Published : 17 Feb 2023 05:41 PM
Last Updated : 17 Feb 2023 05:41 PM

90ஸ் ரீவைண்ட்: றெக்க கட்டி பறந்த சைக்கிள்

‘றெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்…’ 90களில் றெக்கைக் கட்டிப் பறந்தது அண்ணாமலையின் பால் சைக்கிள் மட்டுமல்ல, பலரது வாடகை சைக்கிள்களும் தான்! வாடகை சைக்கிள் தொழிலும் றெக்கைக் கட்டிப் பறந்த காலம் அது! சிறு வணிகத்துக்கும், சிறுதூரப் போக்குவரத்துக்கும் வாடகை சைக்கிள்கள் பேருதவியாய் இருந்தன. பலரது நகரும் காதல் சின்னமாகக் கூட வாடகை சைக்கிள்கள் இருந்துள்ளன!

90’ஸ் காலகட்டத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால், வாடகை சைக்கிள் கடையின் அமைப்பு, பலரது நினைவுகளை இதமாய் தீண்டிச் செல்லும். ‘இங்கு சைக்கிள் வாடகைக்கு விடப்படும்’ என்று பல்பத்தின் உதவியுடன் சிலேட்டில் எழுதி வைக்கப்பட்ட சைக்கிள் கடை முகப்புகளைப் பரவலாக அப்போது பார்க்கலாம். இன்றைய காலத்தில் சுங்கச் சாவடிகளில் தின வாடகை, மாத வாடகை செலுத்திக் கடந்து செல்வதைப் போல, 80, 90களில் மணி நேர வாடகை, தின வாடகை கட்டி சைக்கிள்களை எடுத்துச் செல்வார்கள் பொதுமக்கள். மொத்தத்தில் நம்பிக்கை சார்ந்து நடைபெற்ற முக்கியமான தொழில் அது!

சைக்கிள் பஞ்சாயத்து

தொலைதூரம் பயணிக்கப் பேருந்து போக்குவரத்து பொதுவானதாக இருந்தது. ஆனால் குறைதூரத்தில் உடல் வலிமையைப் பொறுத்து சைக்கிள் பயணத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அக்காலத்து இளைஞர்களும் மத்திய வயதினரும் சைக்கிள் பெடல்களை மிதித்து மிதித்து உடல் வலிமையானவர்களாக இருந்ததைப் பார்க்க முடியும். மேல் சட்டை இல்லாமல் மடித்துக் கட்டிய வேட்டியுடன், சைக்கிள் மிதித்துச் செல்லும் பல முதியவர்களையும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

மாத வாடகைக்கு அனுதினமும் சைக்கிள்களை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், கடைக்காரருக்கு மிகவும் பரிச்சயமானவராக இருக்க வேண்டும். மணிக் கணக்கில் வாடகை செலுத்தி எடுத்துச் செல்ல கொஞ்சம் முக அறிமுகமும் தேவை. பெரும்பாலும் அப்பகுதியில் இருக்கும் மக்களைப் பற்றி கடைக்காரர் முழுமையாக அறிந்து வைத்திருப்பார். தெரிந்த நபர்களுக்கே சைக்கிள்களை வாடகைக்குக் கொடுப்பார் உரிமையாளர். சில நேரங்களில் அறிமுகமானவர்கள், சைக்கிளை வாடகைக்குக் கொடுக்கும்படி வேறு பகுதியைச் சார்ந்த நண்பர்களுக்குச் சிபாரிசு செய்வதும் நடக்கும். வாடகை சைக்கிளைச் சொந்த சைக்கிளாக மாற்றிக்கொள்ளும் சிலரையும் பார்க்கலாம். பல நேரங்களில் வாடகை சைக்கிள்களுக்காக நடக்கும் சைக்கிள் பஞ்சாயத்துச் சுவாரஸ்யமானவை!

சைக்கிள் கடை பெஞ்ச்

கடைகளில் சைக்கிள்கள் வாடகைக்குக் கிடைப்பதோடு, பஞ்சர் போடும் கடையாகவும், டயர்களுக்குக் காற்றடிக்கும் தளமாகவும் அமைந்து பலரது சிரமத்தைப் போக்கும். ‘டீக்கடை பெஞ்ச்’ போல, ‘வாடகை சைக்கிள் கடை பெஞ்ச்’ அப்போது மிகப் பிரபலம். அரசியல், நாட்டு நடப்பு, சினிமா எனப் பல விஷயங்கள் சைக்கிள் கடை பெஞ்ச்களில் எப்போதும் எதிரொலிக்கும்.

கவுண்டமணி செந்தில் தொடங்கி, வடிவேலு பார்த்திபன் காம்போ வரை வாடகை சைக்கிள் கடைகளை மையமாக வைத்து திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றதைப் பலரும் ரசித்திருக்கலாம். ‘ஆல் இன் அழகு ராஜா சைக்கிள் கடை’ அமைத்து திரைப்படங்களில் கவுண்டமணி அரங்கேற்றிய காமெடி காட்சிகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா என்ன?

அக்காலத்தில் குடும்ப மருத்துவர்களைப் போலவே, குடும்ப சைக்கிள் கடைக்காரர்களும் புகழ் பெற்று விளங்கினர். மிதிவண்டியால் பலரது உடல்நிலை சீராக இருந்ததற்கு சைக்கிள் கடை உரிமையாளர்களும் மறைமுக காரணம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் போன்ற தொற்றா நோய்களைப் பற்றி வாடகை சைக்கிள் காலத்தில் யாரும் கவலைப்பட்டிருக்கச் சாத்தியமில்லை.

சிறார்களின் முக்கிய பொழுதுபோக்கு

பல இடங்களைக் கற்பனை செய்து சைக்கிள் ஓட்டுவது, 90ஸ் காலகட்டத்துச் சிறார்களின் முக்கிய பொழுதுபோக்குகளில் ஒன்று! இன்றைக்குப் பல ஆயிரம் செலவழித்து வீட்டுக்கு வீடு புதிது புதிதாகப் பல மாதிரிகளில், டிசைன்களில் வாங்கப்படும் சின்ன சைக்கிள்கள், அதன் வர்ண வாசம் கூட காயாமல் அப்படியே மூலையில் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், 90களில் ஏறத்தாழ 90 சதவீதமானவர்களுக்குச் சொந்தமாகச் சின்ன சைக்கிள் இருக்காது. புதிதாக வாங்கித் தருவது பற்றி பேச்சே அப்போது கிடையாது. அப்படியானவர்களின் சைக்கிள் மிதிக்கும் ஆசைகளைத் தீர்த்தவை வாடகை சைக்கிள்கள் கடைகளே!

ஐம்பது காசுகள் தான் ஒரு மணி நேர வாடகைப் பணம். அதைக் கொண்டு போய்க் கொடுத்தால் கூட சைக்கிள்கார அண்ணன் மனம் வைக்க வேண்டும். ஏதோ ஒரு குட்டி சைக்கிளைத் திடீரெனத் தருவார், ஒரு மணி நேரம்தான் என்ற அன்பான கெடுபிடியுடன்! அந்த குட்டி சைக்கிளை அப்படியே அவர் பார்வை விலகும் தூரம் வரை தள்ளியபடியே சென்று பிறகு லாவகமாகக் குரங்கு பெடல் அடித்து அப்படியே ஒரு காலை அந்தப்புறமாக ஸ்டைலாக போட்டு சீட்டில் உட்கார்ந்து நிமிரும் போது கிடைக்கும் சுகம் இருக்கிறதே... அதற்கு இணை வேறெதுவும் கிடையாது.

சைக்கிள் பெடல்களை லாவகமாக மிதித்து, அப்படியும் இப்படியும் சாய்ந்து தெருக்களில் அலையும் ஒவ்வொரு விநாடியும் மகிழ்ச்சி ஊற்றுகள்! இலக்கே இல்லாமல் எல்லாத் தெருக்களிலும் அலையும் சுகத்தை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x