Published : 27 Feb 2023 04:00 AM
Last Updated : 27 Feb 2023 04:00 AM
கோவை: ‘பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி’ என பல்வேறு அம்சங்களுடன் ‘தமிழ் தெம்பு - தமிழ் மண் திருவிழா’ கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் மண்ணின் வாழ்வியலுடன் தொடர்புடைய அம்சங்களை கொண்டாட்டங்களின் மூலம் புதுப்பிக்கவும், புத்துணர்வூட்டவும் இவ்விழா மஹாசிவராத்திரியை தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. தினமும் மாலை வேளையில், ஆதியோகி சிலை முன்பு வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஈஷாவில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஸ்வாமி அதிந்திரா, நாயன்மார்களின் கதைகளையும், தேவாரப் பாடல்கள் இயற்றப்பட்ட வரலாற்றையும் பொது மக்களுக்கு எளிய முறையில் புரியும் படியாக கதை சொல்லும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர், ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டும் செய்து காட்டினர். இது தவிர, தொன்மையான கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம், மஹா ஆரத்தி ஆகியவை தினமும் தொடர்ந்து நடத்தப்பட்டன.
மேலும், ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி, நூற்பு கைத்தறி நெசவு சமூகத்தின் கைத்தறி ஆடைகள் கண்காட்சி மற்றும் விற்பனை, தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ருன், மணப்பாறை முறுக்கு போன்ற கிராமிய உணவுப் பண்டங்களின் விற்பனை, தேன் விற்பனை ஆகியனவும் இடம்பெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT