ஆரம்பித்ததுதான்.
நான் கேம் விளையாடுவது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவரித்தேன். அதெல்லாம் பிள்ளைகளுக்கானது என சொல்லி என்னை பார்த்து சிரித்தார்கள். ஆனால், நான் அதிலிருந்து வருமானம் ஈட்டியதை பார்த்த அவர்கள், இப்போது கேம் விளையாட துவங்கி உள்ளனர். இதில் நான்தான் அவர்களுக்கு ஆட்டமுறை சொல்லிக் கொடுத்து வருகிறேன். என்னைப் போலவே பல பெண்கள் இந்த கேமிங் துறையில் தயக்கமின்றி ஈடுபட வேண்டும் என எண்ணுகிறேன்.
இ-ஸ்போர்ட்ஸ் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தொழில்முறையாக கேமிங் விளையாடுவது மாற்றுமுறை தொழில் வாய்ப்பாக அமையும். இதில் வருமானம் மிகவும் குறைவுதான். ஆனால், ஃபன் அதிகம்” என்கிறார் ரித்து. கடந்த ஓராண்டு காலத்தில் நேரலை ஸ்ட்ரீமிங் மூலம் சுமார் 1 லட்ச ரூபாய் அவர் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் கேமர்களில் சுமார் 44 சதவீதம் பேர் பெண்கள் என ஒரு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT