Published : 18 Feb 2023 03:27 PM
Last Updated : 18 Feb 2023 03:27 PM
நடிகை அனுஷ்கா ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு சிரிப்பு நோய் உள்ளதாக தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு சிரிப்பு நோய் உள்ளது. அதாவது, எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பது. சிரிப்பதெல்லாம் ஒரு நோயா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் எனக்கு அந்த நோய் உள்ளது. ஒருமுறை நான் சிரிக்க ஆரம்பித்தால், குறைந்தது 20 நிமிடங்கள் வரை சிரித்துக் கொண்டே இருப்பேன்.
காமெடி காட்சிகளைப் பார்க்கும்போதும், அதை படமாக்கும்போதும் நான் தரையில் விழுந்து சிரித்துள்ளேன். இந்த நோயால் காமெடி காட்சிகளைப் படமாக்கும்போதும் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். சிரிப்பை அடக்க முடியாமல் சில சமயங்களில், படப்பிடிப்புக்கு இடைவேளைவிட்டு போய்விடுவேன். சிரிப்பை அடக்கியப் பிறகே மீண்டும் வந்து நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த நோய் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சூடோபுல்பார் (pseudobulbar) என்ற பிரச்சினை மூளையின் முன் பகுதியில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் ஏற்படுகிறது. மூளையில் செரோட்டோனின் (serotonin) என்ற ரசாயன அளவு குறைவதால் சில நேரங்களில் அழுவதும், சிரிப்பதும் நடைபெறும்.
மூளையில் எமோசனல் சுழற்சியில் மாற்றம், அலர்ஜி, வீக்கம் போன்ற பல காரணங்களால் வயது மூப்பு காலத்தில் இதுபோன்ற பாதிப்பு வருவது வழக்கம். அறிதாகவே இளம் வயதில் இந்த பாதிப்பு வருகிறது. இதனை சரிசெய்ய பல சிகிச்சைகள் உள்ளது. எஸ்எஸ்ஆர்ஐ என்ற மருந்தினை செலுத்தும்பொழுது இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும்" என்று அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT