Published : 17 Feb 2023 08:20 PM
Last Updated : 17 Feb 2023 08:20 PM
சியோல்: கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இணைய வழியில் நடந்த பொங்கல் விழா, இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நேரடியாக கொண்டாடப்பட்டது.
தென்கொரியாவில், கொரிய தமிழ்ச் சங்கத்தின் 2023-ம் ஆண்டு தமிழர் திருநாள் , பிப்ரவரி 12-ம் தேதியன்று கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, பொங்கல் நிகழ்வுகள் இணையவழி மூலமாக நடைபெற்று வந்தது. இவ்வாண்டு பொங்கல் நிகழ்வுகள் நேரடி விழாவாக முன்னெடுக்கப்பட்டது. கொரியாவின் பல்வேறு பகுதிகளிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 200-விற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்தியத்தூதரகத்தின் துணைத்தூதர் நரேந்திர சர்மா கலந்துகொண்டு தூதர் அமித்குமார் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கொரியாவில் முனைவர் பட்டம் பெற்று, பேராசிரியாராக பணிபுரியும் ம. பாலச்சந்திரன், இங்கு தமிழ்ச் சமூகம் வளமுடன் வாழ பதிவு செய்யப்பட்ட தமிழ்ச் சங்கம் வலுவுடன் இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார். இளைஞர்களால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சியின் எப்பொழுதும் அக்கறை கொண்ட பொறியாளரும் அரசியல் பிரமுகருமான காரை செல்வராஜ் மற்றும் ஊடகவியலாளர் மு. அசீப் ஆகியோர் நேரலையில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய அசீப், "கொரியாவில் நடைபெறும் தமிழர் திருநாள் நிகழ்வு தமிழ்ப்பண்பாட்டின் தொடர்ச்சி. கீழடி அகழாய்வு சான்றுகள் " யாதும் ஊரே யாவரும் கேளீர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" உள்ளிட்ட மேற்கோள்கள் சங்ககாலம்தொட்டு நமது வாழ்வியலாக இருந்து இன்றும் நம்மை உலகோடு இணைக்கிறது. இவற்றை நினைவில் வைத்து எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் வெறுப்புகளை, சுரண்டல்களை புறந்தள்ளி தமிழர்கள் முன்செல்லவேண்டும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து தமிழரின் பாரம்பரிய கலைகளான பரதநாட்டியம், சிலம்பாட்டம், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கவிதை மற்றும் கட்டுரைப்போட்டிகள் முன்னறிவித்தல் மூலம் நடைபெற்றது. அதன்பின்னர், பொங்கலுடன் கூடிய நண்பகல் தமிழ் சைவ உணவு பரிமாறப்பட்டது. பின்னர் மழலையர் நிகழ்வுகள் நடைபெற்றது. சிறுவர் சிறுமியரின் பாடல், நடனம் மற்றும் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
அதன்பின்னர், திருமணமான மற்றும் திருமணதிற்கு காத்திருக்கும் ஆடவர் மற்றும் மகளிர் குழுக்கள் பங்குபெற்ற கயிறு இழுக்கும் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதில் திருமணமான ஆடவரும், திருமணத்திற்கு காத்திருக்கும் மகளிரும் வெற்றிபெற்றனர். பின்னர், அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர் இந்நிகழ்விற்கு வாழ்த்து அனுப்பிய நர்த்தகி நடராஜ், கார்த்திகேய சேனாதிபதி, மூத்த ஊடகவியலாளர் நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர், முனைவர் வி.ஜி. சந்தோசம், சன் செய்தி தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் மு. குணசேகரன், இந்து தமிழ் திசை இணைய ஆசிரியர் பாரதி தமிழன், கெவின் கேர் நிறுவனத்தின் அங்கத்தினரும், மூத்தகுடி அமைப்பின் தலைவருமான அசோக் குமார், மற்றும் ரஷ்ய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சாமியப்பன் சேகர், மற்றும் கோபி கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அனைவரின் வாழ்த்தும் அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்விற்கான ஏற்பாட்டினை பொறுப்பேற்றுக்கொண்ட சங்கத்தின் புதிய ஆளுமைக்குக்குவின் அங்கத்தினர்களான செ. அரவிந்தராஜா, தெ. விஜயலட்சுமி, கோவி. சரவணன், பீ. சகாய டர்சியூஸ், ஆ. சிவகுமார், இரா. மணிகண்டன், மு.சந்திரன், ந. முத்துசாமி, பி. ஜெரோம், மு. பாலாஜி, ஜி. சம்பத்குமார், மு. ஆனந்த், ஆ. பாரதி, இ. செலஸ்டின்இராஜா, தி. மணிகண்டன், சந்தோஷ்குமார், ஹா. ஆஷிக் இலாஹி, வே. ஹேமநாதன், இரா. சாமிராஜன், ந. வைஷ்ணவி, விபின் ஜியோ, ஆகாஷ் விபின், பத்ம பிரியா, மற்றும் இரவி ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னாள் ஆளுமைக்குழு உறுப்பினர்களான முனைவர்கள் கு. ராமன் மற்றும் மோ. பத்மநாபன் உள்ளிட்டோர் வழிகாட்டி உதவி புரிந்தனர்.விழாவிற்கான உதவிகளை கச்சான் பல்கலையில் இருக்கும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் வீ. மேகலா, மற்றும் மு. சந்திரன் ஆகியோர் சங்கத்தின் நிகழ்வு இனிதே நிறைவுற வழிவகை செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT