Published : 21 Feb 2023 09:03 PM
Last Updated : 21 Feb 2023 09:03 PM
மதுரை: சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அலுவலக கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக இனி ‘சிறுதானிய பால் கஞ்சி’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாய குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் அலுவலர்கள், அதிகாரிகளுக்கு வழக்கமாக டீ மற்றும் காபி வழங்கப்படும். ஆனால், இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதன்முறையாக டீ, காபிக்கு பதிலாக சிறுதானிய பால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.
விவசாயிகளின் சிறுதானியங்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தேநீருக்கு பதிலாக முதன்முறையாக ‘மில்லட் பால்’ என்ற சிறுதானிய பால் கஞ்சி விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்டது. உடல் நலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும், சுவையுடன் கூடிய சூடான சிறுதானிய பால் கஞ்சி வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரின் இந்த முயற்சிக்கு விவசாயிகள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதுபோன்று இனிவரும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் சிறுதானிய பால் கஞ்சி வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தங்கள் எதிர்பார்ப்பை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து ஆட்சியர், இனிவரும் கூட்டங்களில் சிறுதானிய விவசாயிகளின் நலன் கருதி சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய பால் கஞ்சி தொடர்ந்து வழங்க முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் விளைவிக்கும் சோளத்தை வைப்பதற்கு மக்காச்சோள கொள்முதல் நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கப்படும் என ஆட்சியர் அனீஸ் சேகர் தெரிவித்தார். மேலும், அவர், மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது குறித்தும், சிறுதானிய விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாக வேளாண் துறை சார்பில் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என வேளாண் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார்.
உணவு சந்தையில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் 2023-ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட ஆட்சியரின் இந்த முன்னெடுப்பிற்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT