Published : 08 Mar 2023 10:59 AM
Last Updated : 08 Mar 2023 10:59 AM
வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும், நமக்கு நாமே தைரியம் சொல்லிக்கொள்கிற துணிவு இருந்தால் போதும், எதையும் கடந்து விடலாம். உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லாமல், தைரியத்தையும், துணிச்சலையும் மட்டுமே மூலதனமாக வைத்து, ஆதரவில்லாமல் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார் மீனா சத்தியமூர்த்தி. நம்மிடம் அவர் பகிர்ந்தவை...
“என் சொந்த ஊர் கரூர். அப்பாவும், அம்மாவும் நான் குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். தாத்தா, பாட்டியிடம்தான் நான் வளர்ந்தேன். எந்த குறையும் தெரியாமல் தான் என்னை வளர்த்தார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தாத்தாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட காரணத்தினால், எனக்கு உடனே கல்யாணம் பண்ண வேண்டிய நிர்பந்தம். என் வாழ்க்கையே திசைமாற்றிய சம்பவம் திருமணம்.
கரூர்ல தாத்தா பாட்டியோட அரவணைப்புலேயே இருந்துவிட்டு, சென்னைக்கு கல்யாணம் முடிந்து வரும்போது, ரொம்பவும் பிரமிப்பாகத்தான் இருந்தது. இந்த ஊர், இந்த மக்கள் எல்லாமே எனக்கு புதுசு. ஆனா, இங்கதான் எனக்கான அடையாளம் கிடைக்கும்னு அப்பொழுது எனக்கு தெரியவில்லை. இனி இதுதான் வாழ்க்கைன்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது, விவாகரத்து வேணும்னு கேட்டார் என் கணவர். 16 வயசுல கல்யாணம் 19 வயசுல விவாகரத்து, அரவணைக்க ஆள் இல்லை. சொந்த, பந்தம் இவ்லாமல், அம்பத்தூரில் ஒரு ஹோம்ல போய் சேர்ந்தேன், கையில் ஒரு பைசா கூட கிடையாது. யார்கிட்டயும் உதவி கேட்க மனசு வரவில்லை.
பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். ஆங்கில அறிவு கொஞ்சம் இருந்தது. ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். சம்பாதித்த பணத்தை சேமிச்சு, மெடிக்கல் கோடிங் சம்பந்தமாக படித்தேன். கொஞ்ச நாள் ஐடி கம்பெனியில வேலை பார்த்தேன்.
லாக்டவுன் நேரத்தில், சில டாக்டர்கள் மூலமாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், கரோனா வார்டில் தன்னார்வலராக வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மருத்துவமனை பெரிய அளவில் இருப்பதால் வழி தெரியாதவர்களுக்கு வழிகாட்டியாக, அட்மிஷன் போடுவது, நோயாளிகளை வீல் சேரில் உக்கார வைத்து தள்ளிகொண்டு போவது, சிகிச்சைக்கு வருகிறவர்களிடம் என்ட்ரி போட்டு அவர்களுக்கான உதவிகள் செய்வது என்று என்னால் ஆன வேலைகளை செய்துவந்தேன்.
என் மனதிற்கு கரோனா கற்றுத் தந்தப் பக்குவப் பாடம் என்பது மிக பெரியதாக நினைக்கிறேன். மருத்துவமனையில் கரோனா பாதித்து குணமாகிப் போறவங்க மூகத்தில் சந்தோஷத்தையும், உறவுகளைப் பறிகொடுத்தவங்க அழுகிற அழுகையையும் பார்த்துப் பார்த்து மனசு ரொம்ப பக்குவமாகி விட்டது. அப்படியே கரோனா வார்டில் கரோனா காலக்கட்டங்கள் முழுவதும் வேலை பார்த்தேன். அது என் மனசுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்போது நான் முழுமையாக இறங்கி, உறவுகளே பக்கத்தில் வர பயந்த கரோனா நோயாளிகளின் உடலை எல்லாம் எடுத்து அடக்கம் பண்ணினேன்.
நான் ஏற்கெனவே 'உறவுகள்' என்ற அமைப்பின் மூலமாக, ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்கிற பணியைச் செய்துகொண்டுதான் இருந்தேன். ஒரு காலத்தில், எனக்கு இருட்டுனா பயம், யாருக்காவது சின்ன அடிபட்டிருந்தாலும்கூட பயப்படுவேன். அவ்வளவு பயந்த நான்தான், இன்று எதையும் எதிர்கொள்கிற தைரியத்தோட இருக்கிறேன்.
இங்கு காலமும், சூழ்நிலையும் சக்தி வாய்ந்தவை. நம்மை செதுக்குகிற ஆற்றல் அவைகளுக்கு மட்டுமே உண்டு. ஒரு பெண்ணால் இந்தச் சமூகத்தில் தனித்து வாழ முடியாது. அப்படி வாழ்ந்தால் இந்தச் சமூகம் அவள் மீது வசை சொற்களையும், வார்த்தை அம்புகளையும் வீசும் என்கிற பார்வையை யாரோ ஒருவர் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இதே சமூகத்தில்தான் தனி ஒரு மனுஷியாக நின்று என்னை நிரூபித்துக்கொண்டு இருக்கிறேன்" என்கிறார் மீனா.
'தோழன்' என்ற அமைப்பில் இணைந்து சிக்னல்களில் சாலைப் பாதுகாப்பு, கட்டாய ஹெல்மெட், பேருந்துப் படிக்கட்டுப் பயணத்தை தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் செய்துவருகிறேன். மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற விஷயங்களை கையிலெடுத்து, மின் விளக்கு எரியாதது, குப்பைகள் தேங்கியிருப்பது குறித்து புகார்களை உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்வது போன்ற விஷயங்களையும் செய்து வருகிறேன்.
“என்னால் ஆன சில உதவிகளை இந்த சமுதாயத்துக்கு தைரியமாக செய்து கொண்டுதான் இருக்கிறேன். வாழ்க்கையில் பெரியதாக எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. ஓடிக்கொண்டே இருக்கிறேன். நான் தற்போது இரண்டு ஆர்க்கானிக் உணவு பொருட்கள் கடை வைத்திருக்கிறேன். எந்த அளவிலுமான தைரியமற்று இருந்த எனக்கு இன்று எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியம் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு தன்னம்பிக்கை தான் காரணம். நான் ஏற்படுத்தியிருக்கும் இந்த கடைகளும் ஒரு காரணம். அன்று நான் கரோனா நேரத்தில் செய்த தன்னலமற்றப் பணிகளால் தான், எனக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஒரு நிரந்தரப் பணியும் கிடைத்திருக்கிறது.
எது எப்படியோ, எனக்கு மறுபடியுமான திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லை. எனக்கு இப்போது எல்லாம் இருக்கக்கூடியது ஓரே ஆசைதான். வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்காகவே வாழ்ந்து விட வேண்டும். அதுவும் நான், ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று என்று தத்தெடுப்பதற்கு காரணம், எனக்குப் பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் தனியாக வாழக் கூடாது என்பதுதால்தான்” என்கிற மீனாவுக்கு, சமீபத்தில் `தன்னம்பிக்கை பெண்` என்கிற விருதை கொடுத்து கவுரவித்து இருக்கிறார்கள்.
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT