Published : 17 Feb 2023 09:14 PM
Last Updated : 17 Feb 2023 09:14 PM
ராஜபாளையம்: “இன்றைய இளம் தலைமுறையினர் வரலாற்றை பாடப் புத்தகத்தில் மட்டும் தேடாமல் குடும்ப வரலாறு, வாழ்வியல், சமூகத்தின் வரலாற்ற அறிய முயற்சிக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் தமிழ் சமூகத்தின் மரபு, நாகரிகம், பண்பாடு, கலை, இலக்கியம், பொருளாதாரம், தொல்லியல் ஆய்வு, தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 100 கல்லூரிகளில் 1 லட்சம் மாணவர்கள் பங்குபெறும் ‘மாபெரும் தமிழ் கனவு’ திருவிழா நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் ‘அறிவோம் வரலாறு’ என்ற தலைப்பில் பேசிய மதுரை எம்.பி.,சு.வெங்கடேசன், “உலகில் முதலில் அந்துவன் என்ற தமிழ் பெயர் தான் கல்வெட்டில் எழுதப்பட்டது. பழங்கால கல்வெட்டு மற்றும் தொல்காப்பியத்தில் உள்ள கால்கோல் என்ற சொல் தான் முகூர்த்த கால் என்று மருவி இன்றும் நாம் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.
பண்டைய கால மக்கள் வரலாறு குறித்த அவசியம் புரிந்தவர்களாக வாழ்ந்தார்கள். தமிழ் மொழியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னேரே 40 பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். பண்டைய காலத்தில் பிற மொழிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம எழுத்து உரிமை இருந்தது இல்லை. இலக்கியங்களும் அவ்வாறே பெண்களே சித்தரித்தன. ஆனால் தமிழில் தான் தவறான தீர்ப்பு வழங்கியதற்காக நகரையே தீக்கிரையாக்கிய பெண்ணை நாயகியாக கொண்டு இலக்கியம் படைக்கப்பட்டது.
இன்றை இளம் தலைமுறையினர் வரலாற்றை பாடப் புத்தகத்தில் மட்டும் தேடாமல் குடும்ப வரலாறு, வாழ்வியல், சமூகத்தின் வரலாற்ற அறிய முயற்சிக்க வேண்டும். கோரக்கர் சித்தர் எழுதிய புத்தகத்தில் சதுரகிரி மலை முதல் மஹாராஷ்டிரா வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் எந்த மூலிகைகள் எங்கு உள்ளது என்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளது. செடிகளுக்கு என வரைபடம் உள்ள நூல் தமிழில் மட்டுமே உள்ளது. வரலாற்றின் சுவையை அறிய விரும்பாத மனிதன் உலகில் இல்லை. ஆனால் நமது பாடத்திட்டத்தில் வரலாறு என்பது தகவல்களை மட்டுமே கொண்ட தொகுப்பாக உள்ளதால் மாணவர்கள் வரலாற்றை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT