Published : 27 Feb 2023 04:21 PM
Last Updated : 27 Feb 2023 04:21 PM
பள்ளிக்கு முன்பு பாட்டிகள் கடை விரித்திருப்பதால், ‘பள்ளிப் பாட்டி’ என்கிற அடைமொழி அவர்களுக்கு. சுருங்கிய தோல், வலிமைமிக்க கைகள், தலையில் கொஞ்சம் நரை, பேச்சில் கூடுதல் அக்கறை, முதிர் வயதிலும் அதீத சுறுசுறுப்பு, நலம் குழைத்த விற்பனை போன்றவை பள்ளிப் பாட்டிகளுக்கான அறிமுகம்!
பல பள்ளிகளில் ஐந்து முதல் பத்து பாட்டிகள் வரை வரிசையாய் அமர்ந்து விற்பனை செய்வார்கள். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் ஒரு பாட்டி மட்டுமே கூட்டத்தைச் சமாளிப்பார். தரையோடு தரையாக ஒரு துணியைப் பரப்பி பள்ளிச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருப்பார் பாட்டி!
கிராமத்துப் பள்ளிகளில் மட்டுமன்றி, நகரத்துப் பள்ளிகளிலும் வியாபாரம் செய்வார்கள் பாட்டிகள்! கிராமமாக இருந்தால் ஒரு புளியமரத்துக்கு அடியில் கடை இருக்கும். நகரப் பள்ளிகளாக இருந்தால், நிழலுக்காகச் சுவரோடு சேர்த்து மேலே ஒரு துணியைக் கட்டி அதற்குக் கீழே கடை அமைத்திருப்பார்கள்.
பாட்டிக்காக ஏங்கும் மனம்
அந்தக் காலத்தில், உணவு இடைவெளிக்கான மணியை எப்போது அடிப்பார்கள் என உள்ளம் ஏங்கிக் கிடக்கும்! ‘கணீர்… கணீர்…’ என்ற ஒலியுடன் மணி ஓசை எதிரொலித்ததும் ஒரு பெருங் கூட்டம் பள்ளியின் நுழைவாயிலுக்கு அருகே கடை விரித்து அமர்ந்துகொண்டிருக்கும் பாட்டியைத் தேடி திபு திபுவென ஓடும். மதிய உணவிற்கான தொடுகைப் பண்டங்களைப் பாட்டியிடம் வாங்கி வருவார்கள் மாணவர்கள். பலரின் மதியப் பசியை முழுமையாகப் பாட்டியின் தின்பண்டங்களே ஆசுவாசப்படுத்தும். பள்ளிகளில் கொடுக்கப்படும் சத்துணவுக்குத் துணையாகப் பாட்டி வைத்திருக்கும் உணவுப் பண்டங்கள் சத்துக்களை வழங்கும்.
ஆரோக்கிய விருந்து
காலத்திற்கேற்ப பழங்கள் பாட்டியிடம் தவறாமல் கிடைக்கும். எந்தெந்த மாதங்களில் என்னென்ன பழங்கள் கிடைக்கும் எனக் கிராமத்துப் பாட்டிகளுக்கு அத்துப்படி! கால சூழ்நிலைக்கு ஏற்ப பழங்களின் சத்துகள் மாணவர்களைச் சென்றடையும் படி பாட்டிகள் பார்த்துக் கொள்வார்கள். கிராமத்தில் தன்னிச்சையாக வளர்ந்துகிடக்கும் பழ மரங்களிலிருந்து பழங்களைப் பறித்து விற்பனைக்குக் கொண்டு வருவார்கள்.
நாவில் ஊதா நிறத்தைப் படரச் செய்யும் நாவல் பழம், வெளுத்தும் சிவந்தும் தோலிலிருந்து முட்டி நிற்கும் கொடுக்காப்புளி, சீவி வைத்த மாங்காய் பத்தைகள், சுருங்கிய தேகம் கொண்ட இலந்தைப் பழங்கள், புளிப்பைக் கொடுத்து சுவையைக் கூட்டும் களாக்காய், கூறு கூறாக வைக்கப்பட்டிருக்கும் சிறுநெல்லி மற்றும் பெரு நெல்லி, கையில் எடுக்கத் தூண்டும் கமலா ஆரஞ்சு, மிளகாய்த் தூளால் கவசம் செய்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கொய்யா என உடல் ஆரோக்கியத்திற்கான விருந்தாகப் பள்ளிப் பாட்டியின் கடை அமைந்திருக்கும்.
பழங்கள் மட்டுமன்றி வீட்டிலேயே செய்த தட்டுவடை, முறுக்கு ரகங்கள், இலந்தை வடை, குடல் அப்பளங்கள், ஆரஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய், சூட மிட்டாய், புளிப்பு மிட்டாய் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெறக்கூடிய அக்கால சூப்பர் மார்க்கெட்டாக பாட்டிக் கடைகள் திகழ்ந்தன!
அழிக்க முடியாத நினைவு
பாட்டியிடம் வாங்கிய தின்பண்டங்களை வீடு வரை கொறித்துக் கொண்டே நடந்து செல்வார்கள் மாணவர்கள். காலையில் வாங்கிய தின்பண்டங்களைச் சட்டைப் பாக்கெட்டில் ஒளித்து வைத்து வகுப்பு நடைபெறும் சமயத்தில் அசை போடும் துடுக்குதனமான மாணவர்களையும் வகுப்பறைக்குள் கவனிக்கலாம். ஆசிரியர்களின் பசியைப் போக்கவும் பாட்டிக் கடைகள் துணை புரியும்.
பள்ளிப் பாட்டிகள், அக்கால மாணவர்களிடம் பழங்கள், ஆரோக்கிய பண்டங்களின் ஊட்டங்களைக் கொண்டு சேர்த்த மருத்துவர்கள். பள்ளிப் பாட்டிகளின் விற்பனையில் அறம் அதிகமிருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் கூடுதல் விலையில் விற்பனை நடக்காது. கொடுத்த விலையை விடக் கூடுதலாகத் தின்பண்டம் கிடைக்குமே தவிர, குறைவாக இருக்காது.
90ஸ் கிட்ஸின் அழிக்க முடியாத நினைவு பொக்கிஷம் பள்ளிப் பாட்டிகளே! ஆனால், இன்றோ நிலைமை வேறு… பள்ளிகளுக்கு முன்பும் பாட்டிகள் இல்லை; வீட்டுக்குள்ளும் பாட்டிகள் இல்லை! மீண்டும் கிடைப்பார்களா பள்ளிப் பாட்டிகள்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment