Published : 08 Mar 2023 02:53 PM
Last Updated : 08 Mar 2023 02:53 PM
சாதனைகள்ன்னா அது பிரிஷா... பிரிஷான்னா சாதனைகள்தான், என தான் செய்த சாதனைகளின் எண்ணிக்கை பட்டியல்களோடு மட்டுமல்லாமல் வாங்கியிருக்கும் அத்தனை விருதுகளையும் நம்மிடம் காட்டி பிரமிக்க வைக்கிறார் உலகின் இளம் வயது யோகா ஆசிரியர் பிரிஷா.
13 வயதாகும் பிரிஷா, திருநெல்வேலியில் உள்ள மீனா சங்கர் வித்யாலயாவில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி. கண்களை துணியால் கட்டி அவர் முன் ரூபாய் நோட்டை நீட்டினால், அந்த ரூபாய் நோட்டையும், அதில் உள்ள சீரியல் எண்களையும் மிகச் சரியாக துல்லியமாகச் சொல்லிவிடுகிறார். கண்களைக் கட்டிக்கொண்டபடியே பாக்ஸ்களில் ஏதாவது ஒரு எழுத்து உள்ள கார்டை போட்டாலும் அதில் என்ன இருக்கிறது என்பதையும் சரியாகப் படித்துவிடுகிறார்.
பிரிஷாவிடம் பேசினோம். பேச்சில் கம்பீரம். இவ்வளவு சாதனைகள் பண்ணியிருக்கிறீர்களே உங்கள் நண்பர்கள் என்ன சொல்வார்கள் உங்களிடம் என்று கேட்டால், "என் நண்பர்கள் எல்லோரும் என்னிடம் எப்போதும் என் சாதனைகள் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும். என்னை அனைவரும் ரோல் மாடலாக பார்ப்பதாகவும் கூறுவார்கள். என்னிடம் பேசும் உறவினர்கள் எல்லோரும் என்னை `தெய்வக் குழந்தை` என்று பாராட்டுகிறார்கள்" என்றபடி சிரிக்கிறார்.
மேலும், “நீங்களும் யோகா கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பலம் உங்களுக்குப் புரியும். பள்ளி கல்லூரிகளில் யோகாவை கட்டாயப் பாடமாகச் சேர்த்தால், அடுத்த தலைமுறையினருக்கு நோயற்ற வாழ்வு நிச்சயம்” என்கிறார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பாடங்களில் தன்னைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதை மிகப் பெரிய கவுரவமாக நினைக்கிறேன் என்கிறார். மூன்று முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளேன் என்றவரிடம், தற்போது உலகின் சிறந்த முன்னுதாரணமாகவும், உலகின் சிறந்த 100 குழந்தைகளில் ஒருவராகவும், குழந்தை மேதையாகவும் சிறப்பு பெற்றிருக்கிறீர்களே என்ன நினைக்கிறீர்கள் என்றதற்கு, `கடவுள் மிகவும் சக்தி வாய்ந்தவர்` என்கிறார். தற்போது உலக மகளிர் அசோஷியேஷனின் தூதராக உள்ளார் என்பது பெருமைக்குரியது.
அவரின் சாதனைகள் குறித்து அவரது அம்மா வழக்கறிஞர் தேவிப்ரியாவிடம் பேசினோம். "ஒருநாள் நானும் எனது அம்மாவும் யோகா செய்து கொண்டிருந்தோம். அப்போது பிரிஷா ஒரு வயதுக் குழந்தையாக இருந்தார். நாங்கள் யோகா செய்வதைப் பார்த்து அவளும் கை, கால்களை அசைத்து யோகா செய்ய ஆரம்பித்துவிட்டாள். மிக எளிதாக அனைத்தையும் செய்தாள். அதன்பிறகு போகப்போக பிரிஷாவிடம் ஏதோவொரு சிறப்பு திறமை இருப்பதை நாங்கள் அனைவரும் உணர்நதோம். அதனையடுத்து யோகா, நீச்சல், ஸ்கேட்டிங், டான்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளை நானே சொல்லிக்கொடுத்தேன். அந்த பயிற்சிகள் ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்கினாள்.
நீச்சல் பயிற்சி செய்து கொண்டே யோகா செய்வது, கண்ணை மூடிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவது என பிரிஷா இதுவரை 70 உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதனையெல்லாம் பாராட்டி உலகிலேயே அதிக உலக சாதனைகள் படைத்ததற்கான சான்றிதழை குளோபல் யூனிவர்சிட்டி வழங்கியுள்ளது. உலகிலேயே முதல் இளம் வயது யோகா ஆசிரியருக்கான சான்றிதழை மத்திய அரசு NCPCR-ம் வழங்கி உள்ளது. உலகிலேயே முதன்முதலாக மூன்று முனைவர் பட்டங்களை பிரிஷாவிற்கு வழங்கி அமெரிக்கா மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் கெளரவித்து உள்ளது.
நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம் இவரின் 9-வது வயதில் முனைவர் பட்டம் வழங்கி, உலகிலேயே முதன் முதலில் சிறு வயதில் முனைவர் பட்டம் பெற்ற பெருமையை கொடுத்தது. அமெரிக்காவின் உலக தமிழ் பல்கலைக்கழகம் இரண்டாவது முனைவர் பட்டத்தையும், இந்தியன் எம்பயர் பல்கலைக்கழகம் மூன்றாவது முனைவர் பட்டத்தையும் 12 வயதில் பிரிஷாவுக்கு வழங்கியது.
திருநெல்வேலியில் உள்ள எய்ட்ஸ் ஹோம், பார்வையற்றோர் பள்ளி, முதியோர் இல்லம், கல்லூரி, காவல் துறையினர் மற்றும் என்சிசி மாணவர்களுக்கு என தமிழ்நாட்டிலும், பாண்டிச்சேரியிலும் இலவச யோகா விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார்.
கடந்த 5 வருடங்களாக பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்காக இலவசமாக யோகா வகுப்பு எடுத்து வருகிறார். இவரது பார்வையற்ற மாணவர் கணேஷ்குமார் யோகாவில் உலக சாதனையை படைக்க வைத்துள்ளார். பிரிஷா பெற்றிருக்கும் அதிசய திறமையைக் கண்டு நாங்கள் பலமுறை ஆச்சரியப்பட்டிருக்கிறோம். கண்களைக் கட்டிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி உலக சாதனை படைத்திருக்கிறார். யோகாசனத்தில் கண்களை கட்டிக்கொண்டு ரூபிக்ஸ் கியூப் சரிசெய்வது, படிப்பது, எழுதுவது, இரு கைகளாலும் எழுதுவது போன்றவற்றை செய்து உலக சாதனை புரிந்துள்ளார். கண்களை கட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் ஓட்டிக்கொண்டு பந்தை தட்டி கொண்டே செல்வார். தண்ணீருக்கு அடியில் பலவித யோகாசனத்தில் நீச்சல் செய்தும் உலக சாதனை புரிந்திருக்கிறார். கிராஸ் பவ் சூட்டிங்கில் மாநில மற்றும் தேசிய அளவில் தங்கமும் வென்றுள்ளார்.
கராத்தேவில் ப்ளூ பெல்ட் வாங்கி, ஆல் இந்திய கராத்தே போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். மேலும் பிரிஷா, `யோகா- இன்றே செய்வோம்... இன்பம் பெறுவோம்` என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதில் பிரணாயாமம், சூரிய நமஸ்காரம், எளிய ஆசனங்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா முதலிய நோய்களை தவிர்க்கும் ஆசனங்கள் மற்றும் நோய் வந்த பின் செய்யும் ஆசனங்களையும் தானே செய்து காட்டிய படங்களுடன் செய்முறை பயன்களை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை "இந்தியா பிரைம் அவார்டு"க்கு தேர்வு செய்துள்ளனர்" என்கிறார்.
மேலும், இவர் மலேசியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவில் தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், உலகச் சாம்பியன் பட்டங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதனையடுத்து இவருக்கு மலேசியாவில் யோகா லிட்டில் ஸ்டார் என்ற பட்டத்தை அளித்து கௌரவித்து உள்ளனர். National Youth Festival 2020 - 2021 மத்திய அரசின் யோகா போட்டியின் நடுவராகவும், விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா யோகாசன போட்டியில் சிறப்பு அழைப்பாளராகவும் அழைத்துள்ளனர் என்பதே எங்களுக்குப் பெருமையாக உள்ளது என்கிறார் பிரிஷாவின் அம்மா.
பிரிஷா பெற்ற விருதுகள் என்று பார்த்தால், யோகா ராணி, யோக கலா, யோகா ஸ்ரீ யோக ரத்னா, ஆசனா ஸ்ரீ, லிட்டில் யோகா ஸ்டார், பாரதி கண்ட புதுமைப்பெண், அன்னை தெரசா விருது, சக்சஸ் விருது, அப்துல்கலாம் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, அமைதிக்கான விருது, இளம் சாதனையாளர் விருது, அவள் விருதுகளில் லிட்டில் சாம்பியன் அவார்டு என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
"நான் இதுவரை பிரிஷா செய்த சாதனைகள் எல்லாவற்றுக்கும் முதல் ஆளாக கூடவே இருந்து அவரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பேன். இனியும் அவரின் அனைத்து முயற்சிகளுக்கும் உடன் இருப்பேன். யோகாவில் பிரிஷா பெற்றிருக்கும் இந்த திறமை சமூகத்திற்கு நல்லவகையில் பயன்படச் செய்யவேண்டும் என்பதே அவர் விருப்பம். அதை நிறைவேற்றுவேன்" என்கிறார் பிரிஷாவின் தந்தை கார்த்திகேயன்.
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT