Published : 10 Mar 2023 06:55 PM
Last Updated : 10 Mar 2023 06:55 PM
மதுரை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் கேரள இளைஞர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சிறந்த ஓவியர் என்பதால் தினமும் ஓவியங்கள் வரைந்து விற்று, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் அவர் இந்த விழிப்புணர்வு பயணத்தைப் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அசன் ஜாகீர் வயது 23. இன்டீரியர் டிசைனிங் பி.எஸ்.சி பட்டப் படிப்பு முடித்துள்ளார். இவரது தந்தை பெயின்ட்டிங் வேலை பார்க்கிறார். சிறிய வயதிலேயே அசன் ஜாகீர் சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால், தன்னை தற்போது முழுமையாக சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் இந்தியா முழுவதும் பாதிக்கப்படுவதை அறிந்து அவர் அதை தடுக்க வலியுறுத்தி கடந்த வாரம் திருச்சூரில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கினார்.
கேரளாவின் திருச்சூரில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் ஆலப்புழா கொல்லம் திருவனந்தபுரம் கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி வழியாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வந்தார். அவருக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது காந்தி நினைவு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் காந்தியின் சிந்தனைகள் அடங்கிய மலையாள மொழியில் உள்ள புத்தகத்தை வழங்கினார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அசன் ஜாகீர் கூறுகையில், ''குழந்தைகள் சின்ன வயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். நான் அடிப்படையில் சிறந்த ஓவியன். நன்றாக படங்களை வரைபவன். அதனால், தினந்தோறும் ஏதாவது ஒரு படத்தை வரைந்து அதை விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில் என் உணவுக்கான தொகையினை செலவழிக்கிறேன்” என்றார்.
மதுரையிலிருந்து புறப்பட்ட அவர் ராமேஸ்வரம் வழியாக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு கர்நாடக மாநிலம் செல்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT