Published : 15 Feb 2023 08:48 PM
Last Updated : 15 Feb 2023 08:48 PM

உங்களுக்கு போரடித்தால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்... ஏன்?

'boredom' எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு ஆன்லைன் மெரியம் வெப்ஸடர் அகராதியில் இப்படி விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, "எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாததால் அமைதியற்று சோர்வுடன் இருத்தல்" என்று அர்த்தம் கூறுகிறது. அகராதி இருக்கட்டும், இலக்கியவாதி டால்ஸ்டாய் என்னச் சொல்கிறார் என்று பார்த்தால் தத்துவார்த்தமாக "சலிப்பு நிலை என்பது ஆசைகளின் ஆசை" என்ற ஆழ்ந்து கூறியிருக்கிறார்.

நாம் வாழ்க்கையில் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த தீர்வு எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும். எனது தோழியின் 13 வயது மகள் என்னிடம் அதிகம் பேசிய வார்த்தைகளே போர் அடிக்குது என்பதாகத்தான் இருக்கும். டிவி பார்த்துக் கொண்டிருப்பார், படித்துக் கொண்டிருப்பார், இல்லை ஏதோ விளையாடிக் கொண்டிருப்பார். இருப்பினும் திடீரென ஒருமுறையாவது இந்த வார்த்தையை சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். அது என்ன போர் அடிக்குது என்று நானும் யோசித்து அவரிடமும் கேட்டும் ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால், அண்மையில் படிக்க நேர்ந்த கட்டுரை ஒன்று போரடித்தல் பற்றியும் அதன் பின்னர் இருக்கும் உளவியல் விஷயங்கள் பற்றியும் புரிந்துகொள்ள உதவியது.

‘போர் அடிக்கிறதா? - அப்படியென்றால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்’ என்கிறார் உளவியல் நிபுணர் ஒருவர். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் சிஎம்ஹெச்எஸ் என்று பிரபலமாக அறியப்படும் மனநல சேவை மையத்தின் உளவியல் நிபுணராக இருக்கிறார் வாசிம் கக்ரூ. அவர் எழுதிய கட்டுரை ஒன்று 'போர்டம்' எனப்படும் சலிப்புநிலை தொடர்பாக ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

அவருடைய கட்டுரையிலிருந்து... - நாம் ஓர் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். துரித உணவு, துரித பயணம் என எல்லாமே இங்கே துரிதமாக நடந்துவிட வேண்டும். நீங்கள் உங்களுடைய வேலையை வேகவேகமாக செய்யாவிட்டால் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் சலிப்பில் இருக்கிறீர்கள் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். உங்களை நீங்களே எப்படி கணிக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்களேன். உங்களது எலக்ட்ரானிக் உபகரணம் ஏதேனும் திடீரென வேலை செய்யாவிட்டால் உங்களுக்கு சலிப்பு வந்துவிடும். உங்கள் ப்ரின்டர் மெதுவாக ப்ரின்ட் செய்வதுகூட உங்களுக்கு சலிப்பைத் தரும். உங்கள் இணைய இணைப்பு சற்று திக்கித் திணறினால் போர் அடித்துவிடும்.

இங்கே முதலாளித்துவம் சலிப்புணர்வை ஒரு பாவச் செயலாக மாற்றியிருக்கிறது. அந்த கற்பிதத்தை திணித்து அவர்கள் தேவையற்ற பொருட்களை சந்தையில் விற்கின்றனர். உண்மையில் அவையெல்லாம் நம் சலிப்புணர்வைக் கொல்ல முக்கியமானதே அல்ல. 2000-ஆம் ஆண்டு தொடக்கத்தில் ‘இணைய வேகம் போதவில்லை’ என்ற பேச்சு எழுந்தது. விஞ்ஞானிகள் ஆய்வுகளை ஆரம்பித்தனர். அதன்பின்னர் 2ஜி வந்தது. அப்புறம் 3ஜி, 4ஜி வந்தது. இப்போது 5ஜி வந்துள்ளது. இனியும் ஒரு தருணம் வரும் அப்போது நமக்கு 5ஜி வேகம் சலிப்பூட்டும். ஏனெனில் நம் மனங்கள் அப்படி நம்புவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. வேகம் நல்லது. சலிப்பு மோசமானது மட்டுமல்ல, பாவமானது என்று நம்பவைக்கப்பட்டுள்ளோம்.

போரடித்தல் என்றால் என்ன? - 'boredom' எனப்படும் ஆங்கில வார்த்தைக்கு ஆன்லைன் மெரியம் வெப்ஸடர் அகராதியில் இப்படி விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இல்லாததால் அமைதியற்று சோர்வுடன் இருத்தல்" என்று அர்த்தம் கூறுகிறது. அகராதி இருக்கட்டும், இலக்கியவாதி டால்ஸ்டாய் என்னச் சொல்கிறார் என்று பார்த்தால் தத்துவார்த்தமாக "சலிப்பு நிலை என்பது ஆசைகளின் ஆசை" என்ற ஆழ்ந்து கூறியிருக்கிறார்.

உண்மையில் சலிப்பு என்பது ஓர் உணர்வு. அது ஒருவருக்கு ஏதோ ஒரு புள்ளியில், தான் ஈடுபட்டுள்ள செயலின் மீது நாட்டமில்லாமல் போகும் உணர்வு. ஒரு நபர் தான் மேற்கொண்டுள்ள செயலால் உணர்வுபூர்வமாக, உளபூர்வமாக அழுத்தமடைந்து ஒரு குறிப்பிட்டச் சூழ்நிலையில் அதன் மீது நாட்டமின்றி இருப்பார். சலிப்பு நிலை என்பதையும் சலிப்பையே பண்பாகக் கொண்டிருத்தலையும் பிரித்துப் பார்க்க வேண்டும். சலிப்புணர்வு ஏதோ ஒரு தருணத்தில் ஏற்படக்கூடியது. ஆனால், சலிப்பே பண்பாக இருப்பது அந்த நபரின் ஏற்புத்திறன் சார்ந்தது. மனச் சோர்வு, மன அழுத்தம், போதை வஸ்துகள் பயன்பாடு சில நேரங்களில் சுயக் கட்டுப்பாடு கூட ஒருவரை சலிப்பு பண்பு கொண்டவராக மாற்றக் கூடும். இதைப் பகுப்பாய்வு செய்து அதற்கேற்ப அணுக வேண்டும்.

போரடித்தலும் மனநலத்திற்கும் என்ன தொடர்பு? - மனிதர்கள் பொதுவாக தங்களுக்கு ஏற்படும் சலிப்புணர்வை போக்க தொலைக்காட்சி, விளையாட்டு என ஏதேனும் வடிகால் வைத்துள்ளனர். சில வாசிப்பார்கள், சிலர் தங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்வார்கள், சிலர் கதை சொல்லிகளாக மாறிவிடுவார்கள். குழந்தைகள் போர் அடித்தால் முன்பெல்லாம் ஓடோடிப்போய் நண்பர்கள், உறவுப் பிள்ளைகளுடன் விளையாடுவார்கள்.

ஆனால் இப்போதெல்லாம் எல்லா வயதினரும் போரடித்தலில் இருந்து தப்பிக்க நாடுவது எலக்ட்ரானிக் உபகரணங்கள்தான். சலிப்பில் இருந்து தற்காலிகமாக விடைபெற எண்ணி பல மணி நேரத்தில் இந்த உபகரணங்களுக்கு அடகுவைத்துவிடுகின்றனர் அனேகம் பேர். இதில் வயது வித்தியாசமே இல்லை. யூடியூப் வீடியோக்கள், டிக்டாக், ரீல்ஸ் ஆகியன ஒரு நபரின் நேரத்தை அவரே உணராமல் வாரிக் கொண்டு செல்லும். இப்படி அளவற்ற பிரவுஸிங் அவர்களை ஆசுவாசப்படுத்துகிறதா என்றால் இல்லை. உண்மையில் பல மணி நேர ஆன்லைன் பிரவுஸிங்குக்குப் பிறகு புத்துணர்வு பெற்றவர்கள் யாரும் இருக்க முடியாது. உண்மையில் நீண்ட ஸ்க்ரீன் நேரத்திற்குப் பின்னர் முன்பைவிட சோர்ந்து போனவர்களே அதிகமாக இருப்பார்கள்.

அந்த நேர சலிப்புணர்வைக் கடக்க நாம் செலவழிக்கும் நேரம் வேறு பிரச்சினைகளை நமக்குக் கொண்டுவரும். ஒருகட்டத்தில் செயலில் நாட்டமில்லாமல் சலிப்பு ஏற்படும்போது நம்மைச் சுற்றி ஏதேனும் கேட்ஜட் இல்லாவிட்டால் நாம் பதற்றமடையத் தொடங்குவோம். குழந்தைகளாக இருந்தால் கோபமும், அழுகையும் கொப்பளிக்கும்.

உங்கள் மூளை செயல்பாட்டின் மீட்பர்... - உண்மையில் போர் அடித்தல் என்பது உங்கள் மூளை திறனை மீட்கும் மீட்பர். ஒரு கடுமையான வேலையில் நீங்கள் நீண்ட நேரம் ஈடுபடும்போது மூளை சோர்ந்துபோகும். அந்த வேலையை நீங்கள் முடித்தபின்னர் மூளை பழைய இயல்புக்கு சென்றுவிடும். இந்த டீஃபால்ட் அல்லது ரீசெட்டிங் நிலை தான் சலிப்பு நிலை. அந்த தருணத்தில் மூளையின் பிற பகுதிகள் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது அவை மூளையை இயல்பான சூழலுக்குக் கொண்டுவர ஒரு நெட்வொர்க் போல் இயங்கும். இந்த மீள் நிலையில் இருக்கும்போது மூளையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் நினைவாற்றலை ஒழுங்குபடுத்துதல், இயல்பாக சிந்தித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதுதான் உங்கள் மூளை செயல்பாட்டின் மீட்பர்.

உங்கள் படைப்புத்திறனை ஊக்குவிக்கும்... - அதிக திறன் தேவைப்படும் எந்த செயலையும் நீங்கள் செய்யாதபோது உங்கள் படைப்புத் திறன் ஊக்குவிக்கப்படும். சும்மா இருக்கும்போதுதான் நல்ல கவிதை தோன்றும். சிலர் சொல்வார்கள் குளிக்கும்போதுதான் எனக்கு அந்தப் பிரச்சினைக்கு அபார தீர்வு கிட்டியதென்று. சமூக வகைப்பாடுகளுக்கு உட்பட்ட வேலைகள் அல்லாமல் அர்த்தமற்ற வேலைகளைச் செய்யும்போதுதான் உண்மையில் மனம் அது நாடும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

ஒரு வனாந்திரத்தில் நடக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 5 நிமிடங்கள் நம் மனம் ஒரு மவுனநிலைக்கு பழக்கப்படும். அந்த நிமிடத்திலிருந்து அழுத்தம் குறையும். அதனால் அதன் பின்னர் மனம் இலகுவாகிவிடும். அந்தவேளையில் மூளை தனது நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தேடிவிடும். ஆனால் இந்த அவசர உலகம் நம்மிடம் என்ன சொல்லிவைத்திருக்கிறது என்றால் போர் அடித்தால் அதைப்போக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறது. நிர்பந்திக்கிறது. அதனால் நாம் பொறுமையற்றவர்களாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். அதனால் இந்த சலிப்புணர்வைக் கையாளக் கற்றுக் கொண்டால் அது நம் பொறுமையை அதிகரிக்கும்.

இப்போதுதான் நாம் கட்டுரையின் மிக முக்கியமாக பகுதிக்கு வருகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் சலிப்பை எப்படிக் கையாள்வது என்பதை அறிய முற்படுவோம். உண்மையில் குழந்தைகளை எல்லா நேரமும் துடிப்புடன், மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது பெற்றோரின் கடமையல்ல. குழந்தைகள் தாமாகவே இயல்பில் கற்பனைத் திறனும், ஆர்வமும் மிகுந்தவர்கள். வளரவளர அவர்களுக்கு எந்த விஷயம் சலிப்பைத் தருகிறதோ அதிலிருந்து விடுபட அவர்களே ஒரு தீர்வைப் படைப்பார்கள். ஒருவேளை அந்த சலிப்பை அவர்களால் சகிக்க முடியவில்லை என்று உங்களிடம் குறையாக முன்வைத்தால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உதவி செய்யுங்கள். ஆனால், அவர்களுக்கு எலக்ட்ரானிக் கேட்ஜெட்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் தீர்வாகப் பழக்கப்படுத்தாதீர்கள்.

சிலருக்கு இயல்பிலேயே மன அழுத்தம், பதற்றம், பயம் இருக்கலாம். அவர்களுக்கு சலிப்பு தருணங்கள் அசவுகரியத்தை ஏற்படுத்தும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டும் தொழில்முறை உளவியல் நிபுணர்களை அணுகி அவர்களுக்கு உதவி செய்யலாம்.

ஆதலால் போரடித்தால் கவலைப்படாதீர்கள். அது நம் வாழ்வின் ஒரு பகுதி. அதைக் கழித்துவிட முற்படாதீர்கள். அதை வெறுக்காதீர்கள். மாறாக, அதை உங்களை புத்துணர்வு அடையச் செய்யும் வழியாகப் பாருங்கள். உங்கள் மனம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற உதவும் காரணியாக பாருங்கள்.

உறுதுணைக் கட்டுரை: காஷ்மீர் அப்சர்வர் | தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x