Published : 19 Feb 2023 04:25 AM
Last Updated : 19 Feb 2023 04:25 AM
விழுப்புரம்: தமிழ் பெருநிலப் பரப்பை மன்னர்கள் ஆண்ட காலத்தில், ‘மல்லர் கம்பம்’ விளையாட்டை போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் விளையாடியுள்ளனர். தங்களின் பராக்கிரமச் செயலுக்கு வலுவேற்ற இந்த ‘மல்லர் கம்பம்’ அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைந் திருந்தது.
சோழர்களும், பல்லவர்களும் மல்லர் விளையாட்டை போற்றி பாதுகாத்தனர். அவர்களின் அரசவையில் தலை சிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டிலும் மல்யுத்தத்திலும் தலை சிறந்த முதலாம் நரசிம்மவர்ம பல் லவன் ‘மாமல்லன்’ என பெருமையோடு அழைக்கப்பட்டான் என்ற செவி வழிச் செய்தியும் உண்டு.
‘மல்லர் கம்பம்’ உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி வந்தது. மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த மல்லர் விளையாட்டு இன்றளவும் பிரபலமாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் இந்த மல்லர் விளையாட்டை அரசு விளையாட்டாக அங்கீகரித்துள்ளன.
மகாராஷ்டிராவில் எந்தவிழா தொடங்கப்பட்டாலும் இறை வணக்கத் துக்குப் பிறகு 5 நிமிடங்கள் மல்லர் பயிற்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் அரிதாகி வரும் அபூர்வ கலைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. இருப்பினும் விழுப்புரத்தில் இந்த ‘மல்லர் கம்பம்’ கடந்த பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் அண்மையில் தேசிய அளவிலான, ‘கேலோஇந்தியா யூத் கேம்ஸ்-2022 விளையாட்டுப் போட்டியில் 26 மாநிலங்களில் இருந்து விளை யாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். ‘மல்லர் கம்பம்’ சார்பில் தமிழக அணிக்காக விழுப்புரம் நகராட்சி பி.என்.தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பவித்ரா 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
அவரை ஆட்சியர் பழனி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு முறை தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் மகாராஷ்ராவும் தமிழ்நாடும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2002-ல் மத்தியபிரதேசம் புஷாவரில் நடந்த போட்டியில் தமிழ்நாடு 2-ம் இடம் பிடித்தது. 2007-ல் சென்னை சோழிங்கநல்லூரில் நடந்த போட்டியில் தமிழக அணி தங்கம் பெற்றது.
அண்மைக் காலமாக பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மல்லர் கம்பம் விளையாட்டு பிரபலமடைய தொடங்கியிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் இன்னமும் இந்த விளையாட்டை இணைக்காமல் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் பொன்.அசோக் சிகாமணியிடம் கேட்டபோது, “தமிழகத்தில் மல்லர் கம்பம் விளையாட்டை பயிற்சி அளிக்க 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன.
இதில் ஒவ்வொருவரும் தன்னை தலைவராக முன்னிலைப்படுத்திக் கொள்கிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சங்கமாகி அரசை அணுகினால் அனைத்தும் செய்து கொடுக்க காத்திருக்கிறோம். தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் கீழ் சிலம்பம், மல்லர் கம்பம், வாலி பால் போன்ற விளையாட்டுகளை ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது.
கிரிக்கெட் ஒரு அமைப்பின் கீழ் உள்ளதால் அதற்கு மரியாதை உள்ளது. விழுப்புரத்தில் கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில் மல்லர் கம்பம் விளையாட்டை பயிற்சி அளிக்க பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் 80 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் இது விரிவுப்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT